Saturday, May 8, 2010

செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன்

தபாலில் வந்த கனத்த உறையைப் பார்த்த உடனேயே புத்தகம் தானென்று புரிந்து விட்டது. அலுப்பாக இருந்தது. கொஞ்சம் ஆயாசமாகக் கூட இருந்தது. ஏற்கனவே விமர்சனத்துக்காக வந்த, இரண்டு நூல்கள் மேஜை மேல் காத்திருப்பது நினைவுக்கு வர, கொஞ்சம் தயக்கத்துடன் தான் உறையைப் பிரித்தாள்.பொத்தென்று ஒரு கடிதம் கீழே விழுந்தது. ஸ்ரீமதி கமலாதேவி அரவிந்தன், எனத் தொடங்கும், மலையாளத்தில் ஒரு கடிதம். மலையாளிகளிடமிருந்து சற்றும் எதிர்பாரா விளி. கமலம் தான் மலையாளிகட்கு பாந்தமான விளி. தப்பித்தவறி தான் யாரேனும் கமலாதேவி என்று அழைப்பார்கள். அப்படியே அழைத்தாலும், அவளது மலையாள விமர்சனங்கள், அல்லது அவளது, மலையாள ஆக்கங்கள், பற்றித் தான் பேசுவார்களே தவிர, மருந்துக்குகூட இவள் எழுதிய தமிழ் படைப்புக்கள் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் வானொலியில் வரும் நாடகங்களைப்பற்றி, மட்டும் சிலர் சிலாகிப்பார்கள். "காரில் போய்க்கொண்டிருந்தபோது, ரேடியோவில் நின்டெ பெயர் கேட்டேன். அதென்ன, இப்பொழுது மலையாளம் எழுதுவதை நிறுத்திவிட்டாயா?” என்பார்கள். இல்லையென்றால், "ஹ்ம்ம், கமலத்தினு தமிழ் தான் இஷ்டம் போலும்," என்பார்கள். இப்படிப்பட்ட அனுபவத்தில், கேரளத்திலிருந்து, வந்த ஒரு மலையாள எழுத்தாளரின் இரண்டு பக்க நீண்ட கடிதம் படித்தபோது, ஆச்சரியமான ஆச்சரியம். மலையாள எழுத்தாளர் ஒருவர் இவளது தமிழ் எழுத்துக்கள் பற்றிப் பேசுவது இதுதான் முதல் முறை.அண்மைய தமிழ் முரசில் பிரசுரமான கதை தொட்டும், 2 ஆண்டுகட்கு முன்பு எழுதிய சிறுகதை, ம‌ற்றும் கடந்த ஆண்டு பிரசுரம் கண்ட நுகத்தடி, நுவல் போன்ற இவளது கதைகளைப் பற்றிய அவரது விஸ்தீரணம் இருந்த‌து. அதிலும் குறிப்பாக ஒரு சிறுகதை. அதைப்பற்றி, இலங்கை எழுத்தாளர் ஒருவரின் கோபத்துக்கும், இவரது வரிகட்கும் தான் எத்தனை வேறுபாடு. "ஆண்களின் மன விகாரம், குறிப்பிட்ட ஒரு வயதுக்குமேல் இப்படியெல்லாம் கூட இருக்கும் என்பதை எப்படி, ஒரு பெண்ணால் இவ்வளவு துல்லியமாக எழுதமுடிந்தது? ரசித்துப்படித்தேன்,” என்றும் இன்னும் கூட ---‍‍‍‍ கடிதத்தை, படிக்கப் படிக்க ஏனோ மந்திர இலையால் நீர் தெளித்தாற்போல் மனசு மலர்ந்து போனது.எதிர்பார்த்தாற்போலவே மறுநாளே அவரது தொலைபேசி அழைப்பு. "ஹலோ, கமலம்" என்ற விளியில் அப்படி ஒரு செளஜன்யம். என்னமோ காலம் காலமாய் பழகினாற்போல் அப்படி ஒரு சரளம். வயதில் பெரியவர், எப்படி அவரோடு சரளமாக உரையாடுவது, என்ற தயக்கத்தையே அவரது பேச்சு முறியடித்துவிட்டது. கேரளத்திலிருந்து அடிக்கடி சிங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டுக்கு வந்து போகும் இந்த எழுத்தாளர். எப்பொழுது சிங்கை வந்தாலும், த‌மிழ்முரசில் அவளது கதைகளைப்படித்து மனைவி, மகளிடம் சிலாகிப்பது வழக்கமாம். அவர் படித்த இவளது 4 கதைகளை பற்றியும், இண்டு இடுக்கு விடாமல் பேசினார்.