Monday, March 30, 2009

கூத்துப்பட்டறையில் - பாகம் - 3

கூத்துப்பட்டறையில் - 3


அன்று மாலை சென்னையில் மாதந்தோறும் னிகழும் இலக்கிய சிந்தனைக்கூட்டத்துக்கு, சா.கந்தசாமியும், மனைவியும் வந்து அழைத்துப்போக, மிக மகிழ்ச்சியாக இருந்தது.
இவள் கணவரோடு தேடிச்சென்று சந்தித்தவர்கள் ல.சா.ராமாமிர்தம் ,ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, போன்ற சிலரே. அதனால் அந்தக்கூட்டத்தில் சுஜாதா, திலீப்குமார், ஜெயந்தன்,செ.ரவீந்தர், [இன்னும் சிலரின் பெயர்கள் நினைவில் இல்லை] போன்றோரை
சந்தித்தது நிறைவாக இருந்தது. ஆனால் அவர்களின் நிகழ்ச்சி, ----ம்ம்ம் ----இக்கரைப்பச்சைக்கு அக்கரைப் பச்சை. நிகழ்ச்சியில் எல்லோரையும் விட ஜெயந்தனிடமே இவள் அதிகம் பேசினாள். ஜெயந்தனின் மொட்டைஎன்ற சிறுகதை [இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை] அன்றைய உச்சத்தில் இருந்த அவரது பிறிதொரு நாவல், போன்ற எழுத்துக்களால், இவளைப் பெரிதும் கவர்ந்த எழுத்தாளர் ஜெயந்தன்.
[இன்றைய நவீனக்கொழுந்துகள் ஜெயந்தனின் நாவலை ஏற்றுக்கொள்வார்களா , என்பது எண்டெ சர்ச்சையல்ல.]சுஜாதா சார், முத்துசாமியின் பெயரைக்கேட்டதும் புன்னகைத்தார். அவரது ரத்தம் ஒரே நிறம் , நாவலைப்பற்றி மட்டுமே பேசினாள். தமிழில் அவரது நடை சாகசம் இவளுக்கு வரவே வராது என்றிட, அப்படியெல்லாம் இல்லை அம்மா! நீங்களாவது, தமிழில் இலக்கியம் படைக்கிறீர்களே? என்னால் ஒருவரி கூட மலையாளம் எழுத வராதே , என்றிட, அகிலன் கண்ணன் அருகே வந்தார். அவரிடம் இவளை அறிமுகப்படுத்தினார் சுஜாதா.. வேறு சில பத்திரிகையாளர்களும் கூட அன்னிகழ்வுக்கு வந்திருந்தனர்.
மறுனால் காலை ராமானுஜம் சார் வந்து சேர மீண்டும் பசுபதி மௌனம் . பக்தியா, அடக்கமா, ஊஹ்ஹூம். தெரியவில்லை.
அன்றுமாலை,, குறும்படம் ஒன்றுக்கு செல்ல ஏற்பாடாகி இருந்தது . லெனினின் டைரக்‌ஷனில் மிக மிக கவர்ந்த சினிமா. இவ்வளவு அருமையான குறும்படம் வாழ்க்கையில்
இப்பொழுதுதான் முதன் முதலாகப் பார்க்கிறாள். நிகழ்ச்சி முடிந்து வெளியேவர, வெள்ளை வேஷ்டியும் வெள்ளை ஜிப்பாவும், பளீரென்று தேஜஸோடும் ஒருவர் அருகே வர ராமானுஜம் சார் அறிமுகப்படுத்தினார். நமஸ்காரம், என்று சிரித்தமுகத்தோடு இவளிடம் மேலும் சில வார்த்தைகளும் கூட மலையாளத்தில் பேச இவளின் உற்சாகம் தலை தூக்கியது.யார் தெரியுமா?

அவர்தான் திருப்பூர் கிருஷ்ணன்.மறுனாள் அவரது அலுவலகத்திலிருந்து நிருபர் ஒருவர் இவளை பேட்டி காண அவர, அச்சு அச்சாய், அப்படியே இவளது பாஷையிலேயே, இவளைப்பேசவைத்து பேட்டி எடுத்தார் அந்த நிருபர்.இரண்டே நாட்களில்
ஞாயிறு இதழில் அவளது பேட்டியும் தகவலும் வர,மாணவர்களில் முருகனுக்கு மட்டும் வருத்தம் . சேச்சியின் கழுத்துவரை உள்ள பாதிப்போட்டோ தானே வந்திருக்கிறது, முழுப்போட்டோவும் வரவில்லையே, என்று. இதற்கிடையே கூத்துப்பட்டறையில் இவளுக்கு சரளம் ஏற்பட்டுவிட்டது.ஆசிரியர் முத்துசாமிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்று பெயரிட்டு விட்டாள்.தென்னாற்காடு என்பது இன்னொரு மாணவருக்கு --
அதுபோலவே இவளுக்கும், அவர்கள் பெயரிட்டுவிட்டார்கள்.--என்ன பெயர் தெரியுமா? ஊஹூம் , கட்டுரை இறுதியில் சொல்கிறேன்.

அன்றுசென்னைப் பல்கலைக்கழகத்துக்கு , ராமானுஜம் , ரவீந்திரன், பசுபதி, இவள் என பேசச் சென்றனர். ராமானுஜம் சார் இவளை அறிமுகப்படுத்திவிட்டு, அமர்ந்து விட்டார். ,ரவீந்திரன் சார் பேசவில்லை. ஒரு பார்வையாளராக மட்டுமே வந்தார்.
வேறொரு பலகலைக்கழகத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவர் பேசினார். அடுத்த பேச்சாளர் பேச்சாளர் பசுபதி. பசுபதி பேசவில்லை. பசுபதி சொற்பொழிவாற்றவில்லை. ஆனால் பசுபதிதான் நவீனம் , பசுபதிதான் னாடகம், அப்படி ஸ்தம்பிக்கவைத்தான் பசுபதி. . வகுப்பில் மாணவர்களை அதட்டுவதும், எல்லாரையும் நாட்டாமை செய்தும் ,
ரவீந்திரன் சாரோடு உரிமையோடும் பழகி ,வகுப்பையே கலகலக்கவைக்கும் பசுபதி, சராசரி மாணவரல்ல. பசுபதியின் தீட்சண்யம் திகைக்க வைத்தது. பசுபதியின் தமிழ் தான் இடறியதே தவிர,பசுபதி , பசுபதி தான், அன்றைய விழா நாயகனாக இவளுக்குப் பட்டது.
அவ்வளவு ஆழமாக வீதினாடகம் , தேவராட்டம் , பற்றியெல்லாம் பேசினான்.அடுத்த பேச்சாளர் இவள். நவீனத்துவத்தில் அல்காசியின், டிராய் நாட்டுப்பெண்கள்,
சூத்ரகரின் மண்ணியல் தேர், பெட்ரோல் பிரக்டின் மனிதனுக்குச் சமம் மனிதன்தான்,
என்ற சில நாடகங்கள் மட்டுமே இவளை கொஞ்சமாவது அசைத்துள்ளது. படைப்பாக்க நுணுக்கத்தை, படிமப்பாங்கு விளக்கத்தில், தொய்வில்லாமல் பேச இவள் சிரமப்படவில்லை. னாடகம், என்ற சொற்பிரபஞ்சத்துள் அடங்கியுள்ள பனுவலை மேடை நிகழ்வாக
அமைப்பதில் இவள் ஒருபோதும் தமிழ் நாட்டில் நிங்ஙள் பின்பற்றும் பாணியை தொடரப்போவதில்லை.

