Monday, March 15, 2010

நேர்காணல்: கடலோடி நரசையா





நேர்காணல்: "வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"
கடலோடி நரசையா


தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அப்பல நரசய்யா தமிழிலக்கியத்துக்குப் புதியவரல்ல. இவரது முதல் நூலான கடலோடி வாசகர்வட்டம் லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தியால் வெளியிடப்பட்டு, கடலோடி நரசையா என்றே அறியப்படுகிறார். இலக்கிய ஜாம்பவான் சிட்டி அவர்களின் தமக்கை மகனான நரசையா, இலக்கிய ஆர்வம், இவரது பாரம்பரியத்திலேயே உண்டு என்கிறார். ஆனந்தவிகடனில் வெளிவந்த இவரது முத்திரைக்கதைகள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுகதைக்காகவும், இவரது வரலாற்று நூல்களுக்காகவும், மூன்றுமுறை மாநில பரிசுகளைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதும் திரு. நரசையா அவர்கள், அண்மையில் சிங்கையின் தங்கமுனை பேனா விருதின் போட்டிக்கு, சிறுகதைத் தேர்வாளராக வருகை புரிந்திருந்தார். நேர்காணலுக்காக அவரை சந்தித்தபோது, மிக மென்மையாக, எந்த பாசாங்குமே இல்லாமல், அவர் எடுத்தியம்பிய கருத்துக்கள் சுவாரஸ்யமானவை. சிந்திக்க வைப்பவை. தன்னுடைய பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கேள்வி: உங்களுள் ஒரு கலைஞன் அல்லது ஒரு இலக்கியவாதி உருவான அந்த கால கட்டத்தைச் சொல்லுங்கள்?

ப‌தில்: நான் பள்ளியில் படிக்கையிலேயே எழுதும் ஆர்வம் உண்டானது. அப்போது எங்கள் மூத்த சகோதரர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே “விநாயகா” என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு சிட்டி அவர்கள் உந்துத‌லும் இருந்தது. ஆனால் அவ‌ர் அப்போது ஆர்மியில் சேர்ந்து விட்டதால், நானும் அண்ணா சிட்டியும் (ஒரிஜினல் சிட்டி இவ‌ர் தான். அப்பெயரை மாமா தனது புனைப் பெயராக எடுத்துக் கொண்டார்) தம்பி கோவிந்தனும் சேர்ந்து அரியலூரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை அதே பெயரில் 1945 ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம். ஆகையால் இதுதான் ஆரம்பம் என்று சொல்லலாம்.

கேள்வி: மலையாளியான நான் தமிழ் எழுத முயன்றபோது மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். மலையாளத்திலிருந்து தமிழுக்குச் சொற்களை வடிவமைக்க, தமிழர்களின் பேச்சை ஒலிநாடவில் பதிவு செய்து கொண்டும், மனனம் செய்தெல்லாம் எழுத முயன்றிருக்கிறேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தாங்களுக்கு அப்படி ஏதும் சிரமமிருந்ததா? எப்படி தமிழில் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது? தெலுங்கில் ஏதும் எழுதியிருக்கிறீர்களா?

ப‌தில்: சொல்ல‌வே கூச்சப்படுவ‌து எனது தாய் மொழியில் எழுதப்படிக்கத் தெரியாது என்பது தான்! சிறு வய‌திலேயே தமிழ் நாட்டிற்கு வ‌ந்து விட்டோம். திருச்சியில் ஆங்கிலத்தில் பயின்றோம். பின்ன‌ர் அரியலூரில் ஆங்கிலப் ப‌ள்ளி இல்லாததால் தமிழ் கற்றோம். எம் தந்தையாருக்குத் தமிழ் பற்றிருந்தது. ஆகையால் ஆரம்ப காலத்தில் தமிழ் கற்க முடிந்தது. தெலுங்கில் எழுதிய‌தில்லை. பின்னர் கடற்படையில் சேர்ந்த பிறகு (1949) தமிழ் தாக்கமே இல்லாதிருந்தது. ஆகையால் தமிழில் எழுதுவ‌து மிக சிரமமாகத்தான் இருந்தது. ஆங்கில‌த்தில் வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழி பெயர்த்து தான் எழுத முடிந்தது. ஆகையால் ஒரு கதை எழுதவே சில நாட்களாகும்!

கேள்வி: தாங்கள் முதன்முதலாக எழுதிய சிறுகதை எது? முதன்முதலாக எழுதிய நாவல் எது?

