Saturday, January 31, 2009

கட்டுரைத்தொடர் - --- கவிதாரஸம்

[ கவிதாரஸம்]

கவிதை என்றாலே எதுகை, மோனை, யாப்பிலக்கணம்,முறையாகப் பயின்றவர்களால் மட்டுமே தரமான கவிதைகளை படைக்கமுடியும் , என்பது என்டெ அழுத்தமான நம்பிக்கை. இல்லையோ என்று அண்மையில் என்னை சிந்திக்கச் செய்த சில கவிதைகளை இணையத்தில்
வாசிக்கக் கிட்டியபோது, ஏனோ அகம் மகிழ்ந்து போனேன். உடனே அது தப்பு என, சரேலெனக் கீறிவிட்டு ரத்தம் கொப்புளிக்கும் துளியைக் கண்டபோது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

கவிதை என்றால் என்ன?
வார்த்தை விளயாட்டில் மொழி தெரிந்த யார் வேண்டுமானாலும் விளையாடலாமாக்கும்?அதுவும் எப்படி? அதிரடி, உத்திகளும், தடாலடி சாகஸங்களும் மட்டுமே இருந்தால் கூடபோதுமே, ஞான் தான் கவிஞன், ஞான் எழுதுவது மட்டுமே கவிதை, அல்லது, இதுதான் புதுக்கவிதை, என்ற அலட்டலகளையெல்லாம் காணும்போது, இப்பொழுதெல்லாம் எந்த கவிதை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்தாலும் ,
ஏனோ மனசு சுகப்படவில்லை. கவிதைகள் முன்று தளங்களில் இயங்கி வருகிறது.ஒன்று-பழமைத்துவத்தளம், இரண்டு-- நவீனத்துவத்தளம்,மூன்று, பின் நவீனத்துவத்தளம்...
ஆனால் மானுடத்தை முன்னெடுத்துச்செல்லும்,முற்போக்கு அணி, பகுத்தறிவின் பாசறையே, எங்கள் பின் நவீனத்துவக்கவிதைதான், என்று சொல்லிக்கொள்ளும் கவிஞர்கள் ஒன்றை மறந்து போனார்கள்.கவிதையின் காலணியாக எழுதுபவர்கள்கூட,உரை வீச்சில் அப்படி என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்?புதுக்கவிதையில் , நிமிஷத்தில் சொல்லமுடிந்த ,கருத்தை மரபுக்கவிதையில் சொல்லமுடிவதில்லையே என்பது ,
மற்றொரு சாராரின் குற்றச்சாட்டு.வள்ளுவரும் ,இளங்கோவும், கம்பரும், பட்டினத்தாரும், சொல்லாததையா இனி சொல்லப்போகிறார்கள்?, என்பவர்கள் அருமையான, அற்புதமான , ஒரு கவிப்பொக்கிஷத்தின் பெயரை மறந்துபோனார்கள், அவர்தான் மஹாகவி. அவர் தான் கவி, அவ்ர்தான் கவிதை, என்பது , வெறும் பரவச வசனமல்ல.பாரதியே கவிதை, பாரதி மட்டுமே கவிதை, பாரதிக்கீடான கவிஞன் , இனிதான் பிறக்கவேண்டும்., என்பதை, மலையாளிகள் ஏற்றுக்கொளவேண்டுமென்று ஞான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை. கவிதையின் உள்ளடக்கமும்,உருவகமும், வெளிப்பாடுகளில், ஆழமும், கூர்மையும், பாடுபொருளும், ஒப்பு நோக்கிப்பார்க்கும்போதும், என்டெ பாரதியின் மாண்பு புரியும். எந்த ஒரு நல்ல கவிதை படிக்கும் போதும் பாரதியின் தாக்கம் தானே என்று மனசு உல்லாஸிக்கிறது.பாரதியைப் படிக்கும்போதெல்லாம் ஆனந்தத்தில் விம்முகிறேன், புத்திலக்கியப்பார்வையைவிட, வார்த்தை அழகில், அவனது அலகிலா விளையாட்டில், கரைந்து கரைந்து அழுகிறேன். இந்த பரவசம் எனக்கு மட்டும், எனக்கு மட்டுமே, என்று சொந்தம் கொண்டாடுகிறேன்.

