Saturday, May 30, 2009

கூத்துப்பட்டறையில் - - 11 லாலாக்கடை அல்வா -- மல்லிப்பூ

லாலாக்கடை அல்வா--மல்லிப்பூ


தோழிகள் இப்படிக்கலகலத்துக் கொண்டிருக்க, எதிரே Dr.ராஜமாணிக்கமும் கிள்ளிவளவனும் வர, கீதா எழுந்து நிற்க , அனைவருமே கைகூப்பினோம். [ராஜமாணிக்கம் கீதாஞ்சலியுடன் ஒரே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்] . இவள் மனம் திறந்து பாராட்டினாள்,
”ஸார்,!இன்றைய நிகழ்விலேயே மிகச்சிறப்பாகப் பேசியவர் நிங்ஙள் தான். வெகு கனமான ஆழ்ந்த அவதானிப்பு சார்”என்று முடிக்கவில்லை. உடனே கிள்ளிவளவன் கேட்கிறார், நீங்ஙள் என்ன கேரளாவா? பளிச்சென்று இவள் பதில் கூறினாள்,” இல்லை தமிழ்ப்பெண், தமிழ்நாட்டில் தமிழர்கள் நிரம்பிய நிங்ஙளின் சபையில், தமிழ்க்கட்டுரையாளராக வந்துள்ள ஞானும் தமிழ்ப்பெண் தான் !.” மலர்ந்து சிரித்தார் ராஜமாணிக்கம். ”இந்த பெருமைக்காகவே பேசவேண்டுமே அம்மா,என்று சடாரென்று எதிரில் அமர்ந்துகொண்டு, கிள்ளிவளவனிடம் எல்லோருக்கும் காப்பிக்கு சொல்ல,இவள் மட்டும் மறுத்துவிட்டாள்.
பூஜை முடிந்துவிட்டது.இனி ஜலபானம் கூட நாளைக் காலைதான். அதுகூட காப்பி அல்ல.
சாய-- சாய மட்டுமே இவளது சாய்ஸ்.. பிறகு ஏன் சிரமம்?

ஞான் --ஸார்! தமிழில் நிறைய சம்சயங்கள் உண்டு. தமிழறிஞர் நிங்ஙளிடம் கேட்கலாமா?
முனைவர்---தாராளமாகக் கேளுங்கள் அம்மா. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.
ஞான் --- மலையாள இலக்கண நூலான ”லீலா திலகம் ”கூறும் இலக்கணவரம்பும், தமிழில் காணப்படும் இலக்கணக்கூறுகளும், முற்றும் முரண்பாடாகவே உள்ளது.தெலுங்கு ஆந்திர பாஷா பூஷணம்,”கன்னட இலக்கண நூலான சப்தமணி தர்ப்பணம்,என எல்லா மொழிபெயர்ப்புகளுமே வாசித்திருக்கிறேன்.எல்லாமே அழகான விளக்கங்கள்தானே? பின் இலக்கணம் மட்டும் ஏனிப்படி? திராவிடவகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், ஆகிய நான்குமொழிகளிலும்,தமிழ் மட்டுமே ஆர்யத்தின் ,உதவியின்றி,தனித்தியங்குகிறதாம்? இது எப்படி என்று விளக்க முடியுமா சார்? மொழியை பாதுகாக்கிறேன் என்று ஓர், இரும்புச்சட்டையப்போல் இறுக்கி நெருக்கலாமா? சார்?

முனைவர்---தமிழோடு ஆர்யம் கலக்கத்தொடங்கிய காலத்திலேயே, இலக்கண ஆசிரியர்கள் தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் அம்மா.பிறமொழிச்சொற்கள் தமிழில் வழங்கலாகாது, என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை.ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணமொன்று தமிழில் உண்டு.அதுதான் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணம்,.பிறமொழிச்சொற்கள்,தமிழோடு கலந்து கொள்ளவேண்டுமாயின் அவை,தமிழ் ஓசையும், உருவமும் உடையனவாய், வரல் வேண்டுமென்பதை தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டதுதான் உண்மை. ஞான் --வடமொழிக்கு வியாகரணம்எழுதிய பாணிணியும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும், ஒருவருக்கொருவர் நிகர் என்றுதானே அருட்சோதிமுனைவர் கூறுகிறார். திராவிடமொழி நூலின் தந்தையாகப்போற்றப்படும், " A comparative grammer of the dravidian family of languages"
எழுதிய கோல்ட்வெல்லின், ஒப்பிலக்கணத்தில்,கூட ஆர்யத்தையும் தமிழையும் ஒப்பீட்டு நோக்குங்கால் உள்ள ஒற்றுமையை, அருமையாக விளக்கியுள்ளாரே?அதெல்லாம் தப்பா சார்?

முனைவர்-- தவறில்லை அம்மா, எந்த மொழியுமே மட்டமில்லை !எல்லா மொழிகட்குமே அதனதன் அழகுண்டு அம்மா.!ஆனால் தமிழில் நிரம்ப சிறப்பெழுத்துக்கள் உண்டு..அதைத்தான் ஒப்பிலக்கணத்தில் அறிஞர்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.இது எல்லாவற்றையும் விட தமிழ் இலக்கணம் , மற்ற திராவிடமொழிகளைப்போல், இடைக்காலத்தில் எழுதப்பட்டது அல்ல.

ஞான் -- ஏற்றுக்கொள்கிறேன் சார், ஆனால் மிக முக்கிய சம்சயம் என்னவென்றால், ஆய்வாளர்களின் கூற்றிலிருந்து ,கல்வெட்டுக்களில் கிட்டிய தகவல் முற்றிலும் மாறுபட்டுள்ளதே. உதாகரணத்துக்கு,தொல்காப்பியம் 3000 ஆண்டுகட்கு முந்தையது என்கின்றனர் ஆய்வாளர்கள். கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்,
2000 ஆண்டுகட்கு முந்தையது தொல்காப்பியம் என்கிறது. ஆனால், தொல்காப்பியத்துக்கு முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால், இயற்றப்பட்டிருந்ததென்று ”கர்ண பரம்பரை’ செப்பேடு கூறுகிறதே. தமிழிலக்கண ஆசிரியரான பவணந்திமுனிவர் எனும் சான்றோரும் , இதை ஆமோதிக்கிறாரே?

[ராம.கி. அய்யா.அவர்கள் இக்கட்டுரையைப்படிப்பவராயின் விளக்கம் தரலாம்] எது உண்மை என்று விளக்க முடியுமா சார்? முனைவர் ராஜ மாணிக்கம் விளக்கினார். இவளின் எந்தக்கருத்தையுமே ஆட்சேபிக்கவில்லை. மிக்க அன்போடு உரையாடினார்.
[இன்னும் பெரிய புராணம், திருமுறைச்சான்றோர்கள், பெளத்தகாப்பியம், வால்மீகி ராமாயணம் பற்றியெல்லாம் கேட்க நினைத்தும்நேரமாகிவிட்டதால் முடியவில்லை,] சான்றோர் ஒருவரோடு சம்பாஷித்த நிறைவு கிட்டியது.