ப‌தில்: அப்படி மிக ஆலோசித்துச் ச‌ந்தேகத்துடன் கோவிந்த ஜெய‌ந்தி என்ற கப்பலில் பணி புரிகையில் 'தேய்பிறை' என்ற ஒரு சிறுகதை எழுதி (அப்போது அக்கப்பல் கல்கத்தா துறை முகத்தில் இருந்தது) ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவிட்டு கப்பலில் கடலூர் சென்று விட்டேன். சில நாட்களில் விகட‌னிலிருந்து ஒரு கடிதம் வந்தது. வருத்த‌ம் தெரிவிப்பதாக இருக்கும் என‌ எண்ணித் திறந்து பார்த்தால் அக்க‌தை முத்திரைக் கதையாக‌ ஏற்றுக் கொள்ளப்ப‌ட்டதாகத் தக‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து!

கேள்வி: நரசையா என்றாலே, ஆனந்தவிகடன் எனுமளவுக்கு தங்களின் பல முத்திரைக்கதைகள் ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். ஏன் சார் விகடனுக்கு மட்டும் அந்த முக்கியத்துவம்?

ப‌தில்: என‌க்குத் தமிழ் சரியாகத் தெரியாத நிலையிலும் கதைகளின் தரத்தைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்னை ஊக்குவித்ததை மறக்க இயலாது. அவ்வப்போது பாலசுப்பிரமணியன் பேசுகையில் சிலாகிப்பார். தவிரவும் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் பேசி முடிவெடுப்பார். விகடன் பவழவிழாவின் போது ‘விகடனும் நானும்’ என்ற தலைப்பில் என்னை எழுதச் சொன்னதும் மறக்க முடியாத நினைவு!

கேள்வி: இன்று எழுதப்படும் சமகாலப் படைப்புக்கள் கூட மறு பரிசீலனைக்குட்படுத்தும் நிலையில் தான் உள்ளது எனும் சில விமர்சகர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

ப‌தில்: மாறி வரும் உலக நிலையில் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றன‌. ஆகையால் விமர்சகர்களும், முக்கியமாக இணைய தளம் மூலமாக பல மேலை நாட்டு ஆய்வு முறைகளைத் தெரிந்து அவ‌ர்கள் கருத்து சொல்லும் வாய்ப்பு பெற்றவர்களாக‌ உள்ளனர். ஆகையால் அவர்கள் கருத்துகளை உதறிவிட முடியாது!

கேள்வி: இப்போது இலக்கியத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

ப‌தில்: சமீப காலமாகவே எனது ஈர்ப்பு சரித்திர ஆய்வு பக்கமே திரும்பியுள்ள‌து. மதராசபட்டினம், ஆலவாய் மற்றும் கடல் வழி வணிகம் முதலிய நூல்கள் ந‌ல்ல வெற்றியும் வரவேற்பும் பெற்றுள்ளதாலும் அதே போல எனது ஆங்கில நூல்களும் வரவேற்பு பெற்றமையால், அங்கே தான் கவனத்தைத் திருப்பியுள்ளேன்.

கேள்வி‍: டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செக்காவ் போன்ற மகத்தான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை, தமிழில் நம்மால் உருவாக்க முடிந்ததே இல்லை எனும் குற்றசாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ப‌தில்: அப்படிச் சொல்லமுடியாது. ஆனாலும் வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது! விதி விலக்காக‌ ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இளையத் தலைமுறை நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால் வெளிக்கொணர பத்திரிகைகள் முன்வரவேண்டும்.

கேள்வி: இலக்கியத்துக்கு அடிப்படை என்பது வெறும் மொழியலங்காரம் மட்டுமல்ல, உத்தி, உள்ளீடு, உருவகம், எல்லாவற்றுக்கும் மேலாக அழகியல் இருத்தல் எனப் பல தகுதிகளை மலையாளத்தில் எதிர்பார்க்கிறோம்? ஒப்புவமையோடு கூடிய நடையழகை மலையாளத்தில் பெரிதும் வரவேற்கிறோம். ஆனால் தமிழில் இன்னும் இந்த உத்தி, பரவலாக்கப்படவில்லையே... ஏன்?