சாஹித்யத்தில் எப்பொழுதுமே சொற்கட்டும், செய்நேர்த்தியும் தான் எனக்கு முக்கியம் என்றிவள் கூறிட, கமலத்தின் நுவல் கதையில் அழகியல் யதார்த்தம் தானே சரடாய் இழைகிறது என்றபோது, அந்த துல்லியம், அந்த தீட்சண்யம், இவளைத் திகைக்க வைத்தது. உரையாடல் மிகச் சரளமாக நீண்டது. மலையாள இலக்கியத்தில் இன்றைய நிலை, வந்துபோன மாற்றங்கள், ஒரு படைப்பாளியாக அவரது எதிர்பார்ப்பு, எனப் பல விஷயங்கள் பற்றிப் பேசினார்.பிறகுதான் இவளது முகவரி எங்கிருந்து கிடைத்தது? என்று சாவதானமாகக் கேட்டாள்.அங்கு தான் விசேஷம். தமிழில் அவரே எழுதிய கவிதையை, சிங்கை கவிமாலையில் வாசிக்கச் சென்றபோது கவிஞர் பாத்தேறல் இளமாறனிடம் இவளைப்பற்றி விசாரிக்க, கவிஞர் இளமாறன் முகவரி கொடுத்துள்ளார். தமிழில் அவர் கவிதையும் எழுதுவார் என்றறிந்தபோது, மலையாளிகளின் தொப்பியில் இன்னும் கூட ஒரு சிறகு முளைத்துவிட்டது போல் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.”கமலம், நாம் பார்க்கணுமே, மனைவியும் மகளும் கூட பார்க்க ஆசைப்படுகிறார்கள்,” என்றார்.நிச்சயம் சந்திப்போம் சார், என்று சொல்லும்போதே வேலை வந்து விட்டது. மறுநாள் பயணம். நிற்க நிமிரக்கூட நேரமில்லை. இந்த முறை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் என்று மகள் விரும்பியதாலும், மாப்பிள்ளைக்கும் அமெரிக்க வாழ்க்கையிலிருந்து, மலேசியா பற்றிய ஆர்வத்தாலும், மறுநாள் காலையிலேயே குடும்பத்தோடு விமானத்தில் பயணம். மலேசியாவை நினைக்கும்போதே ஏனோ மனசுக்குள் மத்தாப்பு பறக்கும். உற்றம், சுற்றம் என திருமணங்கள், குடும்ப விசேஷங்கள் என அடிக்கடி வந்து போகும் ஊர்தான் என்றாலும், இம்முறை முழுக்க முழுக்க, குடும்பம், குழந்தைகளோடே பொழுது பறந்தது.ஹோட்டல் அறையிலேயே சிரமப்பரிகாரம். பிறகு சுவையான வெஸ்டர்ன் சைவ உணவுக்குப்பிறகு, ட்வின் டவரில் ஷொப்பிங், என மகளும் மாப்பிள்ளையும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள். மறுநாள் காலையிலேயே பத்துமலை முருகன் தரிசனம். 10 வருடங்களுக்குப்பிறகு, பத்துமலை படிக்கட்டில் ஏறும்போதே, இனம்புரியா சிலிர்ப்பு. குடைந்த மலையும், அதற்குள் பிரகாரமும், குரங்குகளின் சேஷ்டையும் பார்த்து மாப்பிள்ளை ரசித்து ரசித்து புகைப்படம் எடுக்க, கணவர் படியேற சிரமம், என்று கீழேயே வள்ளுவர் கோட்டத்திலேயே சுற்றிப்பார்த்து பக்திப்பூஷணமாய் நிற்க, இவளானால் கீழே இறங்கியதும் முதல்வேலையாய், 2 அருமையான தமிழ்ப் புத்தகங்களை வாங்கினாள். கல் பதித்த கணபதியின் ஸ்தூபம், அம்பிகையின் கீ செயின், என வாங்கியதோடு நிற்கவில்லை. மறுநாளும் கணபதிகோயில், ராஜ ராஜேஸ்வரி கோயில், என தரிசித்ததோடு அலுப்பில் ஹோட்டல் அறையில் கணவரும் இவளும் அடைக்கலமாக, மகளும் மாப்பிள்ளையும் மீண்டும் ஷொப்பிங் என, சுற்றி அலைய,பொழுதே போதவில்லை. தாய் மண்ணே வணக்கம் என்று பாடாத குறைதான்.