அவர்கள் புறப்பட்ட கையோடு இவளும் எழ தோழிகள் விடவில்லை.உடல் களைப்பில் கெஞ்சியது. நாளைக்காலை முதல் நிகழ்விலேயே இவளது உரை.கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கவில்லை.ஆனாலும் தோழிகளின்அன்புதான் வென்றது. ரொம்ப நாட்களாகவே இவளுக்கிருந்த ஒரு சம்சயம், தோழிகளிடம் கேட்டாள்.தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் கதைகளிலும் படித்திருக்கிறாள். ”லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ “கொடுத்தால் போதும் .மனைவிமார்கள் சமரசமாகிவிடுவார்கள் என்றெழுதுகிறார்களே?
அது என்ன லாலாக்கடைஅல்வா? மல்லிப்பூ?வில் மறைந்து கிடக்கும் ரஹஸ்யம்என்ன?ஏன் மற்ற பூக்கள் கொடுத்தால் காதல் வராதா? என்றிவள் கேட்டதுதான் தாமதம்.
சொல்லிவைத்தாற்போல் அப்படியே வெட்கத்தில் குப்பென்று பெண்கள் முகம் நாண, ”ஓஹோ, அப்படியென்ன சிதம்பர ரஹஸ்யம் ?என்றிவளுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது.
”பொன்னுத்தாயிதான் நம்ம குழுவிலேயே சிறிசு, பொன்னியிடமே கேள் கமலா, ”
என்று மங்கையர்க்கரசி எடுத்துக்கொடுக்க, பொன்னியின் வெட்கம் காணவேண்டுமே?
அதொண்ணுமில்லை,கமலாக்கா, -------என்று விளக்க விளக்க, இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

ஒஹோ, இதில் இவ்வளவு விஷயம் உண்டா? அன்னபூரணி விடவில்லை.எங்களையெல்லாம் கேட்டாயே, உன் சேதி என்ன?என்றிட எப்படியோ,
எதையோ சொல்லி சமாளித்து, அறைக்குள் திரும்பி, கட்டிலில் விழுந்த அடுத்தகணமே , அலுப்பில் தூங்கிப்போனாள். பொலபொலவென்று பொழுது புலரும் முன்னே, குளித்து, தொழுது, நாமம் சொல்லி,,உடுத்தி, சகலமும் முடித்துக்கொண்டு ,
முதல் வேளையாக கணவருக்கு போன் செய்ததும் , சிரிப்பை அடக்கிக்கொண்டு, இவள் கேட்ட முதல் கேள்வி, மணமாகி இத்தனை வருஷமாச்சே, ஒருநாளாவது லாலாக்கடை அல்வா, மல்லிப்பூ வாங்கி தந்திருக்கிறீர்களா? வாட்? என்று கணவர் புரியாமல்அதிர , இவள் விளக்க, கணவர் வாயாரத் திட்ட, இவள் வாய் நிறைய சிரித்தாள்.
இன்னும் 2 நாள்தானே? சிங்கப்பூருக்கு வந்த பிறகு இந்த வசனம் பேசுவாயா என்று பார்க்கிறேன், "என்றிட்ட கணவரின் கிண்ணாரத்தில் மனசெல்லாம் மகிழ்வில் மிதக்க, மாநாட்டு அரங்கினுள் நுழைய ,தோழிகள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
புஷ்பவனம் குப்புசாமியின் அற்புதமான இசைக்கச்சேரியில் மங்களகரமாய் தொடங்கியது நிகழ்ச்சி,

.......தொடரும்

Sunday, May 24, 2009

கூத்துப்பட்டறையில் 10 - அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன்

அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன்
என்டெ ராசாவுக்காக



மறுநாள் காலையிலேயே, முனைவர் பட்டத்துக்கு படிக்கும் மாணவர் ரவிவர்மாவோடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்றாள். சில முக்கியமான குறிப்புக்களுக்கு வேண்டி,இன்றியமையாத நூல்களுக்காக அங்கு சென்றிருந்தாள்.அன்றைய தலைவர், திரு இளங்கோ அவர்கள், முகப்பிலேயே அன்போடு வரவேற்றார். ரவிவர்மாவின் பேராசிரியர்,ரவிவர்மாவின் தீஸிஸ் பற்றி பேசிக்கொண்டே, அவளை லைப்ரரிக்கு அழைத்துச்செல்ல, அருமை, அருமையான , புத்தகக் குவியல்களுக்கிடையே, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனாள். எதிர்பார்த்ததைவிட தங்கம் தங்கமாய் புத்தகங்கள் கண் சிமிட்டி அழைக்க, எதை எடுக்க, எதை விட, ?/?----- வேண்டிய குறிப்புக்களை திகட்டத் திகட்ட எழுதி எடுத்துக்கொண்டிருக்க, 2 பேராசிரியைகள், அவர்கள் எழுதிய நூல்களைத் தர ,
அன்போடு பெற்றுக்கொண்டு, அவசரம் அவசரமாகத் திரும்பினாள்.
அன்று மதியத்துக்குமேல், சென்னையில் சிறப்புமிகு மானாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள போக வேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலிருந்தே ஏற்பாடான நிகழ்ச்சி அது, . உடனடியாகக் குளித்து ,உடை மாற்றி, ஆசிரியரிடம் விடை பெற்றாள். பத்திரமாக ஆசிரியர் ஏற்பாட்டில், மானாட்டு அரங்கில் நுழைந்த வினாடி, ஒரு நிமிஷம் உலகமே இன்பமயமாகிப்போனது. என்டெ பொன்னே.? என்னென்பேன்? எப்படிச்சொல்வேன்? என்ன அருமையான காட்சி தெரியுமா?
ஆண்களில் எல்லோருமே வெள்ளை வேஷ்டியும் ,வெள்ளை ஜிப்பா, ஷர்ட்டுமாய், என்ன கண்கொள்ளாக்காட்சி தெரியுமா? பெண்களானால், குங்குமப்பொட்டும், மூக்குக் குத்தியும், கலர்கலர் புடவையுமாய் அழகோ அழகு.பார்க்கப் பார்க்கத் தெவிட்டவே இல்லை.
சிங்கப்பூரில் காணவே முடியாத நிகழ்ச்சி. எல்லாப்பெண்களும் கொண்டை, அல்லது தெற்றிப்பின்னலிட்டு, வந்திருக்க, இவள் மட்டும் கஷவு முண்டும் நேரியலில் நிற்க, சில நிமிஷங்கள் தான். பார்ப்பவர்கள் எல்லோருமே வணக்கம் அம்மா என்றிட நமஸ்காரம், என்று சொல்லிச் சொல்லி மனசு பஞ்சுப்பட்டாய்ப் பறந்தது.

