Monday, February 23, 2009

பெண்ணியலில் பூம் பின்னல்

பெண்ணியலில் பூம் பின்னல்

தமிழ்ச்சிறுகதைகளை உலக அளவுக்கு எடுத்துச் சென்றவர் , புதுமைப்பித்தன் எனில்,ஜெயகாந்தனின் இலக்கியப்பிரவேசம் தமிழ்க்கூறு
நல்லுலகுக்குக் கிட்டிய மாபெறும் பேறு, என்பதில் ஐயமேயில்லை. பிராமணர்கள் கூட எழுதாத, பிராமண வாழ்வியலை, எவர் மனதும் புண்படாதபடி அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. பின் நவீனத்துவத்தின் உச்சம் என சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்களைக் கூட,
ஜெயகாந்தனின் பின்வரவாகவே கருத வேண்டியுள்ளது.
புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், அகிலனின் எரிமலை, ஜெயந்தனின் மொட்டை, ப்ரபஞ்சனின் நேற்று மனிதர்கள்,
குஷ்வந்த் சிங்கின் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த ’அனைத்தும் கடந்து,’ எனும் பஞ்சாபிக்கதை,சிந்தி மொழியில் ராம் பாட்டியாவின்,
”காதலினால்”, எனும் ஆண்பெண் உளவியல் ப்ரச்சினையை மயிலிறகால் வருடும் கதை, வண்ணனிலவனின் 2 பெண்கள், , என அன்றிலிருந்து இன்றுவரை, ஆடவ எழுத்தாளர்களின் பெண்பால் பற்றிய பல பல கதைகள் , அக்கறையோடு கூர்ந்து கவனிக்க வைப்பவை.

இலா.வின்சென்ட் தமிழில் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்.தமிழிலக்கிய பர பரப்பில், சிற்றிதழில் மட்டுமே எழுதியவராக அறியப்படும்,
இலா. வின்சென்ட்,டின்” ரவுக்கை” சிறுகதையைபடித்தபிறகு, அக்கதையின் பிரமிப்பிலிருந்து மீண்டெழவே சில நிமிடங்கள் பிடித்தது. இன்று வெகுஜன பத்திரிகைகளில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் பலரும் கவனிக்கத்தவறும், அல்லது கைவிடும் உத்தி உருவகம்.
ஒரு சிறுகதைக்கு, உத்தி, உள்ளீடு, எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், புனைவியல் இலக்கியத்துக்கு உருவகம்.
கதை புனையும்போது இஷ்டத்துக்குப்போய் முடிக்காமல், கதையின் தொடக்கமும் முடிவும் வருமுன்னே, இடையிலான பயணத்தில் கதைச்சூழலை, பூம்பின்னல்போல் உருவாக்கி எடுத்ததில் ரவுக்கை அருமையான சிறுகதை.
ரவுக்கையே அணியாத ஒரு கிராமத்தின் கட்டுப்பாட்டையும் மீறி, காலேஜில் படிக்கும் தாய்மாமனும் ,அவளுக்காகப் பேசிவைத்துள்ள அவளது முறைப்பையனுமான முத்துசாமி , பொம்மக்காவுக்கு யாருமறியாமல் ரவுக்கையும் பிராவும் வாங்கிக்கொடுக்க, மாமனின் ஆசையை மீறமுடியாமல்,
அவனுக்காக ரவுக்கை போட்டுக்காட்டுகிறாள் பொம்மக்கா. முத்துசாமி ஆசையோடு அவளைப்புகைப்படம் எடுக்க, அது அவள் அம்மாவின் கையில் மாட்டி, அடிஅடியென பொம்மக்காவை போட்டுபுரட்டியெடுக்கிறாள் அம்மாக்காரி [கிராமத்தின் கட்டுக்கோப்பை மகள் குலைத்துவிட்டாளாம்.]
முத்துசாமி பிடிவாதமாக ரவுக்கை அணியும் பெண்ணைத்தான் கட்டுவேன் என்று தீர்மானித்து,அசலூரில் போய் மணந்துகொண்டு திரும்ப,
ஊரேகூடி அவர்களை குற்றவாளியாக்க, எரிமலையாய், வந்து நிற்கிறாள் பொம்மக்கா.
’ஆம்பிளையாயிருந்தா என்னை ரவுக்கை போட வச்சு கட்டியிருக்கணும்.அதுக்குத் துப்பில்லாம,எங்கேயோபோய் ஒருத்தியைக் கட்டியிருக்காரு.
இதுக்குப்போயி ஒரு பஞ்சாயத்து,--தூ !!!,எனக் கூட்டத்தையும் முத்துசாமியையும் பார்த்துக் காறி உமிழும் பொம்மக்கா, அங்கேயே மாமன் வாங்கிகொடுத்த ரவுக்கையை அணிய முற்பட, பளார் பளாரென பொம்மக்காவை அறைந்த தாயைதள்ளிவிட்டு, தாய் எழுந்து வருவதற்குள்,பிராவை மாட்டி,
ரவுக்கையை, போட்டு விடுகிறாள் பொம்மக்கா, எனக் கதை முடிகிறது.
என்ன அழகான கதையிது, கட்டுசெட்டான வாக்கிய கொஞ்சல்களும், தொட்டுதொட்டு போகும் கதைப்பின்னலும் மிகவும் கவர்கிறது.
ரவுக்கை அணியாத கிராமங்களும் தமிழ் நாட்டிலுண்டு, அங்கே ஒரு இளம்பெண்ணின் ரவுக்கை அணியும் தாகம்,அதுவும் ஆசைப்பட்ட மாமனுக்காக, அவள் படும் துயரம்,அப்படியும் அவளைப்புறக்கணிக்கும் மாமன்காரனை நோக்கி வீசும் கோபாக்னி, ஒட்டுமொத்த, ஆண்வர்க்கத்தையே சாடுகிறது. இலா.வின்சென்ட்டின் நுணுக்கமான பார்வையில் வரிக்குவரி, நம்மை வெலவெலக்க வைக்கிறது.
சிற்றிதழிலும் அருமையான எழுத்தாளர்களின் கதைகள் மலர்கிறது. இந்த எழுத்தாளர் இன்னும் கூட சற்று முயன்றால்,
இவர் தமிழிலக்கியத்தில் நிச்சயம் முத்திரை பதிப்பார்.
அடுத்து காஷ்மீரிமொழியில் ஹரிகிருஷ்ண கெளல்லின் ”சூரிய ஒளியில்”சிறுகதையில், வயதான கிராமத்து மூதாட்டி, கிராமத்தில் வாழும்,
ஏழ்மையில் உள்ள மூத்த மகனிடமிருந்தும், முதியவள் சதா மூதேவி எனத்திட்டும் ,அவன் மனைவியிடமிருந்தும்,, ஒரு மாறுதலுக்காக,
டில்லியிலுள்ள இளைய மகனின் வீட்டிற்கு வருகிறாள். அங்கு வெயில் அவ்வளவு இதமாக இருக்கிறது.கிராமத்தின் குளிர் இல்லை.
வறுமை, தட்டுப்பாடு, எதுவுமே இல்லையென்றாலும் ,இளைய மருமகளின் விட்டேற்றித்தனம்,மேல்தட்டு நாகரீகம்,ஒவ்வாமை,, என எல்லாமாக அலைக்கழிக்க, அப்பொழுதுதான்மூத்தமகனின் அன்பு, வசதிக்குறைவால் வாடும் பேரனின் ஏக்கம், மூதேவி எனக்கரித்துக்கொட்டிய மருமகளின் அடங்கிப்போகும் குணம்,பணிவு, , எனும் அந்த ஏழ்மையே தான் தனக்குப் பொருத்தமான இடம் என, கிராமத்துக்குப்போக
முடிவெடுக்கிறாள்.
ஆனால் போவதற்குமுன், கொஞ்சம் வெயிலை மட்டும் கொண்டுபோக முடிந்தால் என, ஏங்குவதாக கதை முடிகிறது.
ஆற்றொழுக்கான ஆங்கில நடையில், நெஞ்சைத்தழுவும் சிறுகதை இது.
இப்படிப்பல ஆண்கள், பெண்களைப்பற்றி எழுதியிருந்தாலும், பெண்கள் பெண்களைப்பற்றி எழுதும் எழுத்தைப் படிக்கும்போதுள்ள சுகமே
அலாதிதான்.தமிழில் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ,கமலா மார்க்கண்டேயா, எனும் பெயர். இவர்தான் முதன்முதலாக ,
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒடுக்கப்பட்டவரின் அனீதியை, , ஒரு பெண்ணின் பார்வையில் எழுதி சலசலப்பைக்கொண்டுவந்தவர்.
தலித் இலக்கியம் ஒரு தலித்தால் மட்டுமே எழுதமுடியும் எனும் கூற்றை, இரண்டு துண்டாக முறித்துப்போட்டவர் கமலா மார்க்கண்டேயா, எனும் பிராமணப்பெண். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினையை, உணர்வுகளை, வாழ்க்கை அவலத்தை,எழுதுவதுதான் தலித் இலக்கியமெனில்,
1970ல் இவர் எழுதிய,இரு கன்னியர் எனும் நாவலை ப்புறந்தள்ளவே முடியாது.
ஆங்கிலத்தில் வெளிவந்த Nectar in a sieve பற்றி, N.Y.Times, இப்படி எழுதுகிறது.
probably the ablest indian novelist now writing in english.... author of the finest novel by an indian i have ever read,very mooving....[N.Y.Times.]
என் மேனியைத்தீண்ட, கணவரின் விரல்கள் துடிதுடிப்பதைக்கண்டு, என்னுடைய அங்கங்கள் மலர்ந்து கொடுத்தன.,
என ஏழைகளுக்கே எளிதாகக் கிடைக்கும் சுகத்தை மறைக்காமல் எழுதியுள்ளார்.வயிற்றுப்பட்டினியால் வழிதவறிப்போனதை
நியாயப்படுத்தி கதை நாயகிக்காக இப்படி எழுதுகிறார்.
இன்றைக்கு, நாளைக்கு என, இனி ஒவ்வொரு நாளும் இப்படித்தான், இனியும் பட்டினி கிடக்க என்னால் முடியாது., எனும் குருதி கொப்புளிக்கும் வரிகளால் சமூகத்தின் மீது வீசும் பகிரங்கக் குற்றச்சாட்டில்,கமலா மார்க்கண்டேயாவின் தனி முத்திரையைக் காணலாம்.
இரு கன்னியர்கள் எனும் இன்னாவல், சென்னைப்பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்பாடமாக வைக்கப்பட்டு, பிறகு அரசு தடை செய்துள்ளது, வியப்பாக உள்ளது.
இன்று பெண் எழுத்துக்கள் என்ற பெயரில் வரும் அழிச்சாட்டியத்தையெல்லாம், இதுவன்றோ, நவீனத்துவம் என, கொண்டாடலாமாம். ஆனால் கதைனாயகியே கதை சொல்வதுபோல் சமுதாய நிர்வாணத்தை தோலுரித்துக்காட்டிய இன்னாவல் அன்று தடை செய்யப்பட்டுள்ளது புரியாத புதிரே.
கமலாமார்க்கண்டேயா, டெய்லர் எனும் ஆங்கிலேயரை மணந்து தற்போது லண்டனில் வசித்துவருகிறார்,
அவருக்கு எண்டெ மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