ப‌தில்: கேள்வியிலேயே பதில் உள்ளது! தமிழ் நாட்டில் இன்னும் அந்த எதிர்பார்ப்பும் இல்லை. விழிப்புண‌ர்வும் வரவில்லை என்றே கருதுகிறேன். தமிழ் நாட்டு அரசியலும் ஒரு காரணம். தொலைக்காட்சியில் அழுத கண்களுடன் தொடர்களைப் பார்ப்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளும் அவர்களைப் போற்றுபவர்களையே ஏற்றுக் கொள்வதால் சாதாரண எழுத்தாளனுக்கு சமூகத்தில் அந்தஸ்து குறைந்து விடுகிறது!

கேள்வி: உலகளாவிய தரத்தில் தமிழில் இன்னும் கதைகள் எழுதப்படவே இல்லை எனும் சில விமர்சகர்களின் அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியாயின் இதுவரை நாம் கொண்டாடி வந்த எழுத்துக்களை எப்படி நிர்ணயிப்பது?

ப‌தில்: ந‌ன்றாக எழுதப்ப‌ட்ட நாட்களில், சிறந்த எழுத்துகள் உண்டாயின‌. ஆனால் அப்போது அவ்வாறு எழுதியவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தாக்கத்தில் தான் எழுதி வ‌ந்தனர் என்பது தான் உண்மை. (கு. ப. ரா, சிட்டி, பிச்ச‌மூர்த்தி, புதுமைப்பித்தன்) பின்னர் சரியான‌ கவனிப்பு இல்லாததால் எழுத்தாள‌ர்கள் ஏழ்மையில் வாடவேண்டியதாயிற்று. தற்காலத்தில் உலகத்தரத்தில் எழுதக்கூடியவர்கள் உள்ளன‌ர் ஆனால் ஆதரிப்பார் எவ‌ருமில்லை. அவ‌ர்கள் கருத்துக்களை இணையத் தள‌த்தில் சொல்ல மட்டும்தான் அவ‌ர்களால் முடிகிறது. நிர்ணயிக்கவே வல்லுன‌ர்க‌ள் இல்லாத போது கொண்டாடி வந்ததை பற்றிச் சொல்ல இயலுமா?

கேள்வி: ஒரு தமிழ் எழுத்தாளராக நிறைவான எழுத்தை எழுதிவிட்டேன், எனும் ஆத்ம திருப்தியைத் தந்த எழுத்து என்று தாங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் எழுத்து எது?

ப‌தில்: முதலில் என்னைத் தமிழுல‌கத்திற்கு அறிமுக‌ப்படுத்திய‌து 'கடலோடி' எனும் அந்த பயணக்கட்டுரை நூல் தான். பின்னர் சில சிறுகதைகள். தேய்பிறை, திருப்தி, ஜகத்தினை அழித்திடுவோம், சொல்லொணாப்பேறு, ஒளியின் வழியில், அவசரம், ஏக்கங்கள் போன்ற கதைகள். கடந்த 45 வருடங்களாக, இந்த இலக்கியப் பயணம் எனக்கு நிறைவையே தந்துள்ளது. சமீப காலத்தில்ஆய்வு நூல்களான ஆலவாயும் மதராசபட்டினமும்; அவைகளுக்காக நான் மேற்கொண்ட ஆய்வுகளும் பெரியவர் ஐராவதத்துடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களும் மனத்தில் பதிந்து விட்டவை

கேள்வி: உலக இலக்கியங்களில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

ப‌தில்: Ernest Hemingway, Somerset Maugham ம‌ற்றும் P. G. Wodehouse.

கேள்வி: எப்படி இருந்தால் அது எழுத்து? அல்லது இலக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப‌தில்: படிக்கும் போதே சிந்திக்கத்தூண்டவேண்டும்; எழுத்தாளரைப் பார்க்கவேண்டும் என்று தோன்றவேண்டும்; வார்த்தைகளுக்கு நடுவில் ஏதோ ம‌ற்றொரு வார்த்தை இருப்ப‌து போல‌த் தோன்றவேண்டும்; கண்களில் நீர்மல்கவேண்டும் அதாவ‌து நாம் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகவேண்டும்.

கேள்வி: இரண்டு தலைமுறை எழுத்தாளர்களோடு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் இன்றைய இலக்கியத்தின் அசுர வளர்ச்சியில், பின் நவீனத்துவ எழுத்து பெற்றுள்ள உச்சத்தை சமூகக்கதைகளும் பெற்றுள்ளதாக நினைக்கிறீர்களா?