அரைமணி நேரத்திலேயே பல சினேகிதிகள் கிட்டிவிட்டார்கள். அவர்களின் பெயர்களோ கேட்டாலே நாவினிக்கும். நெஞ்சினிக்கும். வாய் மணக்கும். கீதாஞ்சலி, மங்கையர்க்கரசி,கற்பகவல்லி,வளர்மதி, இவர்களோடு பொன்னி என்ற இளம்பெண்ணும் சேர்ந்து கொள்ள, பரஸ்பரம் அறிமுகத்திலேயே, இவளுக்கு அவர்களை எல்லோரையுமே பிடித்துப்போயிற்று.அவர்களுக்கும் இவளை. மறுநாள் காலை அமர்வில்தான் இவளுக்கு நிகழ்ச்சி. பேராசிரியர்கள்,இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், என பலரும் பேசினார்கள்.
மனசு குளிரக்குளிர அபிஷேகம் செய்த புண்ணியம் மட்டும் சத்யமாயிட்டும்,தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மட்டுமே. என்னமாய் பேசினார்கள் தெரியுமா?
அதிலும் Dr.ராஜமாணிக்கம் எனும் பேராசிரியர்,அச்சு அச்சாய் அம்சமாய்,எவ்வளவு ஆழமாய் பேசினார் தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த இலக்கியவாதிகள் பேச்சு -----ஹூம்,அப்படி ஒரு ஏமாற்றத்தை இவள் எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலக்கியத்தின் சமகால இலக்கியம் பேசவில்லை. கல்கியின் கேதாரியின் தாயார், மாதவைய்யரின் குட்டிக்கதைகள் பற்றிக்கூட தப்பு தப்பாய் பேசினார்கள், மானுட யதார்த்தத்தை சுதிலயத்தோடு எழுதுபவரோ, அங்கதச்சுவையோடு எழுதுபவரோ,சமூக சிந்தனையோ அவர்களின் கணிப்பில் வரவே இல்லை. இலக்கற்ற இலக்கில் அவர்களும் பேச்சாளர்கள் என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டுப்போனார்கள், துக்கம் தாங்கவில்லை, ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய உழைப்பு,எத்தனை நாட்கள் பாடுபட வேண்டும்? எத்தனை இரவுகள், கண்விழித்துக் குறிப்புக்கள் சேகரிக்கவேண்டும்? இது எதுவுமே இல்லை.சும்மா அனாயாசமாக ,மைக்கைப் பிடித்துப்பேச , அதில் நகைச்சுவையை வேறு அள்ளி விட்டு, கூட்டத்தினரை சிரிக்க வைத்த கோமாளித்தனம் வேறு, [இதில் விசேஷம் என்ன தெரியுமா, இவர்கள் இலக்கியம் படைத்தவர்களே அல்லவாம், ஆனால் இலக்கியப்பேச்சாளர்களாம்.]
அதையே பெரிய சாதனையாக பேசி, மேடையை விட்டு கீழே இறங்கியதும் , எப்படி எமது பேச்சு? என்று சுயமாய் அட்சதை போட்டுக்கொண்டு, --- , , பார்க்கப் பார்க்க ,கோபம் கோபமாய் வந்தது. ஆனால்,மறு நிகழ்வில் கற்பகமும், கீதாஞ்சலியும் அவ்வளவு அருமையாகப்பேசினார்கள், வளர்மதியும் , பொன்னியும் மங்கையர்க்கரசியும் கூட பொறுப்பாய் பேசினார்கள்.

பொன்னியின் பெயர் பொன்னுத்தாயி, சுருக்கி பொன்னி என்று கூறினாள்,என்பது அமர்விலிருந்தபோதுதான் தெரிந்தது. கிள்ளிவளவன் என்பவரும் ஆழமாக பேசினார், ரசித்துக்கேட்க முடிந்தது. அடுத்து அரசியல்வாதிகளின் பேச்சு.என்டெ ஈஷ்வரா? ஈஷ்வரா? அது போல் ஒரு கொடுமை இவ்வுலகில் இல்லை என்று ஓடிவிடலாமா என்றிருந்தது. பத்திரிக்கைகளிலும் , ஊடகங்களிலும்,மட்டுமே, அறிந்திருந்த திருமுகங்களை, நேரில் பார்த்த சோகம் இம்மட்டு அம்மட்டல்ல.என் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?
தோளில் துண்டு பறக்க , அன்றைய எதிர்க்கட்சியை அவர்கள் விளாசிய விளாசலை, எழுதவா? கனல் பறக்க அவர்கள் விளம்பிய அரசியல் சிலேடையை மொழியவா? ஆச்சர்யம் என்ன தெரியுமா? அரசியல்வாதிகள் கேரளத்திலும் சரி.தமிழ்நாட்டிலும் சரி. இவர்கள் சத்யமாயிட்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
ஆனால் அவர்களுக்கு கி ட்டிய ராஜோபசாரமோ, ஹூம், பட்டுக்கம்பளம் விரிக்காத குறைதான். ஒரு வரிஒரே ஒரு வரி, அல்லது ஒரு வாக்கியம் கூட நிகழ்வுக்கு பொருத்தமாகப் பேசவில்லை, தெரியுமா? ஆனால் அவர்கள் போகும்போது அவர்கள் பின்னாலேயே ஏற்பாட்டாளர்கள் ஓடினார்கள்.அவர்கள் பேசிய கவைக்குதவா பேச்சுக்கும் தலையாட்டினார்கள். சிரித்தார்கள்.கை தட்டினார்கள். ஆனால் அருமையாகப்பேசிய பலரை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. அதற்குள் இரவு உணவுவேளை வந்துவிட்டது. சாப்பிடவே முடியவில்லை.இவள் பரிதவித்தாள், மாலைக்குளியல், பூஜை எதுவுமே இன்னும் ஆகவில்லை.

அரக்கப்பரக்க அறைக்குள் வந்து, குளித்து, கையோடு கொண்டு வந்திருந்த ஈஷ்வரியை, கண்ணிலொற்றி, நாமம் ஜெபித்து முடிக்க, தோழிகள் கதவைத் தட்டினார்கள்.அறைத்தோழிக்கு சிரமம் கொடுக்க வேண்டாமே, என்றிவர்கள் அனைவரும் கீழே வந்து லோபியில் அமர, காற்று சில்லென்று வீச, ரம்ம்மியமான அந்த சூழ்னிலை இன்றும் அப்படியே கண்ணில் நிற்கிறது. பேச்சு பாட்டுக்கு குடும்பம், இவளது இலக்கியம் பற்றி வர, திடீரென்று பொன்னி கேட்டாள், கமலாக்கா, நீங்கள்தான் பெரிய டைரக்டராச்சே? ஒரு மலையாளப்பாடல் பாடுங்களேன் என்றிட? -- மற்ற தோழிகளும் கூட வற்புறுத்த , என்ன செய்ய? --வேறுவழி?.. பாடினாள் ,ஆனால் மலையாளப்பாடலல்ல.
அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு தமிழ்ப்பாடல். என்ன பாடல் தெரியுமா??
----

ஞான்--- அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன், எண்டெ ராசாவுக்காக?
உடனே கீச்சுக்குரலில்,
பொன்னி---- எங்கே எங்கே கொஞ்சம் ஞான் பாக்கறேன், கண்ணை மூடு கொஞ்சம் ஞான் காட்டறேன் என்று பொன்னி எதிர்பாட்டுப்பாட, இவள் அதிர்ந்துபோய் நிற்க, தோழிகள் பட்டாசாய் சிரிக்க, வெட்கமும் , கோபமுமாய் இவள், ----------------


...........தொடரும்

kamalam.online@yahoo.com

Sunday, May 17, 2009

கூத்துப்பட்டறையில் - 9

கூத்துப்பட்டறையில் 9
[உட்டாலங்கடி கிரி கிரி, அம்மா அம்மா வடகறி----???]