[தொடரும்]

Thursday, February 19, 2009

ஆண்களின் பார்வையில் பெண்மை

ஆண்களின் பார்வையில் பெண்மை


அமரர் சிட்டி அவர்களின்” கெளரவ நாசம்” எனும் சிறுகதை எந்த ஆண்டில் எழுதப்பட்டது, என்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. ஆனால்
நிச்சயம் 40, 50, ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆச்சர்யமே ஆங்குதான்.
இந்த எழுத்தாளர் அந்தக்காலகட்டத்திலேயே , குழந்தை மணத்தை எப்படி எதிர்த்திருக்கிறார், பாரதி கண்ட பெண் விடுதலைக்காக,
எப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார், என்பதை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது.
திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் மணம் செய்த லெட்சுமியின் தவிப்பும், ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டோம் என்ற அகந்தையிலேயே, லெட்சுமியை அலட்சியப்படுத்தும் பெற்றோரோடு சேர்ந்து கொண்டு துள்ளும் ராஜகோபாலனுமே கதை மாந்தர்கள்.
பருவம் வருமுன்னேயே தாலி கட்டிக்கொண்ட லெட்சுமி,பருவம் வந்தபின்னும் கணவன் வீட்டார், தன்னை வந்து அழைத்துப்போகாததால்,,
பெற்றோருக்கும் கண்வன் வீட்டாருக்குமிடையே, ஏற்பட்ட மனத்தாங்கலால்,.அவமானத்தோடு, ஊராரின் முன்னே இப்படி வாழாவெட்டியாய்
வாழ்வதைவிட உயிர் விடுதலே மேல் என, சாவைத்தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன் அந்தப்பேதைப்பெண் , துணிச்சலோடு
கண்வனுக்கு ஒரு கடிதம் அனுப்ப, அக்கடிதமே அவளுக்கு வாழவை மீட்டுத்தருவதாக , மிக அழகாக, எழுதப்பட்டுள்ள கதை இது.
. பெண்ணுக்கு கல்வியறிவும் துணிச்சலும் எவ்வளவு முக்கியம், என்பதை, கடிதம் படித்த ராஜகோபாலன் பதறித்துடித்து ஓடிவரும் கட்டத்தில்,
[தன்னைத்தற்காத்துக் கொள்வதற்காவது,] நம்மையும் பதறிப் பதறி கதையைப்படிக்க வைக்கும், ஆசிரியரின் கதை சொல்லும் னேர்த்தி வெகு சொகுசு.
முழுக்க முழுக்க பெண் விடுதை பேசும் கதை இது. பெண்பால் ஏற்பட்ட பரிவினை, நெகிழ்வை, எந்த வார்த்தை ஜாலமோ,
அலங்கார முலாம் பூச்சுகூடஇன்றி, மிக இயலபாகப் பேசும் இக்கதை, தமிழிலக்கியத்தில் எந்தபெண் எழுத்தாளருமே பெருமிதப்படவேண்டிய கதை ,
என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லலாம். ஸ்ரீமான் சிட்டி அவர்கள் வாழும் காலத்தில் அவரை சந்தித்த பெண்கள் பேறு பெற்றவர்கள்.