சிங்கையில் எங்களுக்கே உரித்தான வாழ்வியல் அம்சம் , எஙகளின் மண்ணின் விழுமியம், பின்னிப்பினைந்த சம்பவக்கோர்வைகளே எங்களுக்கு உவப்பானவை, என்றும், இன்றைய சிங்கையின் இலக்கியப்பார்வை, என்றும் , இன்னும் கூடப்பேசிவிட்டு அமர்ந்தாள்.
மாணவிகள், பேராசிரியர்கள்,எனப் பலரும் ஆர்வத்தோடு வந்து பேசினார்கள்.
ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியேற, அடுத்தனிமிஷமே, பசுபதியின் வழக்கமான கேலியோடு, சேச்சி, எமது பேச்சு, தங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததா? என்று, பணிவோடு கேட்க, ராமானுஜம் சாரே சிரித்துவிட்டார்.
இவளுக்கு கோபம் வந்து விட்டது. இவ்வளவு ஆற்றலை வைத்துக்கொண்டு சதா என்ன கேலி? ரவீந்திரன் சார் உதவிக்கு வந்தார். கமலாதேவி, நீங்கள் பேசும் தமிழைத்தானே பசுபதி பேசுகிறார், பிறகு ஏன் கோபப்படுகிறீர்கள்? என்றாலும் பசுபதியின் ஆற்றல் என்ன லேசு பாசா? வா போ என்று இனியும் முன்போல் பசுபதியை ஒருமையில் அழைத்துப்பேச முடியுமா ? என்ற கவலையில் இவள் நிற்க, சேச்சி, ஏன்? மெளனம் ? ஏதாவது செப்புங்களேன்? என்றிட வாய்விட்டு சிரித்துவிட்டாள். மரியாதையாவது, மண்ணாவது?
போடாக்கழுதை, என்று இவள் திட்ட கச்சேரி வழக்கம் போல் களை கட்டியது.

..............[தொடரும்]

பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத்
தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

Friday, March 27, 2009

கடிதம் !!!!!

அன்புள்ள கமலாதேவி அவர்கட்கு,
உங்களின் வலைப்பதிவை நேற்றுதான் கண்டேன். இரவுமுழுவதும் கணிணிப்பெட்டியை விட்டு அந்தண்டை இந்தண்டை நகரவிடாமல் செய்துவிட்டீர்கள்.
பெண்களின் எழுத்தில் எனக்கு எப்போதுமே பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. தமிழ் நாட்டில் எழுதும் சிலரின் படைப்புக்களைப் படித்ததாலேயே மட்டுமல்ல.
ஆண்களின் தீவிரமும் ஆழ்ந்த சிந்தனையும் ஒருபோதும் பெண்களிடம் இருந்ததில்லை.
சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்துவிடுவார்கள். அல்லது முடிவை தங்களுக்கேற்ப எழுதிவிட்டு அவர்களும்
ஏதோ சாதித்த இலக்கியவாதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தும்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததேயில்லை.
ஆனால், கமலாதேவி, நீங்ஙள் நீங்களாகவே எழுதியிருக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் நீங்கள் சஞ்சரிக்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களின் தமிழ் எனக்குப் பிடித்திருக்கிறது. மானாட்டில் சந்தித்த கட்டுரைத்தொடர் அற்புதமான இடுகை.
ஆனால் புரியாத ஒரே விடயம். தங்களின் அருமையான இந்த வலைப்பதிவை ஏன், தமிழ் மணம், திரட்டி, அல்லது வலைப்பதிவாளர்
தளத்தில் கூட நீங்கள் இணைக்கவில்லை?

வாழ்த்துக்களுடன்
ம.ராமசாமி, சென்னை.



அன்புடையீர்,
நிங்ஙளின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. பெண்களின் எழுத்தில் ஆடவ எழுத்தாளருக்கே இந்த அலட்சியம் உண்டு.
அது அவரவர் பார்வை அல்லது விருப்பம் .அணுகிப் படித்ததில்லை என்பதாலேயெ என்று மட்டும் தான் சொல்வேன்,
வேறு என்ன ஞான் சொல்ல முடியும்?
மற்ற வலைத்தளங்களில் இணைப்பது பற்றி எண்டெ கணிணி ஆசிரியர்,சகோதரர் மணியத்திடம் பேசுகிறேன்.
தவிர ஞான் இப்பொழுதுதானே இந்த வலைப்பதிவைத்தொடங்கியுள்ளேன்.
நிங்ஙளின் கருத்தை யோசிக்கலாம். நன்றி.
கமலம்

கூத்துப்பட்டறையில், 2ம் பாகம்

கூத்துப்பட்டறையில்



கூத்துப்பட்டறையில மறு நாள் காலையில் உடல்பயிற்சி செய்யச் சென்றபோது, தான் ஓருண்மை புலப்பட்டது. ஆங்குள்ள மாணவர்கள் அசாத்திய வேகத்தில்
உடல் பயிற்சி செய்யும் ஆற்றல் மிகு பிள்ளைகள், இவளோ, களரியின் அரிச்சுவடியே இங்கு வந்துதான் அறிகிறாள்.. , என்னவோ உற்சாகத்தில், உடற்பயிற்சிக்கூடத்தில்
நுழைந்து விட்டாளே தவிர, களறி செய்யவே வரவில்லை. ஹா, ஹூ, என மூச்சுப்போய் போய் வந்தது. மூச்சுப்பயிற்சி மட்டும் தான் ஒழுங்காக செய்ய முடிந்தது.
நுனிக்காலில் நிற்பது, முட்டியால் சுழற்றல், , ஒற்றைக்காலில் தவம் செய்தல், என எதுவுமே, சில நிமிஷங்கள் தான் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இடுப்பை கொஞ்சம் கூட அசைக்காமல், வில்லாய்[மாபாரமாய்] வளைந்து, சட்டென காலை மடித்து, ----- படீரென்று எழுந்து, இவளுக்குப் பொத்துக்கொண்டு வந்தது அழுகை. தலையைசுற்றி சுற்றி வந்தது.இது என்ன கருமம்டா சாமி எனக்கோபம் கூட வந்தது.
ஆசிரியர் முன்னால் இயலாமையைக்காட்ட வெட்கம் வேறு.பின் என்ன? முதல் நாள் தான், னடிகர்களுக்கு மட்டுமல்ல. ஒரு டைரக்டருக்கும் , உடல்பயிற்சி அவசியம் தெரிந்திருத்தல் அவசியம். அப்பொழுதுதான் நாடகக்கூறுகள் பிடிபடும் என்று ஆசிரியர் கூற,
சத்யமாயிட்டும், என்று, இவளும் ஆமாம் சாமி போட்டவளாயிற்றே.எந்த முகத்தை வைத்து , எனக்கு தலை சுற்றுகிறது? என்று சொல்ல? இவளுக்குப் பிடிக்கவில்லை. எதுவுமே பிடிக்கவில்லை. மொழியாடல் ஒரு பெரும் ப்ரச்சினையாக இருந்தது. ரவிவர்மா, முனைவர் பட்டத்துக்கு படிக்கும் மாணவர்,குமரவேல் முதுனிலை பட்டதாரி, பசுபதி சகலகலா வல்லவன், கலைராணி நாசரோடு நடிப்புப்பள்ளியில் பயிற்சி பெற்றவர்.சந்திரா, ஜோர்ஜ், குமார், வினாயகம், முருகன்,பழனி, காசித்தம்பிரான்[கண்ணப்ப தம்பிரானின் மகன்]
என, இன்னும் [மற்றவர்கள் பலரின் பெயர்கள் நினைவிலில்லை.] பலரும் அங்கு அதி ஆற்றல் மிகு மாணவர்களாக இருந்தனர். எழுத்தில் மட்டும்தான் இவளால் சாகசம் செய்ய முடிந்ததே தவிர, தேவராட்டம், கோடியாட்டம், என, எதுவுமே தெரியவில்லை.
தேவராட்டம் கலையில் பசுபதி அதி ஆற்றல் மிகுந்தவன்.டப்பாங்குத்து என்ற பதமே பசுபதி ஆடிக்காட்டியபோதுதான் தெரிந்தது. னாடக வகுப்பில் கற்பூரமாய் க்ரஹிக்கும் ஆற்றல் பயிற்சிக்கூடத்தில் எடுபடவில்லை. மாணவர்கள் எங்கே சிரித்துவிடுவார்களோ, என்ற பயத்தில் வேக வேகமாய், பயிற்சி செய்ய முயன்று, மிகவும் களைத்துப்போனாள். மிகவும் கஷ்டமாக இருந்தது. மதிய உணவுக்கு அறைக்குள் களைத்துப்போய் நுழைந்தவள் சாப்பிடக்கூட இல்லை. .அப்ப்டியே படுத்துவிட்டாள். அடுத்த நிமிஷம் கதவு தட்டும் ஒலி. வந்த எரிச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.சே, எனக்கோபத்தோடு கதவைத்திறந்தால், என்ன ஆனந்த அதிர்ச்சி,, prof. ராமானுஜம் சார். இவளது மதிப்பிற்குரிய, வணக்கத்திற்குரிய ஆசிரியர், ராமானுஜம் சார். சிங்கை வந்தபோது கண்டதைவிட இன்னும் வயதாகியிருந்தார்.தக்‌ஷணமே அவரை நமஸ்கரித்து எழுந்தவுடன் ராமானுஜம் சார் கேட்டார்.
இங்கே எப்படி எல்லாம் செளகரியமாக இருக்கிறதா? என்று மலையாளத்தில் கேட்க, கட்டுப்பாட்டையும் மீறி, கண்கள் நிரம்பிவிட்டது.