கவிதை சொற்களில் இல்லை.ஒலி நயத்தில் இல்லை. கருத்திலே, மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே , சுட்டிக்காட்டும் பேருண்மையிலே,பொதிந்து கிடக்கிறது” என்றார் ந.பிச்சமூர்த்தி .

ப்ராய்டிசம், மார்க்ஸிஸம், பற்றிய பிரக்ஞையோடு, தான் கவிதை படைக்க வர வேணுமென்று சொல்வது ,போல் அபத்தம் வேறில்லை என்பேன். கவிதை, கனவாய், மழைத்துளியாய், மோன கீதமாய் , மட்டுமே என்னில் முகிழ்ந்துள்ளது. கொட்டும் மழையில், சிவந்த ரோஜாவின் பட்டிதழில், கொண்டவனின் முதல் ஸ்பரிஸத்தில், கண்மணியை மணிவயிற்றில் உணர்ந்த நிமிஷம், எங்கிருந்து வந்தாய் குழந்தாய்
அதை ஞானும் அறிந்திடச்சொல் குழந்தாய், என ஸ்பஷ்டமாய் மனதால் மட்டுமே பேசினேனே, எல்லாமே கவிதைதானா>? ஊஹூம், கவிதையால் ஆட்பட்டேனே. அதுவே கவிதைதானே?

ஆனால் எப்பொழுதுமே என்னில் கிளைத்த சம்சயம், கவிதையை மூவகையாகவே பிரித்துப் பார்க்கிறேன். involuted writing, convoluted wrtiing,pattern writing, இந்த மூன்று தளங்களில் , ஞான் எங்கே நிற்கிறேன்?

[உரையாடல் தொடர்கிறது]


ஞான் ---முற்போக்குக்கவிதைகளில் பல புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தாலும் ,பூரண கவித்துவமின்றியே உலா வருகின்றன. சீர், அசை, கூட சரியாக உணரப்படாமல், எதுகை, மோனையும் இல்லாமல், வெறும் மடித்துப்போட்ட வசன வரிகளாகவே
வருவதை எப்படி ஏற்பது? முக்கூடப்பள்ளு, காவடிச்சிந்து, நொண்டிநாடகங்களைக்கூட ஏற்க முடிகிறது?
ஆனால் இலக்கணம் மீறிய , மரபுகளை உடைத்து,இலக்கணத்தையே சிதைத்து, சோதனைமுயற்சிகளால் தான் இலக்கியம் புதுப்பிக்கப் படவேண்டுமா?
ஏன்? ஏன்? சார்? கனியிருக்க காய் எதற்கு? புஷ்பம் போதுமே? பாறை எதற்கு?
இந்த nonlinear எழுத்துக்கள் ஒரு சராசரி வாசகனைச் சென்றடையுமா? அல்லது புரிந்துகொள்ள முடியுமா? வாசகனை மண்டையைப்பிய்த்துக்கொள்ள வைப்பதுதானா புதுமை ,என்று விமர்சிக்கிறார்களே?

ஆசிரியர் ---என்னுடைய நாடகங்கள் புரியவில்லையென்றால் எண்டெ ஸ்க்ரிப்டை வாங்கிப்படித்துப்பாருங்கள், என்றுதான் சொல்லுவேன்;
[மேற்கூறிய இதே வரிகளைத்தான் சிங்கை வந்தபோதும் பத்திரிகை ,தொலக்காட்சிப்பேட்டியில் கூறினார் முத்துசாமி]
புதுமை இலக்கணத்தை சிதைக்கிறது என்பது வாதமே, தவிர அதுவே நிலைப்பாடு அல்ல.

ஞான் -----சார், இப்படி ஒரு கவிதை---
எல்லாம்
அடையமுடியும் தூரத்தில்
இடையில் தடையாய்
சில எச்சில் பருக்கைகள்”
வண்ணதாசனின் இக்கவிதை மிக இயல்பாக வாசிக்க முடிகிறது. ஆனால் கவிதைக்கான அலங்காரமே இல்லையே? புதிதாக ஒரு வடிவம் மனதில் எழும்போது, அந்த தரிசனத்தை, படிம அழகோடு பதிவு செய்யவேண்டாமா?

ஆசிரியர்---கவிதைக்கு அலங்காரம் எதற்கு? மரபு என்பது யாப்பு மட்டுமல்ல.தமிழின் புராதன இலக்கியத்திலேயே, யாப்புக்குக் கட்டுப்படாத சொற்சீர், அடி பற்றிப் பேசப்பட்டுள்ளது.அப்பொழுதே புதுக்கவிதைகான மூலாதாரம் வித்திடப்பட்டுவிட்டது.
ஒரு கவிஞனின் கிரியா சக்தியில் உதயமான கவிதையைப்பற்றி நிங்ஙள் அலசலாம். அந்த உரிமை உங்களுக்கிறது?

ஞான் --கவிதை என்பது, ஒருவகை கருணைப்பிரவாஹம்,உலகினைப் பரிவுடன் பார்க்கவேண்டியதுதானே கவிஞனின் இயல்பு.

ஆசிரியர்--- அது உங்கள் பாணி. அது தவறென்று சொல்லவில்லை. ஆனால் இது போதாதென்றுதான் சொல்கிறேன். உங்களால்
இதைவிட அருமைகளை சிருஷ்டிக்க முடியும் .

ஞான் ---சார், வன்முறை,கத்தி, ரத்தம்,,போன்றவைதான் புதிய சிந்தனை, என்றால் என்னால் நினைக்கவும் இயலாது.
post modernism" என்ற பெயரில் வரும் அலசல் மட்டும்தான் அறிவுஜீவித்தனமான,--எழுத்து என்கிறீர்களா?

ஆசிரியர்---பின்நவீனத்துவம் என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல, ஓவியத்தில், நாட்ய சாஸ்த்ரத்தில்,என எல்லா நுண்கலைகளிலும் உண்டு.
இதில் பிரச்சினை என்னவென்றால், கவிதையில் பாரதியைத்தவிர வேறு யாரையுமே,நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே அதுதான் , தவறு..
ஆனால் தமிழில் புதுக்கவிதையில் எழுச்சியைக் கொண்டு வந்தவரே, பாரதிதானே?

ஞான் --பாரதி இமயம். பாரதி சிகரம் சார்.தமிழின் மிகப்பெரும் தவம் பாரதி. பாரதிதான் கவிதை, பாரதி மட்டுமே கவிதை.
பாரதியைப்போல் எழுதமுடியுமா?