அடுத்து வருவது மலையாளத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் காரூர் நீலகண்டம் பிள்ளையின் மர பொம்மைகள், .இன்றைய எழுத்தாளர்களாகிய,
நம்மில் பலரும் எழுதத் தயங்கும், முற்றிலும் புதிய கோணத்தில், உரையாடல் வழி கதை மாந்தர்களை நகர்த்திச்செல்லும் நகாசு வேலைப்பூச்சு,
வெறும் புதிய உத்திமட்டுமல்ல. பூரணத்தில் மாற்று கோணமாகவும் நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறுகதை இது.
வாசிக்கத்தொடங்கும் போது கவர்ச்சியோ,சுவாரஸ்யமோ, இல்லையெனினும். 2ம் பக்கத்தாளை நகர்த்திய பின்னர் ,கதையிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்,வாசற்படியில் நின்று கேட்கும் கேள்விகட்கு,வீட்டினுள்ளிலிருந்து வரும் பெண்ணின்
பட், பட், டென்ற உடனடி பதிலும்,அக்கேள்வி, பதிலினூடேயே, மர பொம்மை செய்து ஜீவித்து வரும், அவளது சோகவாழ்வை, செப்புப்பட்டயமாய்,
நம் முன்னே கொண்டுவருவதில் எழுத்தாளரின் வெற்றியை சம்மதித்தே ஆகவேண்டும்.
அவளது அவலம் புரிந்து விடை பெறும்போது , அவள் தனது அன்றாட வாழ்வின் ஜீவனோபயமான ஒரு மரபொம்மையை
அவனுக்குக் கொடுக்கிறாள்..ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையுமாக சீரழிந்து,, இனியும் மிருகமான உன்னோடு வாழ மாட்டேன்,,
என்று வெளியேறிய அவளின் கோபம் போலவே,அவள் கொடுத்த பொம்மையின் முகமுமிருப்பது கண்டு அவன் முகம் வாடுகிறது.
.உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அவளிடம் நீட்ட,, அச்சு அசல் அப்படியே, அவள் உருவம் .
பேசிக்கொண்டிருக்கும் போதே,அவளது உருவத்தை, அச்சாக அப்படியே வரைந்திருக்கிறான்.. மகிழ்ந்து போன அவள் உள்ளே போய், பகவதி தவம் செய்யும், அழகான பொம்மையை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, மகிழ்ச்சியோடு விடை பெறுகிறான், அந்த ஓவியன்.
இரண்டு கலைஞர்களின் சந்திப்பை ஒரு நிமித்தமாய்,அதிலேயே நிறைவு பெறும் அந்த பேதமையை கட்டுசெட்டோடு சொல்லி முடிக்கும் கதை.
பெண் எப்படிப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வில் உழன்றாலும் பெண் எப்போதுமே பெண்ணே, என னாசூக்காய் சொல்லும் பதிவு இது.
வந்தவனும் கலைஞனே, அதிலும் ஓவியன் என்றறியும்போது, கோபம் போய் அவள் மகிழ்ந்து நிற்கும் காட்சியில், ஓவியனின் தோழமையில் ஆண்மையின் கம்பீர்யத்துக்கு நிறைவாக ஒரு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது.

நா. கண்ணனின் ’ சிறுகதைத்தொகுப்புக்கு, இரா.முருகன் அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு வரி, இப்படி வரும்.
நல்லவேளை கண்ணன் ஜெர்மனி போனார், என்று----அத்தொகுப்பிலுள்ள ”நெஞ்சு நிறைய’ , சிறுகதையை, படித்தபிறகு மீண்டும் இவ்வரிகளைப்
படித்தபோது, ஏனோ இரா.முருகனுக்கு சபாஷ் போடாமலிருக்க முடியவில்லை.என்ன பொருத்தமான உவமை,
ஒரு நூலுக்கு பொருத்தமான முன்னுரையின் தேவையை , வஞ்சகமேஇன்றி, கொடுத்துள்ளார், இரா.முருகன்.
பின் என்ன சார்? ஐரோப்பிய நாட்டில் வாழும் இளைஞன் என்ன இப்படி அனியாயத்துக்கு, நல்லவராக இருக்கிறார்? இருக்கலாமோ?
என்ன? கதை, வசனம் புரியவில்லையாக்கும்?
வெள்ளைக்காரத்தோழியைக்காணச்செல்லும், கதை நாயகனுக்கும் தோழிக்குமிடையே நிகழும் பரிமாணத்தின் அனுபவமே கருவூலம்..
கணவனைப்பிரிந்து ஒரு பெண்குழந்தையோடு வாழும் , தோழியைக்காண நம் கதை நாயகன் செல்லும் அதே தினத்தன்று தான் ,
தோழியின் முன்னாள் கணவன், தன் காதலியோடு வர ,அதற்கான முஸ்தீப்புகளில் இவன் காணச்சென்ற தோழி இருக்க, குழந்தையோடு அமரும்
நாயகன், அந்தப்பெண்குழந்தை அவர்கள் நாட்டில் தவறே இல்லாத, குழந்தைகளின் பாலியல் படம் காட்டும் புத்தகத்தை ,
சர்வசாதாரணமாக புரட்டிக்கொண்டிருக்க, தர்ம சங்கடத்தில் நெளிகிறான். குழந்தையே ஆனாலுமவள் பெண்தானே எனும் , சங்கோஜம்.
மாலை புதுக்காதலியோடு வரும் முன்னாள் கணவனை, தோழியும், குழந்தையும், இவனுமாக வரவேற்கும் சூழல்,
கதை படிக்கும் நமக்குத்தான் சோகமே தவிர, அந்த நாட்டின் கலாச்சாரத்தில் இதொன்றும் பொருட்டே அல்ல, என்பதுபோல்,
கதை போனாலும் சராசரி இந்தியப்பெண்ணால் அந்தக்காட்சியை எந்த அளவுக்கு ஜீரணிக்க இயலும் என்று யூகிக்கலாம்.
அதுவும் காதலி சகஜமாக இருக்க அடிக்கடி, முத்தமிட்டு, முத்தமிட்டு அவளை சகஜமாக்க முயலும் தந்தையை, அந்தப்பெண்குழந்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
ஆச்சு போச்சு.!
என்று எப்படியோ அவர்கள் விடைபெற்றுச்செல்ல, தோழி குழந்தையோடு அறைக்குள் தூங்கச் செல்ல,, தனியாகத் தூங்கி எழும் கதை நாயகன்,
காலையில் எழுந்து பார்க்கும்போது, சுருண்டு தூங்கும் இரண்டு பூஞ்சிட்டுக்குழந்தைளாய் மட்டுமே அவர்களைக் காண்கிறான். தானே போய் காப்பிபோட்டுக்கொண்டு வந்து, அவளுக்கும் கொடுத்து, தானும் குடிக்கும் போது தார்மீகத்தின் உன்னதம் நம்மை, ஸ்தம்பிக்க வைக்கிறது.
அக்கறைவாழ் ஆண்களில் பெரும்பாலோர், தானே சமைப்பதும் சாய போட்டுக்குடிப்பதொன்றும் புதுமையல்ல , என்றாலும் அதிதியாய்
சென்ற வீட்டில் தோழிக்கு காப்பி போட்டுக் கொடுக்கும் ஆதுரத்தில் இந்த கதை மாந்தனை கை குலுக்கத்தோன்றுகிறது.
அதைவிட விசேஷம் , விடைபெறும்போது இந்த அன்பான நண்பனுக்கு நெஞ்சார அணைத்து , பிரியா[பிரியத்தோடு]
விடை கொடுக்கும் , தோழியின் அணைப்பு ரொம்ப நேரத்துக்கு, நெஞ்சிலேயே நிற்பதாக கதை முடிகிறது.
ஆணாதிக்கம், ஆண்போராளிகள், பெண் விடுதலையின் உச்சமே, நாங்கள்தான் என்றெல்லாம், பம்மாத்து இலக்கியம் படைக்கவரும்
அத்தனைப்போலிகளையும் வெட்கித்தலை குனியவைக்கும் அற்புதமான சிறுகதை இது. .
கதைமாந்தனின் அன்பியலில், தோழி மட்டுமல்ல, கதை வாசிக்கும் எந்தப்பெண்ணுமே விகசிக்கும் படையல் இது.