சார், இவர்களில் சிலர் பேசும் தமிழ் புரியவே இல்லை, ஞான் தமிழ் பேசினாலும் கேலி போல் பார்க்கிறார்கள், என்றிட, ராமானுஜம் சார் தேற்றினார். சென்னையில் பெரும்பான்மை இடங்களில் இப்படித்தான் தமிழ் பேசப்படுகிறது. கமலம் பேசுவது புத்தகத் தமிழ். பாதகமில்லை. அப்படியே பேசுங்கள் என்றிட, முத்துசாமி சார் உதவிக்கு வந்தார்.
கமலாதேவி, மாணவர்களிடம் ஞான் பேசுகிறேன். கவலை வேண்டா, நல்லதமிழைக்கேட்டு ரொம்ப காலமாகிவிட்டது.உங்கள் தமிழை நாங்கள் ரசிக்கிறோம்.” என்றிட ஸ்வாஸம் மீண்டு வந்தது.
அடுத்த ஒரு மணினேரத்தில் வகுப்பு தொடங்கி விட்டது. அன்றைய வகுப்பை ராமானுஜம் சார் நடத்தினார்.மகிழ்ந்துபோய் இவள் பார்வையை இவள் விளக்கத்துடன் நிகழ்த்திட, ராமானுஜம் சார் மனமுவந்து பாராட்ட, அப்படியே ஜிவ்வென்று ஆகாயத்தில் பறப்பதுபோல் இவள் மிதந்தாள். குமரவேல், சந்திரா, கலைராணி, என எல்லோருமே கேள்விகள் கேட்க, அன்றைய வகுப்பு இனிதே முடிந்தது.அப்பொழுதுதான் இவள் கவனித்தாள்.
பசுபதி ஆசிரியர்களுக்குப்பின்னால், சற்று தூரத்தில்,எங்கோ பார்த்தபடி, விச்ராந்தியாய், அமர்ந்திருப்பதை. வகுப்பில் கலந்து கொள்ளவே இல்லை. ஒரு வார்த்தை ராமானுஜம் சாரிடம் பேசவில்லை.பிறகு ஒரு வாரம் ராமானுஜம் சார் இவளுக்கு வகுப்பு நடத்தும்போதும் இதே நிலைதான். .பசுபதியின் வாயில் முத்துக்கொட்டி வைத்திருந்தான் போலும். முத்து உதிர்ந்துவிடாமல் மெளனமாக்கும்.. அடுத்த வாரம்
ராமானுஜம் சார் புறப்பட்டுப்போய்விட, மறுனாளே டெல்லியிலிருந்து Dr.ரவீந்திரன் வர, கச்சேரி களை கட்டியது. பசுபதியை கையில் பிடிக்க முடியவில்லை.
சார், இவர்தான் எங்கள் சேச்சி, எங்கே இவரோடு தமிழ் பேசி சமாளியுங்கள் பார்ப்போம், “ என்று பசுபதி உசுப்பிவிட, ரவீந்திரன் சார் சிரித்தார். இவள் வாயே திறக்கவில்லை.தொலைபேசியில் ஒருமுறை என்னிடம் பேசியிருக்கிறீர்களே? நினைவில்லையா என்று கேட்க, மூச், ஊஹூம் இவள் பேசவேயில்லை.
இவள் வந்து சேர்ந்த முதல் நாள் ,இவளது தமிழைக்கேட்டு கேலியாய் பார்த்த மாணவர்கள், . இப்பொழுதெல்லாம் இவள் தலையைக்கண்டாலே, சேச்சி, இங்கே அமருங்கள், காலயாகாரம் சுவையாக இருந்ததா? என்று கேட்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்.
இதுவன்றோ தமிழ், இப்படியன்றோ தமிழ் பேசவேண்டும் என்றிவள் சிலாகிக்க, முத்துசாமி சார் கடகடவென்று சிரித்தார். பசுபதியோ இன்னும் ஒரு பங்கு மேலே போய், சேச்சி, இன்னும் எத்தனை னாட்களுக்கு இவர்களுக்கு இந்த தண்டனை ? என்று சோகமாய்க்கேட்க,
ரவீந்திரன் சார் புன்னகையோடு ,கமலாதேவி இங்கிருந்து போனாலும் , இங்கே எல்லோரும் இப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என்றிட, முருகனும் ஜோர்ஜும் , ஆ, வென்று மயங்கிவிழுவதுபோல் ஒருவினாடி நடிக்க,இவள் ரசித்துச் சிரிக்க, -------???

..........தொடரும்


பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத்
தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

Thursday, March 26, 2009

கூத்துப்பட்டறையில்----???

கூத்துப்பட்டறையில---- ????