ஆசிரியர்--- இந்த பரவசத்தோடே நீங்கள் ஏன் முயலக்கூடாது? இதுவரை நீங்கள் பெற்றுள்ள ,விருதுகளும் பரிசுகளும் -------, -----,
மட்டுமல்ல சாதனை. இன்னும் உங்களால் சாதிக்க முடியும்? உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

[பட்டென்று கோபம் வந்துவிட்டது. தாங்கவே முடியவில்லை. 12, 13 வயதில் கவிதை எழுதத் தொடங்கியவள்தான். அதற்காக, என்டெ literary priciple , எனக்கே எனக்கான, இலக்கிய இலக்கணம் , அதை ஞான் எப்படி மீறுவேன்?]

ஆசிரியர்---கமலாதேவி, [ஆசிரியர் இப்படித்தான் இவள் முழுப்பெயரில்தான் அழைப்பார்]
உங்கள் எழுத்தில் மிக துல்லியமாக, மென் உணர்வுகளைக்கூட மிகஅழகாய் , வாசகனிடம் நேரடியாகவே கொண்டு செல்லும் ஆற்றல் இருக்கிறது.. .கதை சொல்லும் உத்தியிலும் வாசகனைக்கவரும் , நிதானமான , பண்பட்ட நடை அழகில் மிஞ்சியே நிற்கிறீர்கள் ,
ஆனால் நாடகத்துறைக்கு இது போதாது. கோடு போட்டுக்கொண்டு , இப்படித்தான் என்று நவீனப்பார்வையில் எழுதமுடியாது

ஞான் ---தக்‌ஷணமே ஒரு கவிதை மனதில் தோன்றுகிறது. சொல்லட்டுமா சார்?

ஆசிரியர்----ம்ம்ம்-- சொல்லுங்கள்,

ஞான் ---- ராஜ்யம் காணான் வந்ந பெடக்கோழி,
பூஜ்யம்-------
அட, மலையாளத்தில் அல்லவா வருகிறது,சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
sorry sir, ஞான் இதை தமிழ்படுத்த சில நிமிஷங்கள் வேண்டும்.

ஆசிரியர்--- வேண்டாம், மலையாளத்திலேயே தொடருங்கள். உடனே பிரித்துப்போடும் போது சரளம் போய்விடும்.
கவிதையும் சிதறும் .வேண்டாம், மலையாளத்திலேயே தொடருங்கள்,

ஞான் -- ஆனால் இங்கு யாருக்கும் புரியாதே?

ஆசிரியர்--தமிழும் மலையாளமும் , தாய் சேய்மொழிகள்தானே.?எப்படிப் புரியாமல் போகும்? மலையாளிப்பெண் தமிழில் கவிதை
சொல்லும்போது, தமிழர்கள் மலையாளம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

[கண்கள் நிரம்பி, பொட்டென்று பொலபொலவென்று வழிந்துவிட்டது.பரவசம் தாங்கவேயில்லை.]
எங்குமே கிட்டியிராத அருமை. தமிழிலிருந்து கடன் போன மொழிதானே மலையாளம்? முதலில் இந்த மலையாளமே வடமொழிக்கலவைதானே???-
தமிழின் பிச்சை தானே மலையாளம்? -இன்னும் இன்னும் --வேண்டாம் எழுதவே ,----------
இப்படியெல்லாம் தான் கண்டணம் கேட்டுகேட்டு மனசு புண்ணாகியிருந்தாள்,
ஆனால் முத்து சாமி சார் வாயிலிருந்து விழுந்த வரிகள்?-----அப்படியே வணங்கத் தோன்றியது}

படபடவென்று கவிதை வந்து விழுந்தது. ஆசிரியர் ரசித்துக் கேட்டார். நிறைய உபதேசித்தார். இப்படியாக புதுக்கவிதைக்கான புதுச்சாரளம் இவளுக்குத்திறந்து விடப்பட்டது.

அன்றுமாலையே பசுபதியும் , சந்திரா, கலைராணி,என, இவளுக்கு சென்னைத்தமிழைப்பற்றி விளக்கினார்கள். மறக்கவே முடியாத பலசொற்களுண்டு, ஆனால் இன்று நினைத்தாலும் சிரித்துச் சிரித்து கண்ணீர் வரும் வரிகள் ஒன்றுண்டு.
என்ன தெரியுமா? அம்மாடி, அம்மாடி, ---சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
”உட்டாலங்கடி கிரி கிரி -அம்மா அம்மா வடகறி?
என்ன புரியலையா? எனக்கும் புரியவில்லைதான். ஏன் தெரியுமா? இதற்கு அர்த்தமே இல்லையாம்?
..... [தொடரும்]

Tuesday, May 12, 2009

கூத்துப்பட்டறையில் - 8

கூத்துப்பட்டறையில் - 8

[சிங்காரச்சென்னையிலே தமிழே ,என்டெ செந்தமிழ்த்தேன்மொழியே]

வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள்மாதிரி தான் ஞான் பிறப்பித்துவிட்ட கதைகளும்.
அவை உங்கள் அளவுகோள்களுக்குள் அடைபடாதிருந்தால் அதற்கு ஞான் பொறுப்பாளி அல்ல.
ஞான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் கூடபொறுப்பாளிகளல்ல. என்றார் புதுமைப்பித்தன்.

எவ்வளவு அழுத்தம் திருத்தமான சுய அலசல்.அழுத்தமான நோக்கம் இல்லாதவை கதைகளே இல்லை எனில், ஒரு படைப்பாளிக்கு தனது பொறுப்பு பற்றி எவ்வளவு அக்கறை இருக்கவேண்டும்?வணிக பத்திரிக்கைக்கு எழுதுவதால் நாங்கள் தார்மீக இலக்கியம்,
படைக்க முடியவில்லையே எனும் சுய பச்சாதாபம் சிங்கை, மலேசிய எழுத்தாளர்களுக்கில்லை. மலையாள இலக்கியம் தேடித்துருவி, தரமான இலக்கியத்துக்கு மட்டுமே இடம் என்று கறாராய் இருப்பதால் இங்கு ’ஞஞ்ஞா மிஞ்ஞா ‘என்று எழுதிவிட்டு குளிர் காயமுடியாது. இது சிறுகதை ,கவிதைக்குமட்டுமல்ல.மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, விளம்பரத்தோடு, முதலீடு செய்யும் நாடகங்களுக்கும் கூட இன்னும் ஆழமான எதிர்பார்ப்பு உண்டு. இலக்கியம் சமூக மாற்றத்துக்கு ஒரு கருவியாக இருக்கவேண்டுமென்ற நினைப்பில் தப்பில்லை. ஆனால் பின் நவீனத்துவமென்ற பார்வையில் வரும் பல அபத்தங்கள் ஏற்புடையதுதானா?