விமானத்தில் மீண்டு சிங்கை வந்தால், வரிசையாக நிகழ்வுகள். மீண்டும் பயணங்கள் இவள் எதிர்பாராதது. அடுத்தடுத்து, பினாங்கு, சிரம்பான், ரவாங் எனத் தொடர்ந்த பயணங்கள், என்னமோ நிமித்தம்போல் அமைந்துவிட்டது. இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு. பயண அலுப்பும், உடல் சோர்வுமாய் தொலைபேசியை எடுத்தால், ”ஹலோ கமலம்! எந்தா மனசிலாயில்லே?” என்று கேட்க, உண்மையிலேயே அவளுக்குப்புரியவில்லை. ஒரு நிமிஷம் ஞாபகத்தை மீட்டெடுக்க அவள் முயற்சிக்க, அடுத்தகணம் ஓ, ஓர்மை வந்துவிட்டது. கேரள எழுத்தாளர். சிங்கையில் கவிமாலையில் தமிழ்க்கவிதை பாடிய மலையாள எழுத்தாளர். அடடா, எனும் குற்ற உணர்வோடு, “சார், ஞான், ஞானே மதியம் அழைக்கிறேன் சார்” என்று சொல்லி முடிக்கவில்லை.”விமான நிலையத்திலிருந்து அழைக்கிறேன் கமலம். இன்று ஞான் கேரளா திரும்புகிறேன்". சொரேல் என்றாகிவிட்டது. “சார், ஞான் சிங்கையிலேயே இல்லை. நேற்றிரவுதான் திரும்பினேன்,” என்று பரிதவிக்க, பலமுறை அழைத்தேன், மனைவியும் மகளும் கூட பேச ஆசைப்பட்டார்கள். பரவாயில்லை. ஞான் மீண்டும் ஆகஸ்டில் வருவேன். அப்பொழுதாவது பார்க்கலாம் தானே?”என்ன சொல்ல, என்ன பேச? மனசு பட்ட பாடு, பேசவே முடியவில்லை. க்‌ஷமிக்கனும் சார், i am sorry, really sorry என்று பலமுறை மன்னிப்பு கேட்டும் மனசு ஆறவேயில்லை. ”அடுத்த முறை வரும்போது ஞானே கணவரோடு வந்து தங்களை சந்திக்கிறேன் சார்,” என்று சொல்லும்போதே நா தழுதழுத்தது.”கமலம், நாம் சாஹித்யக்காரர் அல்லவா? அதிலும் நாடுவிட்டு நாடு வந்த இடத்தில், எங்களின் மலையாளிப் பெண், தமிழ் சாஹித்யமும் செய்கிறாள் என்றபோது, பார்க்கும் ஆவல், சந்திக்கும் ஆவல், கமலத்தால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா கமலம்? என்று கேட்டபோது இவளுக்கு கண்கள் அரும்பிவிட்டது. முதன்முதலாக ஒரு மலையாள எழுத்தாளரை சந்திக்க முடியாமல் போனதற்கு மனம் கலங்கியது. இவ்வளவும் பேசியபின்னரும்.”என்னுடைய சிறுகதைத் தொகுப்பை படித்துப் பார்த்தீர்களா?“ என்ற கேள்வியை அவர் கேட்கவேயில்லை. என்ன நம்பிக்கை. மேஜைமேல் கிடந்த புத்தகத்தை கையில் எடுத்தபோதே, உடனே படிக்கவேண்டும்போல் தோன்றியது.ஓர்ம்மகளுடெ பூரக்காலம், எழுதியவர், செறுத்துறுத்தி உண்ணிகிருஷ்ணன், படித்துமுடித்தபோதே மலையாள இதழுக்கு எழுத அமர்ந்து விட்டாள். ஆனால், ஆகஸ்டில் ஒரு சிறுகதை தமிழ்முரசுக்கு அனுப்பவேண்டுமே என்ற பொறுப்பான கவலையும் பிறந்தது.
Nanri Valllinam:
http://www.vallinam.com.my/issue17/column2.html