மலையாள நாடகத்துறையில் மூன்று விருதுகள் பெற்ற ஆண்டு,மும்முரமாய் அனைத்து மலையாள அமைப்புக்களிலும், நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில்,
நா. கோவிந்தசாமி [இன்று அவர் உயிருடன் இல்லை], சென்னயில் உள்ள ,
கூத்துப்பட்டறை, ந.முத்துசாமியைப்பற்றி விஸ்தரித்தார்.னவீன நாடகம் குறித்து இவளுக்கு துளியும் மதிப்பில்லாத நேரம்.பின் நவீனத்துவம் என்ற பெயரில் ,
இவள் படித்த, பார்த்த நாடகங்கள்,, சினிமா, என்று எதுவுமே, இவளுக்கு ரசிக்கவில்லை.
ஒரு நாடகம் பார்க்கச்சென்றபோது,, முதல் காட்சிலேயே சிறுனீர் கழித்துவிட்டு, தொடைவரை வழித்த சரீரம் காட்டி, --அந்த நடிகன், --சே,
கண்களை மூடி மூடித் திறந்து, என்று அந்த நாடகம் முடியும் வரை விதியை நொந்து அமர்ந்திருந்தாள்.

இன்னொரு நாடகம், ---எண்டெ ஈஷ்வரன்மாரே, என்னென்பேன், எப்படிச் சொல்வேன்? தீப்பறக்கும்,கெட்ட வார்த்தையாம் [சத்தியமாய் அவளுக்குப் புரியவில்லை]
அவையோர் உறைந்து போய் அமர்ந்திருந்தனர். அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது தமிழர் ஒருவர் , காட்டம் தாங்காமல் பளிச்சென்று தரையில் காறி உமிழ்ந்தார்.
இவளுக்கோ கணவர், குழந்தைகள் அருகிருக்க, நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாகவே இருந்தது.
இன்னொரு நாடகத்தில் சிறைக்காட்சி, கைதி ஒருவரைச்சூழ்ந்து கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுப்பதாய்,----அய்யொ, அய்யோ, ஈஷ்வரன்மாரே,
இதுதான் நவீனமாக்கும், இதுதான் நவீன நாடகமாக்கும், ---உவ்வே, குமட்டிகுமட்டி வந்தது , அந்தக் கருமம் பிடித்த காட்சிகள் பல நாட்களுக்கு,
பிறமொழி நாடகங்களும் விதிவிலக்கல்ல. இவள் இந்த வெறுப்பிலிருக்க, நா.கோவிந்தசாமி விளக்கினார்.

முத்துசாமி எழுத்தாளர்.புதுக்கவிதையாளர்.னாடகத்துறையில் புதிய பார்வை கொண்டவர்.முத்துசாமியிடம் பயிற்சி பெற்றால், நிச்சயம் சிங்கையில் உங்களால்,
நாடகத்துறைக்கே புத்திலக்கியப்பார்வையைக் கொண்டு வரமுடியும், என்று விளக்கியபோது,முடிவெடுக்க ஒரு மாதம் பிடித்தது. சென்னை சென்று, கூத்துப்பட்டறையில் நுழைந்த நிமிஷம், நீண்ட நெடிய உருவமும், கொடுவாள் மீசையும் ,உர்ரென்ற தோற்றமுமாய் , வாங்கோ, என்று அழைத்தவரைப்பார்த்ததும், தொலைபேசியில் பேசிய மனிதரா இவர்? என்று திகைக்க வைத்தார் முத்துசாமி. இவளை அழைத்துச் சென்று பத்திரமாய் விட்டுவிட்டு, உடனே மற்றவர்கள் போய்விட, முத்துசாமி பேசிய முதல் வாக்கியம், உங்களுக்கு இங்கு என்ன கற்றுக்கொடுப்பதென்றே புரியவில்லை? நீங்களே எழுத்தாளர், நாடகாசிரியர்,கவிதாயினி,இங்கு உங்களுக்கு என்ன புதிதாய் கற்றுக்கொடுக்கப்போகிறோம்/ என்றபோது கவலை வந்தது.இவளது பைல், , வானொலி, பத்திரிகை பேட்டிகள்,விருதுபெற்ற ஸ்க்ரிப்ட், என , முக்கியமான சில கோப்புகள் அடங்கிய , டோக்யுமெண்ட் பையை, அவரிடம் நீட்ட, ”தேவையே இல்லை,
கோவிந்தசாமியும், ராமானுஜமும் நிங்ஙளப்பற்றி நிரம்பவே சொல்லியிருக்கிறார்கள், , என்றவர், அங்கு குழுமியுள்ள மாணவர்களைப்பார்த்து, இவர் கமலாதேவி,--------என்றும் ,------ ,சற்று அதீதமாகவே இவளை அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த ஒரு மணினேரத்தில் களரி வகுப்புக்கு பார்வையாளராகப் போய் அமர்ந்தாள்.பின் வேறு ஒரு உடல் பயிற்சி,மதிய உணவுக்குப்பின்னர், இசைப்பயிற்சி, பின்னர் நாடக நிகழ்வுப் பயிற்சிப்பட்டறை.,என முதல் நாள் தொடங்கியது. மாணவர்கள் அனைவரும் ஆசிரியரின் உரைக்கேற்ப, அடவுகளில் அபினயிக்க,, பின்னர், கேள்வி,பதில்,அதன் பின்னர் நிகழ்வின் உச்சமாய், நவீனத்துவத்தின் பார்வை என்று விளக்க, அப்படியே மாலை வரை வகுப்பு தொடர்ந்தது. ஆறுமணிக்குமேல் ஆசிரியர் விடைபெற்றுப்போக, மாணவர்களும் போக, இவளும் சமையல் அம்மாவும், கலைராணியும் மட்டுமே விடப்பட்டார்கள்,. மூன்றுமாடிக்கட்டிடம், அதில், 2வது மாடியில், இவளது அறை, ஏனோ அறைக்குள் வந்ததும் மனசு காங்கிகலங்கி வந்தது. மாணவ்ர்களில் சிலர், அன்றைய வகுப்பில் பேசிய தமிழ் இவளுக்குப் புரியவே இல்லை. அதிலும் தோட்டியாக அபினயித்தவரின் மொழி
ஒருவரி கூட புரியவில்லை.எப்படி ஒரு மாதம் இங்கு இருக்கப்போகிறோம் என்ற நினைப்பே, இவளுக்கு திகைப்பாய் இருந்தது.

மறுனாள் காலை 9 மணிக்கு இவளும் ஆர்வத்தோடு களறி வகுப்பில், உடல் பயிற்சி வகுப்பில்,என்று சேர்ந்து கொள்ள முத்துசாமி சபாஷ் என்றார். வகுப்பு முடிந்து, மதிய சாய குடிக்க எல்லோரும் கீழே இறங்கி வந்தபோது,கறுப்பாய்,ஒல்லியாய், உயரமாய், ஒரு இளைஞன்,, பழனி, வினாயகம், ஜோர்ஜ், இவர்களை ஏதோ அதட்டுவதுபோல் பேசிக்கொண்டிருக்க,கடந்துபோக முற்பட்டபோது, சேச்சி, என்றொரு விளி.
வணக்கம், என்று மொச்சைப்பற்கள் தெரிய , பளீரென்ற சிரிப்போடு, என் பேர் பசுபதி, என்றார், அந்த ஒல்லி இளைஞன்.