அற்புதமான மரபுக்கவிதைகள் இருக்கும்போது புதுக்கவிதை என்ற ஒரு எழுச்சி எதற்காக? எதுகை, மோனை, யாப்பிலக்கணம் , முறையாகப் பயின்று எழுதவரும் மரபுக்கவிதைகளில் இல்லாத எந்த அழகைப்புதுக்கவிதையில் கண்டு விட்டோம்? வெறும் வார்த்தைவிளையாட்டு என்ற பெயரில் வரும் குப்பையைக்கூடக் புதுக்கவிதை என்கிறார்கள்?ஏன்? ஏன்? சார்?

<<ஆசிரியர்முத்துசாமி--அது குப்பை என்று பட்டாலே அதை ஏற்க வேண்டியதில்லையே? அதே தலைப்பில் நிங்ஙள் ஏன் சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதிப்பார்க்ககூடாது?


ஞான் --<<சங்க இலக்கியத்தில் இதிகாசம் காண்பவளாக்கும் ஞான்.ச.இ. சொல்லாத எதை புதுக்கவிதையில் சொல்லிவிட்டார்கள்?

<<ஆசிரியர்--- இது தவறு.பரந்த வாசிப்பனுபவம் உங்களுக்கிருக்கிறது.வ.வே.சு. ஐயர் தொட்டு, இன்றைய பிரபஞ்சன் வரை, சமகால இலக்கியம் பற்றி விரல்நுனியில் பேசுகிறீர்கள், ------மொழிகளும் கற்றிருக்கிறீர்கள்? [தப்பு, மொழியாற்றல் இவளுக்கு குறைவு]

ஆனால் இந்த ஆற்றலையெல்லாம் புதிய கோணத்தில் சிந்திக்க மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?
ஞானக்கூத்தன், பிரமிள், நகுலன், கலாப்ரியா, என எல்லாரையுமே வாசிக்கிறீர்கள்?
எதைப்படித்தாலும் இலக்கியத்தில் ஆழ்வேர் வரை துருவிப்பார்த்து ஆராயும் அறிவும் உண்டு .
ஆனால் இவ்வளவு ஆற்றலையும் புத்திலக்கியப்பார்வையில் சிந்திக்க மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?

<<<ஞான் ---புத்திலக்கிய சிந்தனை என்று எதைச்சொல்கிறீர்கள்? முரண்பாட்டின் மொத்த உருவமாக வரும் எழுத்தா சார்? புதுமைப்பித்தனும், ஜெ.கா.வையும் அருமையாக ஏற்கமுடிகிறது. ஆனால் இன்று வரும் --------, -----,எழுத்தா சார் அது?
அவர்களெல்லாம் எந்த மாயையில் எழுதுகிறாரகள்?
ஒ.கே. அப்படியே நிங்ஙள் கூற்றை ஏற்றுக்கொண்டாலும் கூட இந்த பின்நவீனத்துக்கென ஒரு இலக்கணம் உண்டா சார்? அவரவர் எழுத்தே அவரவர் நவீனத்துவம் எனில் என்டெtheatre researchல் பல விஷயங்கள் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை>?

<<ஆசிரியர்----முதலில் நவீன நாடகக்காரர்களாக எங்களை ஏன் பார்க்கிறீர்கள்? முன்பு கவிதை பண்டிதர்களின் கைப்பாவையாக மட்டுமே இருந்தது. ஆனால் புதுக்கவிதை எழுச்சி வந்த பிறகுதான்,பலரும் ஆர்வத்தோடு எழுத வந்திருக்கிறார்கள்?இது எவ்வளவு ஆரோக்கியமான வளர்ச்சி? ஜனரஞ்சகமான எழுத்து பலரையும் சென்றடைகிறது என்பதற்காக,தரமிழந்த வணிக எழுத்துக்களை கொண்டாட வேண்டிய தேவை என்ன?

<< ஞான் --எதுகை, மோனை, யாப்பிலக்கணம், பயிலாதவர்களின் பிழை அது.காவ்யங்கள், ப்ரபந்தங்கள், சித்தர் பாடல்கள் என வரும் மரபுக்கவிதைகளில் என்ன இல்லை?புதுக்கவிதை, நவீன நாடகம் என்பதே ஒரு அதிர்ச்சியின் வெளிப்பாடுதானே?

<ஆசிரியர்-- புதுமை எப்போதுமே அதிர்ச்சியாகத்தானிருக்கும்.ஒரு படைப்பாளிக்கு சமூக சிந்தனைதான் உச்சம் என்கிறேன்,ஆனால் அதைக்கூட கூர்மையாகவும், பட்டவர்த்தனமாகவும் சொல்லும் திறன் வேண்டும். அறிவு ஜீவித்தனமான வசீகரம் , என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.

<ஞான் --- கவிதை ஆத்மாவின் ஜீவரசம் சார்.பாரதிக்கவிதைகளில் ஆத்ம தரிசனம் காண்கிறேனே, அதுதானே என்டெ பரவசம்- நவீனக்கவிதையில், பிரமீளின் கண்ணாடியுள்ளிருந்து, நகுலனின் மழை,மரம், காற்று, கலாப்ரியாவின் சுயம்வரம்,என்று தெறிவு செய்தேன் ஆனால் கவிதை எனும் தனிமொழியில் இப்பொழுதும் கூட---

<<ஆசிரியர்---புதுக்கவிதை, ,நவீனக்கவிதை என்று பிரிவினை ஏன்?கவிதை இலக்கணத்தில் இது ஒரு புதிய பரிமாணம், சரி, உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நிங்ஙள் எழுதிக்காட்டுங்கள். இவ்வளவு ஆற்றலையும் உங்கள் கோணத்தில் வெளிப்படுத்துங்கள்

படபடவென வந்தது அவளுக்கு.இவர் கேலி செய்கிறாரா? ஊஹூம் முத்துசாமி சார் மிகவும் சீரியஸான பேர்வழியாயிற்றே?

<<ஞான் -- சிங்கை, மலேசியத்தமிழ்தான் எனக்கு எழுதத் தெரியும்.ஆனால் தமிழ் நாட்டுத் தமிழ் எனக்கு எழுதத்தெரியாது சார்”” என்று சொல்லும்போதே இவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

<,ஆசிரியர்-- இப்படிச்சொல்லி உங்களை பயமுறுத்தியது யார்?

<<ஞான் -- [கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது] நாத்தழுதழுக்க இவள் கூறினாள்.
சார், இங்கு பல சொற்கள் எனக்குப்புரியவில்லை.
மொழிதான் இலக்கியத்தின் ஆணிவேர் என்ற என்டெ நம்பிக்கையே சிதறி விட்டது. கேட்டால் வட்டாரத்தமிழ், சென்னைத்தமிழ் என்கிறார்கள் வேண்டாம் சார், எனக்கு வேண்டாம், ஞான் போகிறேன், எனும்போதே பேச முடியவில்லை.