இதுபோல் ப்ரபஞ்சன், குஷ்வந்த் சிங், மாத்வ ராயன், எனப்பலரும் பெண்மையைப்போற்றிய சங்கீர்த்தனங்களை , தொடர்வோமே.??

[தொடரும்]


இக்கட்டுரைத்தொடர் குறித்து என்னிடம் தனி மடலில் கருத்துரைத்து வரும் அன்பான என்டெ அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
இனிமுதல், kamalam.online@yahoo.com எனும் முகவரியில் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

Monday, February 16, 2009

பெண்ணின் உடல்மொழி

பெண்ணின் உடல்மொழி

அண்மையில் குறிப்பிட்ட ஒரு பேட்டிக்காக, இவளிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி , ஏனோ இவளை மிகவும் யோசிக்க வைத்தது.

கேள்வி---பெண்களின் உடல்சார்ந்த மொழியை இலக்கியமாகக் கொடுக்கும்போது, வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்களே,
அதுகுறித்த மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?

இவள்--புதுமை என்பதால் மட்டும் வாசகர்கள் விரும்பிப் படிக்கவில்லை. பெண்களின் உடல்மொழி சுவாரஸ்யம் என்பதாலும்
படிக்கிறார்கள். அதுவே சொல்லப்படும் விதத்தில் சொல்லும்போது, நடையழகின் லயத்துக்காகவும் ,
வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவும் கூடத்தான் வாசிக்கிறார்கள். பெண்மொழியில் உடல் பற்றிய பார்வை, நடை எப்படி விழுந்திருக்கிறது
என்றறியும் ஆவலுக்காகவும் தான் வாசிக்கிறார்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்?
மாற்றுக்கருத்தா?ஹ்ம்ம்----இலக்கியத்தில் illusion and reality யில் கதை புனைந்த அனுபவமுள்ளவள், என்பதால்,
மாற்றுக்கருத்தில் நுழைய ஞான் விரும்பவில்லை.---------

இப்படி இன்னும் கூட சில வரிகள் . கேள்வியைச் சார்ந்த நிலையில் பேசினேன் தான்.
ஆனால்பேட்டி முடிந்து ,சில நாட்களாகியும் இக்கேள்வி ஏனோ என்னை, சிந்தனையில் முட்டிபோடவைத்து, கிளறிக்கொண்டேயிருந்தது.

பெண்கள் எழுத்து, நூற்றாண்டுகால வரலாறு சார்ந்தது.கிருபை சத்யனாதன், விசாலாட்சிஅம்மாள்,, வை.மு. கோதைனாயகி, கு.ப. சேது அம்மாள்.
மூவாலூர் ராமிம்ருதம்மாள்.போன்றோர் முதல் கட்ட எழுத்தாளர் என்றால், அடுத்து எழுத வந்தவர்கள் , கிருத்திகா, குமுதினி, லக்‌ஷ்மி, அனுத்தம்மா,
குயிலி ராஜேஸ்வரி,கோமதிசுப்ரமணியம், --------
மூன்றாவது காலகட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, வாஸந்தி,உஷாசுப்ரமணியம், இந்துமதி,------------
பிறகு வந்தவர்கள்தான், அம்பை,காவேரி, சிவகாமி, பாமா, உமா மகேஸ்வரி,அமரந்தா,--------------
இனி அக்கறை வாழ் எழுத்தாளர்கள், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்,காஞ்சனா தாமோதரன், சுமதி ரூபன், கமலாதேவி--------------------- -----
எனப் பட்டியலிட்டால் எழுத கை வலிக்குமளவுக்கு பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது.
இன்று பெண் எழுத்தாளர்கள் நிரம்ப பேர் இலக்கியம் படைக்க வந்துள்ளார்கள், அருமையாகவும் சில, பல, நல்ல எழுத்துக்களை ஆய்வுக்கு தெறிவு செய்யவும் முடிகிறது.
முதலில் பெண்ணியல் வாத எழுத்துக்களை நாம் எப்படி காண்கிறோம்.conservative feminism--பாணியில் வந்த கதைகளுக்கும்.யதார்த்தத்தில்,
புனைவுகளைக்கொண்டு வரும் கதைகளுக்கும் இடையே உள்ள அகழியும் கூட யோசிக்கவே வைக்கிறது.எந்த அளவுக்கு நவீனத்துவத்திலிருந்து
முன்னேபோய்விட்டோம். நவீனகாலம் என்று எதைக்கருதுகிறோம், என்று புரிந்து கொண்டபிறகு post modernism, பற்றி பேசலாமே என்ற
ப்ரக்ஞையற்று எழுதுபவர்களை , பட்டியலில் சேர்க்கமுடியவில்லை.
பொதுவாகவே பெண் எழுத்தாளர்களால், புதிய மாற்றத்தைக் கொண்டுவந்ததாகவோ,ஆண்களுக்கீடான, சக்தி வாய்ந்த எழுத்துக்களைக்
கொண்டுவந்ததாகவோ இல்லையே என்ற குற்றச்சாட்டு, இப்பொழுது, தேய்ந்து, மறைந்து விட்டது.மதம், சார்ந்த நமது வாழ்க்கை மரபுகள்,
நாம் கொண்டிருக்கிற பாரம்பரிய மதிப்பீடு,, இவைகளை எல்லாம் மீறிய ஒரு தெளிவான மாற்றம் எழுத்தில் கொண்டு வர வேண்டுமாயின்,
முதலில் என்டெ கேள்வி, Are they learned? பதில் ஆம் எனில் ஆஹா! நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெறும் என அறுதியிட்டுக் கூறலாம்.
[அடடா, ஒன்றை மறந்து போனோமே, ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், சுயபச்சாபத்தில் கதைபுனைவது, மற்றவர் எழுத்தைச் சார்ந்து
அதேபோல் எழுத முயன்று,பின் ஓரளவு தேறி எழுதுவது, அதுவும் இல்லையென்றால் அவர் எழுதுகிறாரே,ஏன் எனக்கு எழுதத் தெரியாதாக்கும்?
என்ற போட்டாபோட்டி மன நிலையில் எழுதுவது, இன்றேல், இலக்கிய அடிப்படை என்றால் என்னவென்றே தெரியாமல்,மொழியில் வல்லுனர் என்ற
அலட்டலில் மட்டுமே கதை புனைய வரும் ஜம்பங்கள், ஹ்ம்ம்------, இப்படியெல்லாம் ஜிகினாப்பூச்சு போர்த்திக்கொண்ட , அனாமத்துக்களின் எழுத்துக்கள்
பாமரர்களிடம் கூட எடுபடுவதில்லை.]
கனவாய் மழையாய்,சுயம்புவாய்,இலக்கியம் மலரவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில் உயிர்னாடி, உக்கிரமாய் பேசாவிடினும், சிந்தனையில் சீரிளம்
புத்தாக்கம் நம்மை ஆட்கொள்ளவே செய்கிறது.
இனி இந்தபெண் எழுத்தை பெண்கள் மட்டும் தான் எழுத முடியுமா? ஏன் ? ஆண்கள் எழுதியதைல்லையா?
ஏனில்லை என்று பளிச்சென்று, மின்னல் போல் துலங்கிய நினைவாஞ்சலிக்கு, ஷொட்டு கொடுத்துக் கொண்டே,. நினைவலையைப் புரட்டினால்,
பட்டுப் பட்டாய் சில கதைகள் நினைவில் வருகிறது.
பெண்கல்வி,பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறை, குழந்தைமணக் கொடுமை, பாலியல் பலாத்காரம்,பெண்ணின் கைம்பெண்பிரச்சினை,
பிள்ளைப்பேறும் அறியாமையும் தான் பெண்ணை அடிமைப்படுத்தும் இயற்கைக்காரணிகள்,எனும் நிலையில் பெண்விடுதலைக்காக,
எழுதப்பட்ட பெண்ணிய எழுத்துக்கள் நிரம்பவே வருகிறது. ஆனால் பெண்ணியல் பிரச்சினைகளை, ஆண்களும் கூட மிக அழகாக,
நெகிழும் வகையில் ,உறுத்தாத நடையழகில் எழுதியுள்ளார்கள். பாரதியாரின் காந்தா மணி, ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், சிட்டியின் கெளரவ நாசம், , நா.பார்த்தசாரதி,ஜெயந்தன், நா.கண்ணன்.,பிரபஞ்சன், எனப்பட்டியலிட்டால், முற்றுப்புள்ளியே இல்லை.
மணக்க மணக்க எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் என்னைக்கவர்ந்த பல கதைகளில், சில கதைகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன்.
ஆடவ எழுத்தில் பெண்ணின் பால் உள்ள பரிவும் ,நெகிழ்வும் ,பெண்ணை அடிமைப்படுத்தியதால் ,ஏற்பட்ட தார்மீகக் கோபம் ,எப்படியெல்லாம்
வெளிப்படுகிறது என்றுணரும்போது, சக மனுஷ்ய எழுத்தின் மீது வரும் மரியாதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
முதலில் மணிக்கொடி எழுத்தாளர் அமரர் சிட்டி அவர்களின் பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
கெளரவ நாசம் எனும் அருமையான கதையைக் காண்போம்.