னமஸ்காரம் என்று முகமன் கூறிவிட்டு அறைக்குள் திரும்பிவிட்டாள்.
மதிய வகுப்பில் அன்று இவளது முறை,.இவளுக்குப்பிடித்தமான பாரதிக்கவிதையும், இவளே எழுதிய 4 மொழிக்கவிதையையும்,experimental view, ல் இவளே வாசிக்க
மாணவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. மலாய், மலையாளம் தவிர்த்து,
ஆங்கிலமும், தமிழும், இந்தியும் கூடதெரிந்த மாணவர்கள் அங்கிருந்தனர். உடனே எழுந்தான் பசுபதி. ரவிவர்மா, சந்திரா, குமார், இவர்களை வைத்து ஞான் நடத்துகிறேன் சேச்சியின் கவிதையை, என்றபோது , முதலில் நம்பமுடியவில்லை. ஆனால், அடுத்த 25 நிமிஷங்கட்கு, வரிவடிவத்தை, நிகழ் வடிவத்தில், துளிகூட லயம் கெடாமல் நடாத்திக்காட்டிய திறமையில் ஸ்தம்பித்துப்போனாள். ஆசிரியர் முத்துசாமியின் முகத்தில் வழிந்த பெருமிதம் லேசுபாசு அல்ல. என்ன சேச்சி சரியா, என்று மீண்டும் இவளைப்பார்த்துக்கேட்க, தட்ஷணமே பசுபதியை இவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

[தொடரும்]

பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத்
தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

Friday, March 20, 2009

கடிதங்கள்

கடிதங்கள்

அன்புள்ள கமலாதேவி அவர்கட்கு,
உங்களின் வலைப்பதிவை, சிங்கையிலுள்ள என் மகள் மூலம் கிடைக்கப்பெற்றேன்.
மற்றவலைப்பதிவில் உள்ளதுபோலன்றி,முழுக்க முழுக்க,இலக்கியப்பதிவாக உள்ளது ஆச்சர்யம் தருகிறது.

உங்கள் எழுத்தில் மலையாளம் விரவிக்கிடக்கிறது. முதலில் அது திகைப்பாக இருந்தாலும் , படிக்கத்தொடங்கியபின்னர், அதுவே எனக்கு சுவையான வாசிப்பாகப் போய்விட்டது. பெண்ணியம் பற்றிய உங்களின் பார்வையை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் மீண்டும் , ஒருமுறை படித்தபிறகு, இது உங்கள் பார்வை, என்று விட்டு விடுகிறேன். கடந்த சில நாட்களாக உங்களின் கட்டுரைகளைக்காணோம்.இப்பொழுது உண்மையிலேயே உங்கள் எழுத்துக்காக
ஏங்கத் தொடங்கிவிட்டேன்.தயவுசெய்து தொடருங்கள் உங்கள் எழுத்தை.

மணிமேகலை.
மும்பாய்.




அன்பின் மணிமேகலை,

உங்களின் எழுத்திலிருந்து ,னிரம்ப வாசிப்பவர்கள் என்று தெரிகிறது.
கற்றுணர்ந்த நிங்ஙளே வலைப்பதிவில் வராமல் தனிமடலில் கருத்துரைத்ததிலிருந்து, , என்னால் யூகிக்கமுடிகிறது.

எண்டெ எழுத்தை சிலாகித்தமைக்கு முதலில் எண்டெ நன்றி.
எண்டெ எழுத்தில் மலையாள வாடை, தவிர்க்க இயலாதது.--அது. எண்டெ ஸ்வாஸம்,
பிறப்பால், வளர்ப்பால், வாழ்வால், ரசனையால், உணவால், உணர்வால், கூட ஞான் மலையாளிதான். முழுக்க முழுக்க மலையாளச்சூழலில் வாழ்ந்து, வரும் ஞான் ,இப்படித்தானே தமிழ் எழுதமுடியும்?

அடுத்து, பெண்ணியம் பற்றிய எண்டெ பார்வை---
மணிமேகலை, நிங்ஙள் ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியை, என்று முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தீர்கள. பெண்ணின் சுயம் அழிக்கப்படும் இடத்து,பெண்ணை புழுவாய் அடிமைப்படுத்துமிடத்து, அவளின் உரிமைகள் மறுக்கப்படுமிடத்து ,,பெண் போர்க்குரல் எழுப்புவதில் தவறில்லை. ஆனால் பெண்ணியம் என்றால் என்னவென்றே கூட தெரியாமல், சிலர் எழுதும், அல்லது எழுப்பும் பம்மாத்து அலட்டல்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது..

இன்றும் பெரியோரைக் கண்டால் நமஸ்கரிப்பவள். என்னிலும் அறிவார்ந்தவர்கள் என்று மட்டுமல்ல, சான்றோர், கூட ஞான் தீர்மானிக்கும் வயதானவர்கள், இயலாத நிலையிலும் மற்றவர்கட்கு உதவுபவர்கள்,, என எல்லோருமே எனக்கு பெரியவர்கள் தான். அப்படியிருக்க அங்கே எங்கே வந்தது பெண்ணீயம்? னிரம்பப் பேசுவோம்.
னிங்ஙளுக்காகவே இனி தொடர்கிறேன் எண்டெ கட்டுரைகளை.

கமலம்




கமலா அம்மா அவர்கட்கு,

உங்கள் மானாட்டு அனுபவங்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் ஒரு பெருங்குறை, அந்தப்புகைப்படங்களையெல்லாம் ஏன் போடமாட்டேன்கிறீர்கள்?
உங்களின் வானொலி நாடகங்கள் சில கேட்டிருக்கிறேன். விசாரித்ததில் நீங்கள் மலையாள எழுத்தாளர் என்றார்கள். தமிழ் முரசில் உங்களின் சிறுகதைகள் படித்தபிறகே., உங்களின் வலைப்பதிவு கிடைத்தது.

சிங்கையில் கட்டுமானத்தொழிலாளியாக பணிபுரிகிறேன். என்னுடைய நண்பன், கார்த்திக்கின் கணிணியில் , எல்லா வலைப்பதிவும் படிக்க முடியும். தமிழ் நாட்டிலிருந்து வந்து , அன்றாடத் தொழிலாளியாகப் பணிபுரியும் எனக்கு, வானொலியும் ,கணிணியும் தான் ஒரே ஆதரவு. அம்மா, நீங்கள் நாடகாசிரிசிரியர், எனக்கும் நாடகம் எழுதும் ஆர்வம் உண்டு. திருச்சியில் படிக்கும்போது, நாங்கள் மாணவர்கள் சேர்ந்து நாடகங்கள் எழுதி அரங்கேற்றியிருக்கிறோம். சிங்கையில் எனக்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

செந்தில்குமார்,
சிங்கப்பூர்



அன்புள்ள செந்தில்குமார்,

அம்மா என்றழைத்த நிமிஷமே எண்டெ மகனாகவே வரித்துவிட்டேன் நிங்ஙளை.
எண்டெ மானாட்டு போட்டோக்களையெல்லாம் பதிவில் சேர்ர்க்கும் எண்ணமுண்டு. ஆனாலும் அதுகூட தேவையா, என்றும்
சிலசமயம் தோன்றிவிடுகிறது.
தமிழ்னாட்டிலிருந்து இங்குவந்து பணிபுரியும் அலுவலுக்கிடையேயும் நண்பனின் கணிணியில் , இலக்கியம் ரசிக்கும் நின்டெ ஆர்வம் , மனதை நெகிழ்த்துகிறது.
செந்தில், நாடக சம்பந்தமான நிண்டெ கேள்விகட்கு , தொலைபேசியில் விளக்குகிறேன்.
தொலைபேசி எண்--67624055