மலையாளக்கவிதைகள் அரசியல் பேசுகின்றன.மக்களோடு ஐக்கியப்பட்டுள்ளன . ஆனால் நவ கவிதை மட்டும் மக்களிடம் சென்றடையவேஇல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு,கடம்பனிட்ட ராமக்ரிஷ்ணன், போன்றோரின் கவிதைகள் மரபு பேசினாலும், தனித்வம் விலகவில்லை. நமக்குத்தெரிந்த, நாம் அறிந்த விஷயத்தையே,மிக இயலபாகவும் கூர்மையாகவும் ஒரு கவிஞன் சொல்லும்போது, அட, என்று ஒரு நிமிஷம்
வியந்தாலும் கூடப்போதும் அதுவே கவிஞனின் வெற்றி, .எப்பொழுது வாசகனின் உணர்வுகளைத் தொடமுடியுமோ, அப்பொழுதே அவன் பாதிக்கிணற்றைத் தாண்டிவிடுகிறான்.அறிவுஜீவித்தனமான வசீகரத்தால் மட்டும் ஒரு கவிதை வெற்றி பெறுவதில்லை.ஆழ்ந்த சிந்தனையும், முறையான கவிவடிவமும் , நாம் காணும் படிமத்தின் வெளிப்பாடே, என்பதை உணரும்போது தனித்துப்பார்த்து ரசிக்கத்தோன்றுகிறது.
மரபு வடிவங்களை, நாட்டார் பாடலின் செழுமையின் தாக்கத்தால் வரும் கவிதைகள் கூட பேசுகின்றன, பிரச்சாரக்கவிதைகள், செய்தி சொல்லும் கவிதைகள், மழை வெள்ளத்திலடித்துச் செல்வதுப்போல் , மறைந்து விடும், எழுத்து என்பது சமூக மாற்றத்துக்கு ஒரு கருவி என்பதில் அட்டியில்லை ஆனால், எழுத்து வேறு , வாழ்க்கை வேறு, எனும் தளத்தில் எழுதுபவர்களும் , அவ்வப்ப்போது நல்ல கவிதைகளையே தருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மொழியறிவோ, எந்த அனுபவமுமே இல்லாமல்,முரண்பாடுகளை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு, சாகஸம் செய்வது சாஹித்யமல்ல. இலக்கியத்தில் மொழி என்பது வெறும் feudal language மட்டுமல்ல.ஆழமாக நாம் கடக்கவேண்டிய பொக்கிஷம், அப்பொக்கிஷத்தின் ஒரு துளியை , தேனாய் , விழுங்கும் அமிர்த சுகம் , உணர்ந்த பிறகு , பேனாவை எடுங்களேன்

[சாஹித்ய கமலம்--தொடருக்காக, ]

Sunday, January 11, 2009

நிகழ்வுகள் - பொன்னே, பூவே, வாழ்த்துவின்

[ பொன்னே, பூவே, வாழ்த்துவின்]


வெள்ளிக்கலச 'நிற பற' நிறைய நெல்லும், மேலே வெள்ளிக்காசும் நிறைத்து ஒருபுறம்,இன்னொரு மரக்கால் நிற பற முழுக்க , அரிசியும், மேலே பூக்களும் நிரப்பி,
குடம் பால் ஒருபுறம், துளசிதீர்த்தம் மறுபுறம், நடுக்கில் கும்பம் உச்சியில் பட்டுக் கவசத்தில் அலங்கரித்து, சுற்றிலும் 9 வகை பழ வர்க்கங்கள், கஷவுப் பட்டு, ஸ்வர்ண ஆபரணங்கள், குங்குமம், மஞ்சள், பன்னீர், காசித்தீர்த்தம், ஸ்வாமிஜியின் அன்பளிப்பான கைவல்ய மாலை, உருத்ராட்சம் , அனைத்துக்கும் மேலாய் , மணக்க மணக்க வாசமிகு மல்லிகைப்பூக்களால், அனைத்து என்டெ ஈஷ்வரன்மாருக்கும் மல்லிகை மாலை, ரோஜாமாலை, செண்பகமாலை என அலங்கரித்து, முகம் பார்க்கும் கண்ணாடி ஒருபுறம், பச்சப் பசேல் என்ற காய் வர்க்கங்கள், [பூசனிக்காய், குட்டிப்பலாக்காய், ]பச்சை மரகதப்பட்டுக் குவியலில் கணபதி, என அலங்கரித்த பின்னர்,
மல்லிகைப் புஷ்பமாய்க் கணவரின் கண்களைப்பொத்தி, அழைத்து வந்து, பூஜை அறையில் நிறுத்தி, மெய்ம்மறந்து நின்ற வினாடி, ஒரு நிமிஷம் ,ஒரே ஒரு நிமிஷம், அம்பிகை கண்களைச்சிமிட்டி, பூவாய்ப் பூத்துச் சொறிந்த புன்னகையில் ,
நிலமாலையாய், விழுந்து வணங்கி, பின் கணவரையும் நமஸ்கரித்து, எழுந்த வினாடியில் புது வருசம் மங்களகரமாய் பொலிந்து வரவேற்றது.
பின் கை நீட்டம், கணவர் கையால் இன்று கை நீட்டம்[பணம்] வாங்குவது வெகு விசேஷம், மலர்ந்துபோய் கணவர் கை நீட்டம் தந்தார். [ஆனால் எதிர் பார்த்த தொகை தொகை கிட்டவில்லை]