[தொடரும்]

Saturday, February 14, 2009

சிவகாமி - பாகம் 3

சிவகாமி----- கொட்டு, பறை, மோளம், இதெல்லாமே எங்களிலிருந்துதான்
பிறந்ததால்,பண்டிதர்களின் பார்வை தேவையில்லை, என்றாலும் நீங்கள் இவ்வளவு
அருமையாக அவர்களைப்பற்றி கூறுவதால் உங்கள் ஆசிரியர்களை பார்க்க
நேர்ந்தால் நிச்சயம் பேசுவேன். எங்கள்

குழுவுக்கென்ரு பார்வையுண்டு. அந்த நாடககுழுவோடு இதே சிங்கையில்
நிகழ்ச்சி நடத்த விரைவிலேயே வரலாம்.

ஞான் - ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா,ஆமாம், இடதுசாரி இலக்கியம்
என்றால் என்ன? அதுவும் தலீத் இலக்கியம் தானா?

சிவ-----தலீத்தின் ப்ரச்சினைகளும் போராட்டங்களும், தலீத்திய விடுதலைக்கான
கருவும் சார்ந்து வந்தால் நிச்சயமாக அப்படிக்கொள்ளலாம்.

ஞான் ----இன்று மலையாள இலக்கிய உலகில் கடம்பனிட்ட ராமக்ரிஷ்ணன்,
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்ரோரின் கவிதைகள் மக்களோடு iக்கிய
மாயுள்ளது. தமிழில் பாரதிக்குப்பிறகு, நவகவிதைகளின் உள்ளடக்கம் பரந்த
அளவில் சென்றடையவில்லை,, அறிவுஜீவித்தனமான கவிதைகள் என்றாலே ஒரு மாதிரி
அதிர்ச்சியின் வெளிப்பாடே தவிர, அதில் creative என்பதே இல்லை எனும்
குற்றச்சாட்டு உண்மையா?

சிவ---புதுமை என்பதாலேயே அது உயர்வு அல்ல. creativity என்பது
கூர்மையாகவும் அதே சமயத்தில் மிக இயல்பாக உணர்வைக்கிளறும்

படிமங்களை க்கொண்ட எழுத்துக்களாலும் கொண்டு வரமுடியும்.

ஞான் --பெண்களின் எழுத்தில் அன்றைய லக்ஷ்மியின் பாதிப்பில்தான்
உழன்றுகொண்டிருக்கிறோமாம். அல்ல்து சிவசங்கரித்தனமான எழுத்தில்

கரைந்து கொண்டிருக்கிறார்களாம், சமூகககதைகள் என்றாலே வெறும்
துணுக்குத்தோரணமே. பரிசோதனை உத்திகளில் எழுதுபவர்களின்

எழுத்து மட்டுமே கவனிக்கப்படுகிறது, என்ற கருத்தை எப்படி தவறு என்று நிரூபிப்பது?

சிவ-----முதலில் அவர்கள் நம்மை முழுமையாக படிக்கவில்லையென்றே
சொல்லமுடியும், ஆமாம், இது பற்றி, உங்கள் கருத்தென்ன?

?ஞான் --லக்ஷ்மியின் தங்கமாம்பழம் என்ற நூலை படிக்கும்போது எனக்கு 11
அல்லது 12 வயதிருக்கும் அப்பொழுது சிறுவர் அரங்கில் எழுதிக்கொண்டிருந்த
காலகட்டம், ரெ.கா. சாரின் சுழல்பந்து சிறுகதை அபாரமாய் மனதைக்கவர்ந்தது . ஊஹூம், தப்பு,
அது கவர்ந்தது அல்ல. மனதில் அப்படியே அந்த நடை, கதைக்கரு, கதை, சொல்லியவிதம் , மிகவும் பிடித்துப்போயிற்று.
உடனே மாணவர் அரங்கில் கதைகள் எழுத ஆசை வந்தது.
ஆனால் தி.ஜா, லசரா என்ற இரு சிகரங்களை படித்தபோது பரவசத்தில்
விம்மிவிம்மி அழுதிருக்கிறேன்

எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்துக்கள் அம்மா, நெஞ்சை அள்ளிய தமிழ் ,
அவர்கள் எழுத்தில் எந்த பொய்மையும்,

அதிரடி உத்திகளும் ஞான் காண்வேயில்லை.இவர்கள் எழுத்தில் மனிதனின் அசலான
வாழ்க்கையை மெய்ப்பாடுகள் நிறைந்த கருவூலம் வழி அதன் இயல்புடனும்
அழகுடனும் சொல்லும் ஆற்றலை லசரா போதித்தார், தி ஜா,எனும் சான்றோரின்
எழுத்தில் மனிதனேயம் மெல்லிய சரடுபோல் கண்ணுக்குத்தெரியாமலும் அதே
நேரத்தில் சமகாலப்ப்ரக்ஞையும் சமுதாய வாழ்க்கையின் நிதர்சனத்தை
உயிர்த்துவம்போல் அதன் ஆளுமை கெடாது எழுதுவது எப்படி எனும்
அற்புதத்தையும் கற்பித்தார். இதேபோலவே மஹாகவி பாரதி,க்கவிதைகளில்
இதிகாசம் காண்பவள் ஞான்.. எத்தனை முறை படித்தாலும் இன்றும் என்னை
ப்ரம்மிக்க வைக்கும் கவிதைகள் பாரதிக்கவிதைகள்.தமிழில் இந்த பிதாமகன்களை
யெல்லாம் உனர்ந்ததாலேயே சமூக நாவல்களை குறைத்துப்பேசுவதை என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லை.