கமலம்


பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத்
தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:
kamalam.online@yahoo.com

Sunday, March 8, 2009

பெண்ணின் பெருந்தக்க

பெண்ணின் பெருந்தக்க


டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான எழுத்தாளர்கள் என்றால், ஞான் மூன்றாம்தர எழுத்தாளனே, என்று தன்னைப்பற்றி, ஒரு ஆங்கில எழுத்தாளர், கூறியுள்ளார்.
மரபற்ற மரபின் எச்சங்களாக உதிரும் பேதைமையை, அப்படியே எழுத்தில் கொண்டுவரும் ,சில எழுத்தாளர்களின் மொழியழகில், சில கதைகள் வெற்றி பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே இலக்கியம், என்ற இளைய தலைமுறையினரின்
எதிர்பார்ப்பைத்தான் அவ்வப்போது திருத்த வேண்டியுள்ளது.எந்த நல்ல சிறுகதைக்கும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் , தகுதியும் , பெருமளவில் உலக நடப்பைச் சார்ந்திருக்கும் தன்மையும், இருத்தல் வேண்டும்.
சமூகப்பிரக்ஞையை அலசுவதும், மண்ணின் விழுமியம் கோலோச்ச எழுதுவதும், மட்டுமல்ல இலக்கியம். .தன்னுடைய சிந்தனையை வாசகர்களிடையே, கதையாடலாகக் கொண்டு வரும்போது, சமகாலப் பிரக்ஞையை, கதைமாந்தர்களின் உணர்வுகளோடு,, அப்படியே உள்வாங்கி எழுதும்போதுதான் , அந்த எழுத்து வாசகனை சென்றடைகிறது.
19ம் நூற்றாண்டில்தான் அசாமிய மொழியில் நவீன இலக்கியம் தோன்றியது. 1947க்குப்பிறகுதான் ஒரியாவில் புதுக்கவிதையே
பிறந்தது.கமலாதாஸ், அம்ருதா பிரீதம் போன்றோர், சமுதாய எதிர்ப்பை மீறியும் ,மரபைமீறிய வாழ்க்கையே வாழ்ந்தாலும், இலக்கியத்தில் அவர்களின் கடுமையான உழைப்பே அவர்கள் பேசப்பட்டதற்குக் காரணம். தாய்மொழியான பஞ்சாபியில் எழுதுவதைவிட , இந்தியிலும் ஆங்கிலத்திலும், எழுதியதாலேயே, அம்ருதா பிரீதத்தின் எழுத்து கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் பன்முகப்பார்வை, அல்லது அதுபற்றிய அறிவின் அலசல் மிக முக்கியம். அருந்ததிராயின் சின்னத்தெய்வங்கள் கூட மலையாளிகளிடையே பெரும் எதிர்ப்பை ஈட்டிய நாவலே.

சிரியன் கிறிஸ்டியன்களின் வாழ்வியலை,துளிக்கூட ஒளிக்காமல் , துணிகரமாய் தன் இலக்கியம் மூலம் உலகுக்கு எடுத்துரைத்தவர் அருந்ததிராய். இந்த நிதர்சன எழுத்தில், [தலீத்தியத்தை அறிமுகப்படுத்தும் ]சிவகாமி,பாமா, போன்றோருக்கும் பங்குண்டு.அம்பையின் எழுத்தில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை அறிவுபூர்வமாகத் தகர்த்து,ஆக்கபூர்வமான படைப்பாற்றலில் துலங்கும் அழகைக் காணலாம். இதுவே அவரது பலமும் கூட. பெண்ணியல்வாதத்தை முன்னிலைப்படுத்தும் எழுத்தை,ராஜம் கிருஷ்ணன் , அம்பை, காவேரி, வாஸந்தி, திலகவதி,,தொட்டு, இன்றைய உமா மஹேஸ்வரி வரை, அந்தந்த காலகட்டதுக்கே உரிய,பரிமாணங்களோடு இயைந்தே எழுதியுள்ளார்கள், என்பதையும் மறுப்பதற்கில்லை.

1915க்கும் 1917க்குமிடையில் குளத்தங்கறை, அரசமரம் எழுதிய, வ.வே.சு. ஐயரின் எழுத்துக்கள்தான் , தமிழ்ச்சிறுகதை சரித்திரத்தைத் தொடங்கியது.பாரதிக்குப் பிறகு, புதுமைப்பித்தன், கு.ப.ரா,மெளனி,பி,எஸ்.ராமையா, ந.பிச்சைமூர்த்தி,
சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், ல.ச.ரா. சுந்தர ராமசாமி,தி.ஜானகிராமன்,அசோகமித்திரன்,சுஜாதா,பிரபஞ்சன், ஜெயமோகன்,
அழகிய பெரியவன் , என இன்று எழுதித் தீர்க்கவே முடியாத, எழுத்தாளர்களிடையே, நவீன இலக்கிய அலசலுக்கே, முன்னோடியான க. நா.சு.--,அவர் மறைந்தாலும் , அவரது இடத்தை இம்மியும் குறைக்காமல் , நிரப்பிவரும் வெங்க்ட் ஸ்வாமினாதன் போன்ற ஆய்விலக்கியவாதிகளின் தரமான அலசல்தான் இன்று பலரையும் ,
திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆண்கள் என்றாலே அறிவியல் , பெண்கள் என்றாலே சமையல்கட்டு,,என்ற காலம் மலையேறிவிட்டது. தொழில்னுட்பம் முன்னேறிவிட்ட இன்றைய காலகட்டத்தில்,ஆணுக்கு சரினிகர் சமமாக,கல்வியிலும், அலுவலகத்திலும் கிடுகிடுவென முன்னேறியுள்ள பெண்களை சமுதாயம் புதிய பார்வையோடு வரவேற்கிறது. பாரதி, பெரியாரின் பெண்ணியப்பார்வை, நடைமுறையிலும் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாதை வகுக்கத் தொடங்கியபின்னர், எழுத்தாளர்களின் பேனாவும் தன் பங்குக்கு வஞ்சகமின்றி உழைத்துள்ளது.
யுனெஸ்கோ நிறுவனம் 1975ம் ஆண்டைப் பெண்கள் ஆண்டாக , அறிவிக்கத் தொடங்கியபின்னர், எல்லா இடங்களிலும் பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் சார்ந்த விழிப்புணர்வுத்திட்டங்களும்,, பெண் சுதந்திரத்துக்கான, நல்லியக்க அமைப்புக்களும் ,
இன்றைய பெண்களுக்கு அசாத்திய, தன்னம்பிக்கையை வளர்த்து விட்டதும் கூட சுடரொளியே.