ப‌தில்: எழுத்துகள் அப்போதைய சமூகத்தினைத் தான் பிரதிபலிக்கின்றது. ஆகையால் சுற்றுச் சூழலால் பெரிதும் எழுத்தாளன் பாதிக்கப்ப‌டுவது உண்மை. மாறிவரும் கோட்பாடுகளும், foreign literary exposure முதலானவும் வேறுபாடுகளைக் கொணர்கின்றன. சென்ற தலைமுறையிலும் இப்போதைய தலை முறையிலும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் தான் நவீனத்துவம் முத‌லான‌க் கருத்துகளைப் பற்றிப் பேசுகிறார்கள். மேலை நாட்டு இலக்கிய வளர்ச்சியை அப்படியே தமிழில் கொண்டுவர முடியாது என்பது எனது கருத்து. பழமையிலிருந்து நவீனத்துவமும், பின் நவீனத்துவமும் அங்கு வளர்ந்தன‌. நாகரீக‌ வளர்ச்சியில் நாம் மறுபடியும் சக்கரத்தைக் கண்டுபிடிக்க‌ முயல்வது போலத்தான் அவர்களது வளர்ச்சியை நாம் தமிழில் கொணர முயல்வது. தமிழில் அன்று உரு மாற்றி எழுதியவர்கள் கு. ப. ரா., புதுமைப்பித்தன் முதலியோர். ஒரு புரட்சியையே உண்டாக்கி ஜெயகாந்தன் காட்டினார். இன்றையச் ச‌மூகம் மேலை நாட்டு பாதிப்பில் உள்ளதால் அசுர வளர்ச்சி தெரிகிறது. அதே பிரதிபலிப்பு இலக்கியத்திலும் தெரியாமலில்லை.

கேள்வி: பின் நவீனத்துவ உத்தி, பரிசோதனை முயற்சி போன்ற நவீன இலக்கியத்தில் உங்கள் பங்கு என்ன?

ப‌தில்: எழுத்து உள்ளத்தின் பிரதிபலிப்பு; செய‌ற்கையாகக் கொணர முடியாது. என் எழுத்திலும் முயன்றால் நவீனத்துவத்தையும் பின் நவீனத்துவத்தையும் காணலாம். பார்வையில் தான் உள்ளது. It is only a perception!

கேள்வி: உங்கள் எழுத்துக்கு வரும் எதிர்வினை, அல்லது உங்கள் மேல் வைக்கப்படும் இலக்கிய விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

ப‌தில்: சாதாரணமாக‌ எதிர்வினை எழுதுபவர்களைப் பொறுத்தே எதிர் கொள்வேன். Subjective ஆக இருந்தால் கண்டுக்கொள்வதில்லை. Objective-ஆக இருந்தால் கருத்தை ஏற்றுக் கொள்வேன்.

கேள்வி: மேலை நாட்டு இலக்கியத்தை அடி ஒற்றி, நடையை கொஞ்சம் செப்பிடு வித்தை காட்டி மாற்றி, எழுதும் கதைகள் தான் சில இடங்களில் பேசப்படுகிறது. அப்படியானால் இங்கே சமகால இலக்கியத்தின் பார்வை என்ன?

ப‌தில்: முன்னரே சொன்னது போல் பார்வைதான் காரணம். சமகால இலக்கியத்தில், சமூகப்பார்வை நிறையவே உள்ளது. பல இளைஞர்கள் சிறப்பாகவே எழுதுகின்றனர். முக்கியமாக வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் ந‌ல்ல சேவை செய்கின்றன‌ர். நீங்கள் சொன்ன மாதிரியான‌ எழுத்துக்கள் நிலையானவையல்ல‌; காலத்தில் மறைந்து விடும். ஆகையால் அவற்றைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

கேள்வி: கதையிலிருந்து கதையை வெளியேற்றுவது, வேறும் மோன நிலையிலேயே கதைகள் புனைவது, கதாபாத்திரமோ, நிகழ்வுகளோ, எதுவுமே அற்ற பாழ் வெளியில் கதையைப் பேசவைப்பது என பல கோணங்களில் கதைகள் நம்மிடையே உலா வருகின்றன. இதில் உங்களுக்கு உவப்பான பாணியைப்பற்றி சொல்லுங்களேன்.

ப‌தில்: எழுதும் போது தோன்றும் முறைதான் என்னுடையது. வடக்குவாசலில் 'ஒரு வித்தியாசமான கதை' என்று ஒரு கதை எழுதியிருந்தேன். சில மாறிய கோணங்களில் எழுதுவது எனக்குப் பிடிக்கும்.

கேள்வி: சிங்கப்பூர் இலக்கியம் பற்றி...?