<<ஆசிரியர்,----அடடா, அழக்கூடாது? கமலாதேவி--உங்களுக்கு கிராமம் தெரியாது. கேரளத்திலும் கூட நிங்ஙளின் வாழ்வியல் நிலைப்பாடு அப்படி.
நீங்கள் தமிழிலக்கியம் படைக்க வந்ததற்கு உண்மையிலேயே தமிழர்கள் பெருமைப்படுகிறோம். ஆனால், முதலில் ஞான் சொல்வதைக்
கவனமாகக் கேளுங்கள். இலக்கியத்துக்கு சொல்லாட்சி, பாவம், விவரணை, மட்டும் தெரிந்தால் போதாது.கிராமம் என்றல்ல. நகரத்தில் கூட விளிம்புநிலை வாழ்விலக்கியத்தில் ,வரும் சொற்களில் தான் உங்களின் தடுமாற்றம், என்று புரிகிறது.
டீக்கடை, மெக்கானிக் பட்டறை,ரிக்‌ஷா வண்டி,ஆட்டோக்காரன், ஐஸ் விற்பவன், சிறுபெட்டிக்கடைக்காரன், போன்றோரின் பேச்சு செந்தமிழ் இலக்கியமாக எதிர்பார்க்கக்கூடாது.
கி.ரா.வின் எழுத்தை எப்படி அருமையாய் ஏற்றுக்கொள்கிறீர்களோ,அது போலவே இந்த மொழியாடலின் அழகையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் யதார்த்த இலக்கியத்தில் இப்படியும் ஒரு கோணம் என்று யோசியுங்களேன்.

<<ஞான் --- சம்மதிக்கிறேன் ..ஆனாலும் சார் தமிழ், தமிழ், தமிழ், தேன் சார், தமிழ் அமுதம், தமிழ் தெய்வம் அல்லவா? ஆனால் எந்தா சார் அது? சைக்கிள் கேப்பில, உதார் விட்டுக்கினு, , தத்தாரி, ஜொல்லு, லொள்லு, ---etc
எனக்கு மனசிலாகவே இல்லை? எந்தா பாஷை சார் இது?
என்று இவள் தொடர, முத்துசாமி குலுங்கக்குலுங்க சிரித்தார். மாணவர்களும் சிரிக்க , ஒருகணம் அழுகையை மறந்து ,இவளும் சிரித்து விட்டாள்.

........தொடரும்

கருத்துக்களைத் தெரிவிக்க மின்னஞ்சல்
செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com








Thursday, May 7, 2009

கூத்துப்பட்டறையில் - 7

தமிழே !!!சுந்தரத்தமிழே!!!


கூத்துப்பட்டறையில்==7]

முதல் நாளிலிருந்தே கணவர் தொலைபேசாத, [கணவர், குழந்தைகளின் குரல் கேட்காத ]கவலையில் இவள் சோகமாய் அமர்ந்திருக்க, சந்திரா ஓடி வந்து, சேச்சி, நிங்ஙளை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள், ’என்று கையைப்பிடித்திழுக்க, ஒருவேளை, முதல்நாள் சந்தித்த, சந்திரலேகா, தானோ, என்று, கீழே இறங்கி வந்தால், ஆசிரியரின் [முத்துசாமிசாரின்] மனைவி. அய், ஜக்கம்மா, என்று இவள் தனை மறந்து கூவ, கட்டபொம்மன்[முத்துசாமி சார்] விழிக்க, ஆசிரியரின் மனைவி, happy birthday, என்றவாறே, அன்போடு வந்து அணைத்துக்கொண்டார் . கூத்துப்பட்டறையில் தொலைபேசி வேலை செய்யாததால்,, முத்துசாமிசாரின் வீட்டுக்கு தொலைபேசி, விவரம் சொல்லியிருக்கிறார் கணவர். மதிய உணவுக்கு அழைக்கத்தான் வந்தோம், என்று ஆசிரியரும் மனைவியும் அழைக்க,, மகிழ்வில் கண்கள் பனித்தது.
கவலை பனிப்படலமாய் விலக, --- ஆசிரியரையும், மனைவியையும் ----முகமாய் நிற்கவைத்து, இவள் நமஸ்கரித்தாள்.மதிய உணவு ஆசிரியரின் வீட்டில் உண்ணச்சென்றபோதுதான் அவர், பிராமணர் என்ற உணர்வே தெரிந்தது.
மணக்க மணக்க அவ்வளவு அருமையான உணவு. .ஆனால் ஜானகி ராமனின் நாவல்களில் எல்லாம் வருமே, வற்றக்குழம்பு, அது ஏனில்லை? என்று இவள் கேட்க அம்மா ,
நாளையே கொடுத்துவிடுகிறேன்,என்றிட, எப்படி சமைப்பது என்று, இவள் சமையல் பாகம் கேட்க, அட, என்டெ ஊர், புளிக்கூட்டானில் வற்றலைப்போட்டுவிட்டால் அதுதான் வற்றக்குழம்பா? என்ன அது சுண்டை வற்றல்? என்றெல்லாம் சாதாக்கேள்விகளால்,இவள் அவரை குடைய அம்மா அழகாய்ச்சிரித்தார். முத்துசாமி சார் ஆறடிக்குமேல் உயரம் , நல்லநிறம், கணீரென்ற குரல், சதா முறுக்கிவிட்டுக்கொண்ட மீசையில், இப்படித்தானாக்கும், என்ற கட்டபொம்மன் தோற்றம்.
ஆனால் அம்மா, அதிகம் உயரம் கூட இல்லை, மானிறம், ஆனால் பேச்சுக்கூட எந்தா ஒரு மென்மை தெரியுமா? முத்துசாமி சாரின் அனைத்து வெற்றிக்கும் பின்னால் எத்தகு மாசக்தி ,அவர் என்பது அம்மாவைக்கண்டதுமே புரிந்துவிட்டது. அப்பொழுது அவர்[அம்மா] அரசு உத்தியோகத்தில் இருந்தார், ஆனால் தோற்றம் அப்படியே அம்பிகையை காண்பதுபோல்தான் அப்படியே மனதில் நிற்கிறார். விடைபெறும்போது, குங்குமமிட்டு, சந்தனம் ,மஞ்சள், ப்லவுஸ் துண்டு ,என மங்கலப்பொருட்கள் எல்லாம் தர, மீண்டும் அவர்களை நமஸ்கரித்து , விடைபெற்றபோது முத்துசாமி சாரின் மற்றொரு உலகம் தெரிந்தது. கூத்துப்பட்டறைக்குள் நுழைந்த அரை மணி நேரத்தில் , கணவரின் குரல் . [தொலைபேசி சரியாகிவிட்டது].
குழந்தைகளின் வாழ்த்தும், மன்னவரின் ஸ்னேஹம் நிறைந்த திட்டுமாக , இவள் ---உலகம் உல்லாஸமாகிவிட்டது.