ஆணுக்கு சரி நிகர் சமமாக பேசக்கூடத்தயங்கிய காலகட்டம், இன்றைய இளையரிடையே, நகைச்சுவை விருந்தாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. திருமணங்களில் கூடதுன்பம் தோய்ந்து , வெளியேறத்தெரியாமல், உழன்று கிடந்த நிலையல்ல இன்று.வேண்டாமென்றால், சட்டம் மூலம், பேசிப்பிரிந்து போகும் சுதந்திரம் இன்றைய பெண்களுக்குண்டு.
இன்னும் ஒருபடி மேலே போய், தாலிகட்டிக் கொள்ளாமலே, {சேர்ந்து வாழ்தல்}-[living together]வாழ்ந்து பார்த்து விட்டு,பிடிக்காவிட்டால், தக்‌ஷணமே பிரிந்து செல்லும் வாழ்வியலையும்,இலக்கியவாதிகள் தங்கள் எழுத்துக்களில், நவீனத்துவ பார்வையில் எழுதுகிறார்கள். ஒரு பெண்ணின் நெருக்கடியான தருணங்களை,சிறுமை, பெருமைகளை,பண்டைய கலாச்சாரங்களிலிருந்து, இன்றைய கலாச்சாரம் வரையுள்ள பார்வையைக்கூட,பன்முகப்பார்வையாய் , அந்தந்த மொழிக்கே உரித்தான
லாவகத்தோடு எழுதியுள்ள, ஆண், பெண் எழுத்துக்களின் மீது பெருமிதமே ஏற்படுகிறது.
ஆண்கள் எழுத்தைவிட, சில பெண்ணிய எழுத்துக்களில்,ஜாதக தோஷம், வரதட்சிணைக்கொடுமை, பெண்சிசுக்கொலை, ஆணாதிக்க எதிர்த்தல்,, வலிந்து திணிக்கப்பட்ட அடிமைத்தனத்துக்கு எதிரான போர்க்குரல்,கற்புகுறித்த எள்ளல்,என எல்லாமே வீர்யம் மிக்க கோஷங்களாகவே ஒலிக்கிறது.

பெண் சிந்திக்கக் கற்றுக்கொண்டாள்.சுதந்திரமான காற்றை சுவாஸிக்கக் கற்றுக் கொண்டாள்.கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிக்குப்பிறகு, ஆண்களை விட பெண்களின் பெண்ணியல் எழுத்துத்தான் தீவிரமடைந்துள்ளது. இலக்கியம் வழி சில்லென்ற தென்றல் காற்றை சுகமாய் சுதந்திரமாய் அனுபவிக்கும், அனைத்துப்பெண்களுக்கும் இந்த சாஹித்யக்காரியின் மனமுவந்த வாழ்துக்கள்.


[முற்றும்]


பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத் தெரிவிக்க
மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:- kamalam.online@yahoo.com

Monday, March 2, 2009

பெண்ணலம் பேசுதல் காண்மின்

பெண்ணலம் பேசுதல் காண்மின்


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும், புதிய ஒளியை அறிமுகப்படுத்திய ஒரே பெண் எழுத்தாளர், வை.மு. கோதைனாயகி அம்மாள் மட்டுமே. பெண்கல்வி கடும் எதிர்ப்பிலிருந்த காலத்
திலேயே,26 ஆண்டுகட்கும் மேலாக எழுத்துப்பணி, 10,000பிரதிகட்குமேல் விற்ற ஜெகன்மோகினி பத்திரிகையை 34 ஆண்டுகளாக, நடத்திவந்தவர், 1937லிருந்து சொந்த அச்சகமும் வைத்திருந்த பெருமையாளர், சுதந்திரப்போராட்டத்தில் 1932ல் சிறைசென்றவர்,
சங்கீத அகடெமியில் இசைக்கச்சேரி நடத்தியவர்,என இவ்வளவு சிறப்பும் பெற்ற, ஏன், பெண்கள் மறுமலர்ச்சிக்கே முன்னோடியாகத் திகழ்ந்த இப்பெண்மணியை, இலக்கிய உலகம் இருட்டடிப்பு செய்தே இவ்வளவுகாலமும் இருந்திருக்கிறது.

அண்மையில்தான் இவருக்கு ஏதோ விருதுகொடுக்க அரசு மனம் கனிந்ததாம்.
பல ஆய்வாளர்களின் கட்டுரையில் கோதை நாயகி அம்மாவின் பெயரைக்காணவே முடியவில்லை. எந்த அரசியல்வாதியும் பெண்விடுதலைக்காகப் போராடிய,இந்த அம்மையாரின் பெயரை நினைவுகூர்ந்ததுகூட இல்லை.
இலக்கியவாதிகளிடையே உள்ள காழ்ப்புணர்ச்சியும், அரசியல்வாதிகளுக்கே இயல்பான, சுயனலத்தாலேயே இவரது தியாகம் கூடப் பேசப்படாமல் போய்விட்டது தான் நெஞ்சில் உறையும் சோகம்.

டாக்டர் ல்க்‌ஷ்மி-- இந்தப்பெயர் கூட தமிழிலக்கியத்தில் தவிர்க்க இயலாத பெயரே.சுயசரிதம் எழுதிய எழுத்தாளர்களில், கமலாதாஸ்,அம்ருதாப்ரீதம்,போன்று,லக்‌ஷ்மியின் சத்தியசோதனை கவனிக்கப்படவேண்டிய நூல்.இன்றைய அம்பை, காவேரி, சிவகாமி, பாமா,
வின் வீச்சுபோல அன்றைய லக்‌ஷ்மியின் எழுத்தின் வீர்யம் ,ஆண், பெண், என்றபாகுபாடே இன்றி,வாசகர்களை ஈர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாவல்கள்,ஆயிரத்துக்கும் மேற்பாட்ட சிறுகதைகள், , சில மருத்துவ நூல்களும் கூட எழுதியுள்ள,லக்‌ஷ்மியின் ஒரு காவிரியைப்போல், நாவலுக்கு,சாகித்ய அக்டெமி பரிசு கிடைத்துள்ளது.
இன்றைய அசுர இலக்கிய வளர்ச்சிக்கு முன்னேயும், அப்படியொன்றும் இவரது எழுத்துக்கள் மங்கிவிடவில்லை.இன்றும் சிங்கை நூலகங்களில் பல இல்லத்தரசிப்பெண்களால்,இவரது நூல்கள், விரும்பிப்படிக்கப்படுவதே கூட இவரது எழுத்தின் ஈர்ப்புக்கு, ஒரு சான்று.

கடந்த நூற்றாண்டில், 1960களில் பெண்ணின் பால்விழைவு குறித்து, அன்றைய வாழ்வியலின் கண்ணோட்டத்தில், தேர்ந்த புனைவோடு கதை சொல்பவர் அண்மையில் மறைந்த கிருத்திகா அம்மா.இவரது மற்ற நூல்களை விட,வாசவேஸ்வரம்
அன்று பேசப்பட்ட நாவல் என்பதில் ஐயமேயில்லை. பின் நவீனத்துவம் அன்று அதிகம் அறிமுகமாகாத காலகட்டத்தில், பழுக்கக் காய்ச்சிய உரைவடிவமாக கருவூலத்தை எதிர் பார்க்கமுடியவில்லை., எனினும் மணமான பெண்ணின், உணர்வுகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு கொடுக்காத கணவன்மார்களாக வரும் சந்திரசேகர அய்யர் ஒருபுறம்,
காலையிலிருந்து மாலைவரை தூங்கி , இரவில் படு சுறுசுறுப்பாய், சீட்டாடவும் ,ஊர்சுற்றவும், கிளம்பும் சுப்பையா மறுபுறம், என ஊரே ரத்தம் உறிஞ்சப்பட்ட ஆண்களாய், மந்தபுத்தி மக்காளர்களாய், ரோகிணிக்கு தோன்றுகிறது . பிச்சாண்டி மட்டும் வாட்டசாட்டமாய், கரணை, கரணையாய் காலும் கையுமாய் ,னடமாடும் போக்கிரி.
ஆனாலும் இவன்தான், ரோகிணியின் உள்ளம் கவர் கள்வன் .கற்புனெறிக்கு மட்டுமே பாஸ்மார்க் போடும் கதைசொல்லிகள் வாழ்ந்த காலகட்டத்தில், கிருத்திகா அம்மா துணிகரமாக எடுத்தாண்ட உத்தி அசர வைக்கிறது.