ப‌தில்: போட்டிக்கு வந்த கதைகள் எல்லாமே அறிமுக எழுத்தாளர்களின் கதைகள் தான் என்றறிந்தபோது... இந்த ஆரம்ப எழுத்தாளர்களின் முயற்சியை மதிக்கிறேன்.
சிட்டிமாமா அவர்கள் எழுதிய நூலில் சிங்கை, மலேசிய இலக்கியம் பற்றி அந்நாளிலேயே புகழ்ந்து எழுதியுள்ளார். அனுபவ எழுத்தாளர்கள் இவர்களுக்கு உதவலாம்.


நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (தமிழ், மலயாள எழுத்தாளர் , விமர்சகர், ஆய்வாளர், நாடகாசிரியர்)

நன்றி : - வல்லினம்
http://www.vallinam.com.my

Monday, March 8, 2010

இந்த ஜென்மத்தில்

இந்த ஜென்மத்தில் ?


அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கணவர், கனத்த ஒரு உறையை நீட்டியபோது ஆச்சரியமாக இருந்தது.
.என்ன இது, இவ்வளவு மொத்தமாக இருக்கிறதே? ஏதாவது பார்சலா?
அப்பொழுது மகள் 2 வயதுக்குழந்தை. குழந்தையை கணவரிடம் நீட்டிவிட்டு, அவசரமாகப்பிரித்தால்,
ஸ்வாசமே ஒரு நிமிஷம் நின்றுபோய், பிறகுதான் நிதர்சனம் உறைத்தது.
என்ன? நின்டெ ஸ்க்ரிப்ட் திரும்பிவந்து விட்டதா? என்று கணவர் சர்வ சாதாரணமாகத்தான் கேட்டார்.
அதுவே அவளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.
என்னமோ உலகமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் ,அப்படியே கண்கள் வழி மதகு பொத்துக்கொண்டு வழியத்தொடங்கிவிட்டது.
அப்பொழுதுதான் அவள் வானொலியில் நாடகம் எழுதத்தொடங்கியிருந்தாள்.
அவளது 6 அரை மணி நேர நாடகங்கள் ஒலிபரப்பாகியபின்னர்
தயாரிப்பாளர், ஒரு தொடர்நாடகம் எழுதி அனுப்புமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.
உடனே உற்சாகத்தோடு எழுதி அனுப்பிய நாடகம் தான் திரும்பி வந்திருக்கிறது?
எப்படி திருப்பி அனுப்பலாம்? அனுப்பலாமா? அதுவும் இவளது ஒவ்வொரு நாடகம் ஒலிபரப்பாகும்போதும்
இவளைப்பாராட்டி , 2 வரியாவது எழுதும் தயாரிப்பாளர், இந்த நாடகத்தை மட்டும் எப்படி திருப்பி அனுப்பலாம்?
துக்கம் தாங்கவில்லை.ஸ்க்ரிப்டை நெஞ்சோடணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
போதும், இன்றோடு ஞான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.
இந்த ஜென்மத்தில் இனி சிங்கை வானொலிக்கு மட்டும் ஞான் எழுதவே மாட்டேன், என்று கண்ணீர் சபதம் எடுத்தாள்.
குழந்தை அழுகிறாள், வந்து பால் கொடு, என்று கணவர் அழைக்க, இவளால் மன்னிக்கவே முடியவில்லை.
ம்,,என்றால் அழுகை, ஆ, என்றால் அழுகை, உன்னை எனக்குத்தெரியாதா? என்பதுபோல் கண்வரின் அசட்டையை அவளால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இவளது துக்கம் பற்றி ஒருவார்த்தை ஆறுதலாகப்பேசத்தெரியவில்லை.
இவரெல்லாம் ஒரு கணவரா? கோபம் கோபமாய் வந்தது,
அவள்முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, போய்க் குழந்தைக்கு பால் கொடுத்தாள்.
[அன்றெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது அவ்வளவு முக்கியம்]
பால் குடித்துமுடித்த குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு, இவள் சோகத்தோடே நடமாடினாள்.
இரவு உணவை கணவருக்கு கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடவில்லை.குழந்தையைத் தூங்கப் பண்ணிவிட்டு,