சிங்கப்பூர் திரும்பும் நாள் நெருங்கிவிட்டதால், இவளது, ஸ்க்ரிப்டை இன்னும் முழுமையாக்காத்த கவலை இருந்தது. ஸ்க்ரிப்டில் பல மாற்றங்கள் அவள் செய்திருந்தாள். எல்லாமே அவளின் சொந்தக்கற்பனை என்றிட முடியாது. இங்கு கற்றது, ஆசிரியர்களின் அறிவுரைகள், என எல்லாமே சேர்ந்து, நிச்சயம், இந்த நாடகம் ,இலக்கிய சிறப்புப்பெறும்
எனும் நம்பிக்கை இருந்தாலும், ஏனோ, எங்கோ, இடறியது.நெருடல் எங்கே என்று மட்டும் புலப்படவேயில்லை. எங்கே? எங்கே? மூளையைக்கசக்கிவிட்டெல்லாம் யோசிக்க அவளால் இயலாது. கவலை இம்மட்டு அம்மட்டு அல்ல. .பட்டென்று உடனே தோன்ற கணவருக்கு தொலைபேசினாள். உடனே கணவர் ஸ்க்ரிப்டில் உள்ள மாற்றத்தைக்கேட்டார். இவள் விளக்கியதும் பொட்டென்று போட்டு உடைத்தார், நிலவரத்தை. என்டெ பொன்னே, கடைசியில் விஷயம் இதுதானா? சாரே, சாஹித்யம் என்றால் என்ன?இலக்கியத்தில், சிறுகதையோ, கவிதையோ,நாடகமோ, நாவலோ, எந்த வடிவமாயினும் உருவகம் வாழ்க்கையிலிருந்துதானே பிறக்கிறது? மனித மனம் என்பது அங்கு எவ்வளவு பெரிய விஷயம்? அந்தரங்கமும், கிசுகிசுப்பும், ஆழமனக்கொந்தளிப்பும், காமமும், குரோதமும், காதலும் ப்ரேமமும், என மனிதன் அல்லாடிக்கொண்டிருக்க, வாழ்க்கையை, அப்படியே வாழ்க்கையாகத்தானே வடிக்கவேண்டும்? நிகழ்கலையிலும் கூட அப்படித்தானே?
பின்னே எங்கே வந்தது , சிங்கப்பூர் வாழ்வியலுக்கே சற்றும் ஒவ்வாத பொய்மையான ஜோடனை? அட,இவ்வளவும் சொல்லிவிட்டு, இவளது நாடக எழுத்தில், குறிப்பிட்ட சில காட்சிகளில் , மட்டும் ஏனிந்த தடுமாற்றம் என்று சொல்லவில்லையே?
இவளது குறிப்பிட்ட காட்சியில் close up shots ல் மட்டுமே வேண்டி எழுதப்பட்ட வசனங்கள் தான் பிரச்சினை. எப்படிக்காட்டினாலும், எப்படி எழுதினாலும்,வரையறுக்கப்பட்ட பதத்திலிருந்து விலகாத sub-codeல் தானே எல்லாமே? டெல்லியில் அல்காசியோ, கேரளத்தில் காவாலம் பணிக்கரோ, தமிழ்நாட்டில் அருமைமிகு ராமானுஜம் சான்றோர், என , யாராயினும் அவரவர் வாழும் மண்ணின் மணம் வீசத்தானே இலக்கியம் படைக்கிறார்கள், அப்படியிருக்க, இவளும் கூட அப்படித்தானே? multi-racial எனப்பலமொழி மக்கள் வாழும் சிங்கப்பூரில், கதகளி, தெருக்கூத்து, யக்ஞகானம், போன்ற பாரம்பரியக்கலைகளை
பார்வையிலக்கியத்தின் அங்கதக்கூறுகளாகக் காட்டலாமே தவிர, இதையே சாஹித்யம் என்றிட இயலுமா?

இவளது ஸ்க்ரிப்டில் நதிபுத்ரா[மலாய்மொழிக்கவிஞரின்] வின் கவிதையும், திரு. சியாவின்[சீனப்பாட்டாளியின்] ஆங்கில உச்சரிப்பும், மலையாளத்தின் மகரந்தமும், செந்தமிழ்த்தேன்மொழியின் சுகானுபவமுமாக ,த்தான் கதாபாத்திரங்களை உருவாக்கியிருந்தாள், சிங்கப்பூரில் அதுதான் வாழும் மொழி. அதுதான் என்டெ மண்ணின் விழுமியம் சார்ந்த எழுத்து. ஞான் மலையாளி, அதனால் மலையாளம் மட்டுமே,----- என்றிட்டால் , அதைவிட அபத்தம் வேறுண்டா? பசாரும் , சீனர்களின் ஞோஞா குவேயும், பிரானாக்கான் எனப்படும் செட்டிமலாக்கா ,வம்சாவாளியினரின் டெவில் கறியும்,
மலாய்க்காரர்களின் குவே கெத்துப்பாட்டும், சர்வ சாதாரணமாய் இவளது கதாபாத்திரங்களின் வாய்மொழி உரையாடலில் ஒலிக்கும். ஒலிக்கவேண்டும். இல்லையேல் உழைப்புக்கு சிங்கப்பூர்,வாழ்க்கை சுகத்துக்கு சிங்கப்பூர், சுரண்டிச் சம்பாதிக்க மட்டுமே சிங்கப்பூர்,
எனத் தாய்மடி மறந்த சேயாய், நன்றி கொன்ற இலக்கியவாதியாக அல்லவா நடமாடவேண்டும். நினைக்கவே நெஞ்சு விம்மியது. எங்கு வாழ்ந்தாலும் ,மானுட யதார்த்தத்தில்,எனக்கே எனக்கான , நேர்த்திக்கடன் என்ன என்பதை எப்படி மறந்துபோனேன்?, அன்றாட வாழ்வியலில் ஞான் கண்ட சின்ன சின்ன அதிசயங்களும் கூட எனக்கு அல்புதம் தானே? பட்டதை, மனதில் தொட்டதை, கண்ணில் மலர்ந்ததை, காட்சியில் நின்றதை, எல்லாமே அதனதன் அழகோடும், அழகின்மையோடும்,
அழுக்கோடும், அழுக்காறோடும், உற்றுக்கவனிக்கும் நுட்பமான நுண்ணிய உணர்வுகளே கூட படைப்பாளிக்கு வைப்பு நிதிதானே. புதுமைப்பித்தனும், , அடூர் கோபால க்ரிஷ்ணனும், எம்.டி. வாசுதேவன் நாயரும், யு. ஆர். அனந்த மூர்த்தியும் , சொல்லாத ஒன்றாய் ஞான் என்ன சொல்லவேண்டும்? மானுடவியல் பயன் பாட்டுக்காக எப்படி எழுதலாம்?
முடிவெடுத்துவிட்டாள், அப்படியே துளிக்கூட சம்சயமின்றி எழுதத்தொடங்கியபோது , பேனா ஓடியது. கொஞ்சிகொஞ்சி , இழைந்து இழைந்து, ரசித்து ரசித்து ,ஸ்க்ரிப்டை விறு விறுவென்று முடித்துக்கொடுத்தது. இனி தான் கதையே வருகிறது? என்ன புரியலையா? தமிழே, எண்டெ சுந்தரத்தமிழே? என்னென்பேன்? எப்படிச்சொல்வேன்?


[தொடரும்]

கருத்துக்களைத் தெரிவிக்க மின்னஞ்சல்
செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com