சிவ--- சேச்சி, மலையாள இலக்கிய உலகம் எப்படியிருக்கிறது ?அங்கு
உங்களைக்கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

ஞான் -- மிகுந்த நம்பிக்கையோடிருக்கிறது. 20 வருடங்களுக்கு
முன்னால்பாரதிக்கீடான கவிஞரே இல்லையென்று ஞான் பேசியபோது கோபப்பட்ட
எழுத்தாளர்களின் அலை இப்போது இல்லை, என்னதான் அவரது சிறப்பு என்று
எங்களுக்கும் சொல்லுங்களேன் என்று ரசித்துக்கேட்கிறார்கள். தமிழின் அரிய
கதைகளை ஞான் மலையாளத்தில் அறிமுகப்படுத்தும்போது , திறந்த மனதோடு
ஆர்வத்தோடு ரசிக்கிறார்கள்.தமிழில் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துமாறு
எனக்கு கடிதமனுப்புகிறார்கள். உன்னுடைய ஆனந்தாயி, நாவலை

ஞான் அறிமுகப்படுத்தியபோது கூட புதிய பார்வையோடு ரசித்தார்கள்.

கவர்ந்த எழுத்து என்றால் எம்.டி,யின் ரெண்டாம் முழம், ஆனந்தின் மறுபூமி
உண்டாகுன்னு, என்னை மிகவும் கவர்ந்த எழுத்து. இன்னும்
ஒ.ன்.வி.குருப்,ஆற்றூர் ரவிவர்மா, கவிதாயினி சுகதகுமாரி, வத்சலா,
அந்தர்ஜனம்,போன்றோரை குறிப்பிடலாம். கவிதைகளின் மரபுக்குட்பட்டும்,
மரபுகளை மீறியும் எழுதும் அய்யப்ப பணிக்கரையும் தவிர்க்க இயலாது.
modernism என்ற பெயரில் வறட்டுதனமில்லாத

ஆத்மாவின் ஜீவத்துடிப்பையே உலுக்கும் எழுத்துக்களை பட்டியலிடவேண்டுமாயின்
இன்னும் பலரையும் கூட எழுதலாம்.

சிவ---- சேச்சி, மலையாள இலக்கிய உலகில் ஜாதீய மனோபவம் உண்டா?

ஞான் -- தர்ம சங்கடமான கேள்வி சிவகாமி, ஞான் மனிதர்களை, மொழிகளை,
நேசிப்பவள் அம்மா, தயவுசெய்து இந்த கேள்வியை தவிர்க்கலாமே.

-------

ஞான் -----தமிழில் மிக உன்னதமான படைப்புக்கள் எல்லாம் வெளிவந்தும் அவை
சர்வதேச அங்கீகாரத்தை அடையாததற்கு காரணம்

தரமான மொழிபெயர்ப்பில் அவை பிற மொழிகளில் சென்றடையவில்லை என்று
நினைக்கிறேன். என்னம்மா சொல்கிறாய்?

சிவ---- உண்மைதான் சேச்சி, தமிழில் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட
இலக்கிய அமைப்புக்கள் முனைப்போடு செயல்படவேண்டும்,

, ------------------------------
---------

இதற்குப்பின்னர் பேசியதெல்லாம் அன்பின் வெளிப்பாட்டில், சக மனுஷியாய்
இலக்கியம் குடும்பம் சார்ந்த தகவலகளே.

விடைபெறுமுன் பரஸ்பரம் நன்றி கூறிப்பிரிந்தாலும் , சிவகாமியின்
எழுத்தைப்புரட்டும்போதெல்லாம் மனதில் நிற்பது, அழகான அந்த சிரிப்பே,
சிவகாமியின் துணிச்சல், சிவகாமியின், அழுத்தம், சிவகாமியின் னிறம், எல்லாமே கவர்கிறது.

பென்களின் பேனா இதுவரை என்ன சாதித்துள்ளது என்ற கேள்வியை யாரேனும்
எழுப்பினால் ,துணிகரமாக சிவகாமியின் நூலை

பரிந்துரை செய்வேன்,????------------------

[இப்போதைக்கு முற்றும், ---------- பின்னர் தொடரும்]

சிவகாமி -- பாகம் 2

கட்டுரை தொடர்ச்சி ...

ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ எழுதுவதற்கு, வெறும் கற்பனைவளமும் மொழிவளமும் மட்டுமே தெரிந்தால் போதும், இதோ ஞானும் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று மார்தட்டும் செப்புடு வித்தை தான் இலக்கியம் என்றோ, அல்லது கம்பிமேல் நடக்கும் திக்திக் சாதனையாக்கும் என்று மட்டும் யாரேனும் என்னிடம் அளந்தால் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்.

இருட்டுக்கட்டிய கருவறையில் கண்களை இடுக்கிக்கொண்டு நோக்குங்கால், ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் ஈஷ்வர தரிஷனம் கிட்டியதும் பக்தன் சிலிர்த்து நிற்பானே, அந்த ஒரு நிமிஷம் போல் தரமான வாசகனும் நல்ல ஒரு கதையை படித்தது முடித்ததும் விக்கித்துப்போய் நிற்கவேண்டும். அதுதான் தரமான எழுத்து,கதை சொல்லும் உத்தியில் வாசகர்களிடையே ஒரு நெருக்கம் வேண்டும்.

அதற்கு இலக்கியத்தின்பால் மனித மனதிற்கு, மங்காத ஆவல், காதல் வேண்டும்.அந்த அதீத
தாகத்தோடு, மனித அனுபவத்தின் நாடித்துடிப்பை தேடிப்போய் ஒரு விஷயத்தை, மிகைப் படுத்தாமல் அதன் இயல்புக்கேற்ற உணர்வோடு எளிமையாக சொல்லத்தெரிந்தால் மட்டுமே
போதும் அந்தக்கதைக்கு அபார வெற்றியே. என்னைக்கேட்டால் எழுத்தாளனும் அடிப்படையில் ஒரு கலைஞனே என்பேன். எண்டெ எழுத்தில் இன்னும் தேடுதல் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது என்கிறார் ஆசிரியர், ந.முத்துசாமி.

ஆனால் கலைத்தன்மையையும் இயல்பான நடப்புக்களும் சூழ நிஜத்தன்மையின் நுணுக்கமான விவரங்களுடன் தர்க்கம், விவாதம் என்பதை வேகம் நிறைந்த உணர்ச்சிப்பெருக்குடன் எழுதும் படைப்புக்கள் என்னை பெரிதும் ஆகர்ஷித்துள்ளது, அப்படிப் படித்த கதைகளுள் ஆங்கிலேய நண்பனொருவனின் அனுபவத்தை தன்னுடைய எழுத்தில் கொண்டுவந்த இலக்கியவாதியின் கதையொன்று எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்து.

இந்த வகையில் பெண்களில் ப்ரதிபாராய், அனிதா நாயர், மார்கரெட் டீக், வி
ஜயம் அந்தர்ஜனம் ,ராஜம் க்ரிஷ்ணன், ரேகாக்ரிஷ்னன்குட்டி, அருந்ததிராய், சிவகாமி போன்றோர் இன்றியமையாதவர்கள். சிரியன் க்ரிஸ்டியன்களிடையே நிகழும் அவலம், தார்மீக அனுபவங்களை அருந்ததி எழுதியுள்ள விதரணை, இலக்கிய ஆளுமையில் உச்சம்
என்பதை மனதார பாராட்ட வேண்டும்.

நம் சிவகாமியின் எழுத்தும் , உறுத்தல் இல்லாத பாசாங்கற்ற, நடையால் பளபளவென்று துலங்கினாலும், நெருடும் ஒரே சமாச்சாரம் இவரது பச்சை, கொச்சையான வசனங்கள். சவடால் பேர்வழி காத்தமுத்துவுக்கு முதலில் வரும் ஒரே வசவு, தலைமுடி பாஷைதான்,

நீயெல்லாம் எப்படிரா பெண்டாட்டியோடு -----என்று காதுபொத்தும் வசனங்களை தவிர்த்தி
ருக்கலாம்.