கதைபேசவில்லை.தொட்டுத்தழுவவில்லை. மனதால், கண்களால் , மட்டுமே இருவரும் உருகி வழிகிறார்கள். சந்திர சேகர அய்யரை, சுப்பையாவே கொலை செய்தாலும் ,பழி பிச்சாண்டிபேரில் விழ, கொலையுண்டுகிடக்கும் கணவனையும் மறந்து,
பாட்டாவிடம் பிச்சாண்டிக்காகப் பேசவரும் ரோகிணியின் பரிதவிப்பில், அலக்க, மலக்க, கதை சுவாரஸ்யமாகவே போகிறது. இன்னாவலில் கதாகாலக்‌ஷேப தாத்தா சுப்புக்குட்டியும், நள்ளிரவில் சுண்டலோடு சின்னப்பெண் ஆனந்தாவைத் தேடிப்போவதும்
அதுக்குக்கூட, மனைவியை தைரியமாக ஆளத்தெரியாமல், பயந்து, பயந்து , தொட்டு, சட்டென்று திரும்பிக் கொள்ளும் சுப்பையாவை,சீ, தூ, என வெறுப்பை உமிழும் விச்சு,என, -------இப்படி, இப்படியாய், கதை --------ம் ம் ம் ம்,
ஆச்சர்யம் தரும் ஒரே விஷயம், இன்னாவல் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இன்றும் வாசிக்க முடிகிறது என்பதே, நாவலின் இருத்தல்தானே?

காவேரியின் “ இந்தியாகேட், ”பிராமண சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை அப்பட்டமாய் தோலுரித்துக்காட்டும் , புனைவு. பெண்ணடிமைத்தனத்தை மெளனமாக வாள் கொண்டு வெட்டும் இக்கதையை பெண்கள் மிகவும் நேசிப்பர். படித்து, கணவனைப்போலவே பாங்கில் உத்தியோகம் பார்க்கும் பெண்ணை , புகுந்த வீட்டினர் செய்யும் அதிகாரமும், படிப்பறிவில்லா, மற்ற மருமகள்களைப்போலவே, ஆண்கள் சாப்பிட்ட மிச்ச எச்சிலும்,பானையின் அடி வண்டலையும், வழித்துப்போட்டு சாப்பிட வேண்டிய கண்றாவியில், வாயிலெடுக்கவருகிறது, என்ற கதாசிரியரின் வரிகளில், நமக்கும் குமட்டிக்கொண்டு வருகிறது. இருண்ட குக்கிராமத்தில் புக்கக வீட்டின் , ஆணாதிக்கம் இப்படியென்றால், வாழ்க்கைத்துணைவனாக வந்தவனோ, டில்லியில் அவளுடன் வீட்டுவேலையிலோ,மன ஆறுதலிலோகூட, எதிலுமே பட்டுக்கொள்ளாமல்,அவள் வாங்கும் சம்பளத்துக்கும், அவள் உடலுக்கும் மட்டுமே, உரிமை கொண்டாடும் ,வெட்கம் கெட்ட ஒரு பேடியிடமிருந்து, துணிகரமாக பிரிந்து போக முடிவெடுக்கிறாள். தனிவீடு வாங்கி சுதந்திரமாய் வாழும் முடிவை, அவள் தீர்மானிப்பதிலிருந்து,இன்றைய பெண்களை, கல்வியும் உத்தியோகமும், மரபு பேசும் மெளடீகத்திலிருந்து, எப்படிக் காப்பாற்றுகிறது,என்பதை விளக்கும் அருமையான கதை இது. விறு விறுப்பும், சுவாரஸ்யமும் , பக்கத்துவீட்டு சம்பாஷணையை, சர்வ சாதரணமாய் சுவைப்பதுபோல்,கதையை கொண்டுபோகும் இயல்பு இக்கதையின் சிறப்பு.
இதுவே கதாசிரியையின் வெற்றியும் கூட.

கன்னடத்தில் வெளிவந்த ’செளகந்தியின் சுவகதங்கள்” எனும் சிறுகதை , அண்மையில் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த கதை. சுவகதம் என்றால் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பேச்சு, என்று கன்னடத்தில் விளக்கம் தருகிறார் ஆசிரியை வைதேகி. தங்கைகளுக்குத் திருமணமாகியும், செளகந்திக்கு மட்டும் திருமணமாகாமல் நின்றுபோக, யாரையும் காதலிக்கவும் தெரியாமல், வாழ்ந்து தொலைக்கும் அவள்,
உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாமல்,வியூகம் அமைத்து தாக்கும் சமுதாயக்கூட்டிலிருந்து, மூச்சுமுட்டிவெளியேறி, தனித்து வாழப்போகுமிடத்தும், கொண்டுவிடவரும் தந்தை,செளகந்தியை வாயில் விரலை வைத்தால்கூட கடிக்கத்தெரியாது, எனும் பாணியில் வீட்டுக்காரியிடம் அறிமுகப்படுத்திவிட்டுப்போக,தனித்துக்கிடக்கும் இரவுகளில் எல்லாம் காத்திருக்கிறாள் செளகந்தி உறங்காது., --
இன்றாவது ஏதாவது நடக்குமா? வீட்டுக்காரியும் ஒருனாள் மகள் வீட்டுக்குப் போய்விட,படப்டப்போடு காத்திருக்கிறாள். நள்ளிரவு, பின்னிரவும் கழிந்து,
விடியல் ஜாமம் 5 மணிக்குக் கதவு தட்டும் சத்தம் கேட்டு, போதையோடு கதவைத் திறக்கிறாள் செளகந்தி. வாசலில் நிற்பது அப்பா. பின்னால் அம்மா.எதிரில் சாலை கறுப்பாக நஞ்சேறிக்கிடப்பதாய் கதை முடிகிறது. மரபு ரீதியிலான வாழ்க்கையில் அமிழ்ந்து,
சுய தாபத்தையும் இச்சையையும் கூட அடக்கி,அந்த சிக்கலிலிருந்து விடுபட முயலும், யதார்த்தத்தை, துளிகூடப் பிசிறாமல், வெகு நுட்பமாய் சித்தரிக்கும் இச்சிறுகதையை எழுதியவர், வைதேகி எனும் பெயரில் எழுதும் ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி.
குடும்பத்தின் ஆணாதிக்க சூழலில் சிக்கி, வெளியேற முடியாமல் தவிக்கும் பெண்களின் மன உளைச்சலை, சின்ன சிடுக்கும் இன்றி , மிக அழகாய் எழுதியுள்ளார் வைதேகி , கன்னடத்தில் , மலயாளத்தில், என எந்த மொழியில் எழுதினாலும் தரமான
எழுத்தை வெண்சாமரம் வீசி வரவேற்கவேண்டாமா? ஒவ்வொரு எழுத்தாளரும் தடவிப்பெண் நலம் பேசுதல் காண்மின்!!!

[ தொடரும்]

பின்னூட்டத்தில் வர இயலாதர்கள், கருத்துக்களைத் தெரிவிக்க மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரி:- kamalam.online@yahoo.com.