போய்த் தரையில் படுத்துக்கொண்டாள். மீண்டும் ஸ்க்ரிப்டை நெஞ்சோடணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறதே அருமை மனைவிக்கு, உண்மையிலேயே இவள் மீது துளியாவது காதலிருந்திருந்தால்,
உடனே தயாரிப்பாளருக்கு போன் போட்டு,ரெண்டு கேள்வி கேட்கவேண்டாமா? அதுவும் இவள் யார்? வானொலியிலிருந்து அவர்களாகவே
கடிதமனுப்பி எழுதக்கேட்டவர்களாயிற்றே? அப்படியிருக்க எப்படி இவளது ஸ்கரிப்டை திருப்பி அனுப்பலாம்?
அதைவிட வயிற்றெரிச்சல் ,கணவர்--ஹ்ம்ம்--, மணமாகி வந்தபோது இவள் சுமந்து வந்த வெள்ளி{பரிசு}க்கோப்பைகளை ,
மாமா, மாமிக்குக்கூடதெரியாமல், அருமையாக இவர்களின் அறையிலேயே வைத்துக்கொள்ளச்சொல்லி ரசித்தவர்தானே?
எல்லாமே சும்மா!உலகமே பொய், எல்லாமே பொய், என்டெ பார்ய எழுத்துகாரியானு,
என்று மற்றவர்களிடம் சொல்வதுகூட சும்மாதான், இவ்வளவுக்குப் பிறகும் ஞான் ஏன் உயிர் வாழ வேண்டும்?
யாருக்காக வாழவேண்டும்? விக்கி விக்கி அழுதாள். பளிச்சென்று விளக்கு எரிந்தது.
இப்ப எதற்காக அழுகிறாய்? சாப்பிடாமல் கூட என்ன அடம் இது? என்று அருகே வந்த கணவர் கேட்க,
ஞான் எப்படிப் போனால் நிங்ஙளுக்கென்ன? இந்த ஜென்மத்தில் நிங்ஙள் என்னிடம் பேச வேண்டாம், என்று
சொல்லி முடிக்கவில்லை, அடுத்தகணம் கண்களில் மின்னல் பறந்தது.கன்னம் அதிர்ந்தது. மணமாகி வந்த பிறகு முதன்முதலாக
கணவரிடம் வாங்கிய முதல் அறை.. அப்படியே, உடைந்து போய் அழுதாள்.
அ. உ என்றால் இது ஒரு வசனம், . இந்த ஜென்மத்தில் பேசவேண்டாமாம். பேசுவேன் இந்த ஜென்மம் முழுக்க ஞான் பேசுவேன்.
நீயும் என்னிடம் பேசித்தான் ஆகவேண்டும் , என்றவர் கோபத்தோடு , இவள் கையிலிருந்த ஸ்க்ரிப்டை பிடுங்கினார்.
பிரித்துப் படித்தார். தயாரிப்பாளரின் கடிதத்தை ஆங்கிலத்தில் சத்தமாகப் படித்தார்.
கதா மாந்தர்களை அருமையாக கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் கடைசி அத்தியாயத்தில்,பக்கங்கள் போதவில்லை.
தொலைக்காட்சிக்கு என்றால் பரவாயில்லை. ஆனால் வானொலிக்கு இது போதாதே, , இறுதி 2 காட்சிகள் மட்டும்
இன்னும் 3 பக்கங்கள் பூர்த்தியாக்கி, உடனே அனுப்பி வைக்கவும்,.என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது..,
அவர் படிக்கப் படிக்க மனசெல்லாம் பரவசமாகிப் போனது. அட, கடைசியில் விஷயம் இதுதானா?
அவசரத்தில் ஸ்க்ரிப்டைத்தான் பார்த்தாளே தவிர தயாரிப்பாளரின் கடிதத்தை இவள் படிக்கவேயில்லை.
கோபம், அழுகை, எல்லாமே போன இடம் தெரியவில்லை..
எதில்தான் பொறுமை. எல்லாமே படபடப்புதான்,இப்படி ஒரு ஸ்டுப்பிட்டை என்டெ தலையில் கட்டினார்களே,
என்று கணவர் போலியாக அலுத்துக்கொள்ள, இவள் வெட்கம் மறந்து கணவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
தகஷணமே கணவரும் இவளை மன்னித்துவிட்டார்.
எல்லாம் சரி,
இதற்குப்பிறகாவது, இந்த ஜென்மத்தில் இந்த ஸ்டுப்பிட் திருந்தினாளா?
i am sorry, அதையெல்லாம் நிங்ஙள் படபடப்பு பத்மாவதியிடம் தான் கேட்கவேண்டும்.
அன்புடன் கமலம்

பி.கு--மகளிர் தினமும் அதுவுமாய் ஏனோ மலரும் நினைவுகளை தவிர்க்கமுடியவில்லை,