ஆனாலும் சுவாரஸ்யமான விஷயங்களும் உண்டு. இவரது நாவலில் கணவர் மனைவியை எப்படி அழைக்கிறார் தெரியுமா? 'ஏம்பேசலை, ஏம்பேசலை' என்று?----

மனைவியோ, கணவரை, 'எக்கலை, எக்கலை' , என்பாராம் ? இப்படிக்கூட தமிழில் விளியுண்டா?

அடுத்து சிறுவழிபாட்டு தெய்வங்கள் என்றாலே, முனியாண்டி,முனீஸ்வரன் காளி,சூலி இப்படித்தானே படித்திருக்கிறோம்? ஆனால் சிவகாமியின் சாமி,' பொன்னுசாமி, எமபாரி,. இப்படி, இன்னும் திருமணம் நடத்திவைக்க வரும் அய்யரைப்பார்த்து கெளரி 'இவரு நிசமாலுமே அயிருதானாம்மா?

என்றுகேட்க, 'அக்காம், வள்ளுவரு, கோமேதகம் அயிரு,,என்பதும் அந்த வள்ளுவப்பண்டாரத்திடம் நிற்கப்போன அழுக்குச்சிறுமியை,

போ அந்தாலே , அயிருகிட்டே தீட்டாக்கிடாதே, என்று விரட்டுவதுமாக, என பல புதுபுதுத்
தகவல்களாய்,சிவகாமி அசத்துகிறார்.

பழையன் கழிதலும், ஆனந்தாயி, குறுக்குவெட்டு, நாளும் தொடரும், என சிவகாமியின் எல்லா நூல்களையுமே படிக்கும்போது, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ப்ரச்சினைகளை, பெண்மையின் அருமை, அநியாயமாக சுரண்டுப்படும் அவலத்தை, எந்த எழுத்து ஜாலமுமேயின்றி, இவ்வளவு இயல்பாக எழுதிய பாங்கே தமிழ் நாவல் உலகுக்கு புதிய பரிமாணம் என்று அறுதியிட்டுக்கூறலாம், இனி சிவகாமியின் பேட்டியை தொடருங்கள்.

-------------------------------------------------------------------------------------

கேள்வி------பெண்ணீயம் என்பது பற்றி தெரிந்தால் மட்டுமே ஒரு பெண்ணின் எழுத்து
நிலைக்குமா ?

சிவ-- அப்படி ஒரேயடியாகக் கூறிவிடமுடியாது. சுயசிந்தனை, தெளிவான பார்வை
இருக்கவேண்டுமென்று வேண்டுமானால் சொல்வேன்.

கேள்வி--சிறுகதை, நாவலில் மட்டுமல்ல, கலைத்துறையிலும் ஈடுபட்டுள்ளீர்கள். நாடகத்துறையில் வணக்கத்திற்குரிய எண்டெ ஆசிரியர் prof.ராமானுஜம், ந.முத்துசாமி, போன்றோரை போய் பார்ப்பதுண்டா?

சிவ----பண்டிதர்களின் பார்வையில் நாங்கள் நாடகம் போடுவதில்லை, கொட்டும் மோளமும் எங்கள் இனத்திலிருந்து தான் போனதே, அதை எங்கள் பார்வையில் எங்கள் பாணியில் , நாங்கள் தயாரித்துவருகிறோம்,அதனால்,--------
-


[தொடரும்]

பேட்டி - சிவகாமி - பாகம் 1

2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது கண்ட பேட்டியும் எண்டெ அனுபவமும்-----

தமிழிலக்கியத்தில் ஞானும் உங்களோடு

சாதீயம் பற்றி எழுதுவதில் எனக்கு எப்பொழுதுமே தயக்கமுண்டு. எவர் மனதையேனும் புண்படுத்திவிடுமோ என்ற பயத்தைவிட, ப்ராமணீயம் தவிர்த்து, தமிழில் எது உசந்த சாதி, எது தாழ்ந்த சாதி என்பது பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது என்பதாலும், அந்தக் கலன்களைத் தொடுவதேயில்லை. முதன்முதலாக மலையாள மாநாட்டில் கலந்து கொள்ள கேரளம் சென்றபோது, இலக்கிய உலகிலும் சரி, நிதர்சன வாழ்விலும் சரி, இன்றும் நியதி. கோட்பாடு என்ற பெயரில் உள்ள மனச்சாய்வின் பெரிய அடிப்படையே சாதியின் பிண்னனிதான் என்று மலையாள மாநாட்டில், தலீத்திய இளைஞர், கவிஞரொருவர் நம்பூதிரிகளை சாடியபோது வலித்தது. எந்த இலக்குமேயில்லாமல் இவர் ஏன் இந்த போடுபோடுகிறார் என்று திகைத்ததுண்டு. வருந்தியதுண்டு.

சூத்திரர்கள் என்றால் நாங்கள் எதில் குறைந்துபோய்விட்டோம், எங்களால் எழுதமுடிந்த பிரச்சினைகளை மற்றவர்களால் எழுதிவிடமுடியுமா என்ற இன்னொரு எகிறல்,--- அந்த எகிறல் எழுத்தாளரின் எழுத்து இவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவரது சீற்றம், எரிச்சல், பிளிறிய வசன மொழி, சே,--- அன்று இவளுக்கு வயது 25, 2 குழந்தைகட்கு அன்னையும் கூட. ஆனாலும் கூட புரியவே இல்லை.

இலக்கிய உலகில் பரஸ்பரம் எழுத்தின் மதிப்பீட்டில்தானே பெருமிதமே, இங்கு எங்கு வந்தது இந்த விதண்டாவாதம்? என்றெல்லாம் நினைத்து, இவளுக்கு கோபம் வந்தது. பிடித்தமான அவரது எழுத்தினை மனதார பாராட்டும் எண்ணம் கூட மடிந்திட இவள் தமையனோடு இல்லம் திரும்பிவிட்டாள். அன்று புரியாத பல விஷயங்கள் சிவகாமியின் எழுத்தில் , சிவகாமியின் நாவலகளைப்படித்தபோது, உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது. படிக்கப்படிக்க , படித்துமுடித்தும் அம்மாடி, அம்மாடி, என்ன சோகமது, என்னதுன்பமது என்று நெஞ்சு விம்முகிறது .பொங்கிபொங்கி அழுகை வருகிறது.

சாதியின் அசுரப்பிடியில் இவர்களைப்போலவே அன்றாடக்கூலிகளாகப்பணிபுரியும் படையாச்சிகள் கேவலம் கூலிக்கு ஏர்பிடிக்க உடையார் பக்கம் சேர்ந்து விடுகிறார்களாம், கோவணத்துக்கு மாற்றுக்கோவணமில்லாதவன், அதே போல் உள்ள கோவணாண்டியை பள்ளன் என்கிறான், பறையன் என்கிறான், பள்ளனோ பறையனை கேவலமாயும்,பறையன் சக்கிலியை கேவலமாயும், இவனெல்லாம் சேர்ந்து பறவண்ணாணை இன்னும் கேவலமாய்-------இப்படி சீறுகிறார் சிவகாமி.

தன்னுடைய சமூகத்தைப்பற்றித்தான் என்ன துல்லியமான கணிப்பு, நுட்பமான சின்ன விஷயங்கள் கூட ஒளிக்கபடவில்லை. இந்த எழுத்துனேர்மை ஒன்றே போதுமே இவரது இலக்கிய யோக்கியதாம்சத்துக்கு, இந்த சிவகாமி சிஙகை வந்தபோது,
என் தந்தையின் பெற்றோர் பன்றிமலம் பொறுக்கியவர்கள், தாய்வழிப்பெர்றோர் மாடுமேய்த்தவர்கள் அம்மாவுக்கு படிப்பறிவேயில்லை, அப்பாவுக்கு 2 மனைவியர், 20 குழந்தைகள், இப்படிப்பட்ட சூழலில் பிறந்துவளர்ந்த ஞான் கலவியே குறியாய் படித்து, முன்னேறி, இன்று அகில இந்திய தலீத்து, மாநாட்டின் தலைவியாக யூரோப்பிய நாட்டுக்கு செல்கிறேன், என்றபோது சபாஷ் போடத்தோன்றியது.

என்னை எவனொருவன் தலீத் என்றெண்ணி ஒதுங்கிப்போகிறானோ, அவனைக்கண்டு ஞான் தான் வெட்கப்படுகிறேன், அனுதாபப்ப்படுகிறேன், என்று மேடையில் முழங்கிய , சிவகாமியைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, கொஞ்சம் பிரமிப்பாய் கூட இருந்தது. சிவகாமியின் எழுத்தைப்படித்து ஓரளவுக்கு எதிர்பார்த்தாற்போலவே தான் தோற்றம். கறுப்புத்தான் என்றாலும் பளீரென்ற சிரிப்பில், ஒட்டவெட்டிய கிராப்புத்தலையும், கட்டுக்குட்டான [சிவகாமியின் பாஷைதான்] உடல்தோற்றமுமாய் அழகிய டிஷ்யூ சுடிதாரில் கவர்ச்சியாகவே தெரிந்தார்.மறுநாள், சிங்கையின் ப்ரதான சைவ உணவகத்தில் இக்குவனம் அய்யா, இவள், சிவகாமி மூவருமாய் மதிய உணவுண்டு கொண்டே, பேசிய விஷயங்களும், மறுநாள் காலை தொலைபேசியில் சம்பாஷித்த தகவல்கலுமாய் தொகுத்துள்ளேன். தமிழில் கேட்ட கேள்விகளுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் வந்து விழுந்த கேள்விகட்கு அழகான பிழையில்லாத ஆங்கிலத்திலும் சிவகாமி உரையாடினார்.

தமிழிலக்கியம் மட்டுமல்ல, மலையாள இலக்கியம், முற்போகுவாதம், நவீனக்கவிதை எனபலதுறை பற்றியும் பேசினோம். சிரிக்கசிசிரிக்க, பொறுமையாக, தெளிவாக தன் கருத்துக்களை சிவகாமி எடுத்தியம்பினார், சிவகாமி, நாவலாசிரியை மட்டுமல்ல, ஊடாடி எனும் குறும்படமெடுத்து தமிழக விருதும்கூட பெற்றவர். ------------------------------------------------------------------------------------------------------


கே---காத்தமுத்து, பெரியண்ணன், நலமா அம்மா?

சிவ----[பளிச்சென்று சிரிக்கிறார்,,] அவர்கள் நலமாக உள்ளதால் தானே ஆனந்தாயியும், கனகு நாகமணி, போன்றோர் உருவானார்கள்.

கே---சமகால இலக்கியம் இன்று தமிழ் நாட்டில் எப்படியுள்ளது?

சிவ--- ஆரோக்கியமாகவே உளளதாகவே நம்புகிறேன்.

கே--பழையன கழிதலும் நாவலின் பிறபகுதி இன்னும்கூட கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாமோ எனும் குறையை ஆனந்தாயி நாவல் பூர்த்தியாக்கியுள்ளது. என்றாலும் ப்ராமணீயத்தை தாக்குவதென்பதும், நையாண்டியாக எதிர்ப்பதும், இன்றைய முற்போக்குவாதமாக
பல இடங்களில் காணப்படுகிறதே, இது சரியா?

சிவ--- அது அவரவர் பார்வையை பொறுத்த விஷயம். இலக்கியத்தில் எதுவுமே நையாண்டியில்லை.அவரவர் அனுபவத்தை அவரவர் எழுதுகிறார்கள்.

கே--- தலீத்திய இலக்கியம் ஒரு தலீத்தால் மட்டுமே எழுதமுடியும் அப்படிப்பட்ட எழுத்து மட்டுமே வெற்றிபெறும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.ஏன் மற்றவர்களால் அவர்கள் வேதனையை உள்வாங்கி எழுதமுடியாதா?

சிவ---- சேச்சி, கிராமம் என்றால்கூட என்னவென்று தெரியாத உங்களுக்கு சேரியைப்பற்றி என்ன தெரியும்?. காயம் பட்டவர்களுக்கு மட்டுமே ரணத்தின் வலி புரியும்.பள்ளிச்சிறுமியாக உள்ளபோது, வயசுக்குவந்த தோழியின் வீட்டுக்குச் சென்றபோது மொட்டைப்பாட்டி ஒருத்தி அத்தனை பேரையும் உள்ளேவிட்டு , என்னை மட்டும் வெளியே சாக்குப்போட்டு அமர்த்தி, தனி லோட்டாவிலும் அலுமினிய வட்டிலிலும் சாப்பாடு போட்டதை மறக்கமுடியுமா? படித்து பட்டம்பெற்றும், ஐ. ஏ. எஸ். பயிற்சியின்போதும் கூட என்ன்னிடம் முக்கியப் பொறுப்பு ஒப்ப்டைக்கப்பட்டபோது, தாங்கமாட்டாத , அந்த உயர்சாதிப்பெண் ஒருத்தி, ஷெட்யூல் காஸ்ட் பிட்ச்' என காதுபடவே திட்டினாளே, கற்றறிந்தும் கூட நாகரீகம் கற்காத இவர்கள் எங்கே முன்னேறியிருக்கிறார்கள்?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பந்தலே ஒழிய, நடைமுறையில் பக்கா பச்சோந்திகளாக வாழ்பவர்களைப்பற்றி எழுதினால் என்ன தப்பு?

கே-- எழுத்தில் ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒன்றுதான், எங்களைப்பாகுபடுத்தி அல்லது பிரித்துப்பார்க்காதீர்கள் என்று சில பெண் எழுத்தாளினிகள் கோஷம் போடுகிறார்களே? இது ஏற்புடையதுதானா?

சிவ-----சேச்சி, நீங்களே, எழுத்தாள்ர்தானே உங்கள் அபிப்ராயமென்ன????????????????????????????

எண்டெ பதில்------- நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது,ஏன் நினைத்துப்பார்க்ககூட முடியாது. ஒரு ஆடவ எழுத்தாளரின் எழுத்துக்கும் ,
எண்டெ எழுத்துக்கும் நூறு நூறு வித்தியசங்களை என்னால் காட்டமுடியும்,பெண்மையின் உளவியல்சிறப்பினை ஆண்களோடு ஒப்பீடு செய்வதே தப்பு,

சுட்டுப்போட்டாலும் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுபவத்தை ஒரு ஆடவ எழுத்தாளரால் உணர்ந்து எழுத முடியுமா? பிரசவவலியை அனுமானித்து எழுதிடல் முடியுமா அம்மா?

சிவ----சபாஷ், சேச்சி, இதுவே தான் எந்தன் கருத்தும் கூட, பெண்மையின் தனித்துவத்தை தூர நின்று பார்ப்பதுபோலல்ல, அனுபவித்தெழுதுவது-------தாய்மை என்று, மட்டுமல்ல, பெண்ணின் அனைத்துக்கூறுகளுமே ---அடடா இப்பொழுது புரிகிறதா?

இதுபோலவேதான் தலீத்திய எழுத்தும் ஒரு தலீத்தால் எழுதினால் மட்டுமே சிறப்புறும் என்று உடனே என்னை மடக்கினார்.

{தொடரும்}