சத்யவட்டம் [விருந்து] உண்ண அமர்ந்த நிமிஷம் ,அனைத்து என்டெ மின்தமிழ் சார்ந்த, அன்பான அருமைக்குரிய நிங்ஙள் எல்லோருக்கும் மானாசீகமாய் விருந்து படைத்துவிட்டு, வாழ்த்துகிறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிகழ்வுகள் - ஸ்த்ரீ

[ஸ்த்ரீ]


இப்படியொரு தர்ம சங்கடத்தை இவள் எதிர்பார்க்கவே இல்லை.இரண்டு எதிரிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வதுதான் விதியின் சதியா?இந்த ஜென்மத்தில் யாரை ஸ்வப்னத்தில் கூட பார்க்கக்கூடாது என்றெண்ணியிருந்தாளோ,சாக்‌ஷாத் அதே எதிரியும்,இவளும்ஒரே களத்தில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை என்னென்று சொல்ல.

4 ஆண்டுகட்கு முன்பு ஸ்த்ரீ, என்ற தலைப்பில் வெளிவந்த நாவலைப்பற்றி, சொல்ல வேண்டிய அவசியமல்ல.
அவ்வளவு பிரசித்தி பெற்ற நாவலா என்று கேட்டால்,, ஊஹூம், இல்லை, என்றும் சொல்லமுடியாது.ஆம் என்றும் சொல்லமுடியாது.
ஆனால் கீர்த்தி பெற்றது கண்டனத்தில் என்றுமட்டும் உறுதியாக விளம்பிடலாம்.
இந்த நாவலைப்படித்த பெண்களில் யாருக்கெல்லாம் சண்டாளமாய் கோபம் வந்ததோ தெரியாது,
ஆனால்,இவளுக்கு பொளிந்து கொண்டுவந்தது, பதறிக்கொண்டு வந்தது கோபம்.அப்படிப்பட்ட வக்கிரம், பச்சை,கொச்சையாய், பெண்களைத்திட்டி,
பெண்கள் என்றாலே போகம், பெண் என்றாலேஆண்மயக்கி, பெண் என்றாலே, ----வேண்டாம், எழுத முடியவில்லை.
அவ்வளவு மோசமாக பெண்களைப்பற்றி எழுதப்பட்டிருந்த நாவல். நூல் வெளி வந்த கட்டத்தில் மிகக் கடுமையாக, இவள் ஸ்த்ரீ நாவலை
கண்டித்து விமரசனம் எழுதியிருந்தாள்.அந்த விமர்சனம் கேரளத்தின் குறிப்பிட்ட பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது
இலக்கியம் படைத்தல் ஒன்றும் லேசு பாசு அல்ல,
அது தவம்,யாகம், என்றெல்லாம் இவளும் மெய்ம்மறந்து வசனம் பேசிய காலம் ஒன்றுண்டு, ஆனால் ஸ்த்ரீ நவலைப்படித்தபிறகு ஏனோ பேனா
பிடிக்கவே வெறுத்துப் போயிற்று. இப்படிக்கூட ஒரு ஆண்மகன் எழுதுவாரா? நினைக்க நினைக்க நெஞ்சு கொதித்தது.உடலம் நடுங்கியது. ஏனோ
கணவரைப் பற்றிக்கொண்டு அழவேண்டும் போல் அப்படி துக்கம் துக்கமாய் வந்தது.
ஏனிந்த நீஜம்?எங்கே கோளாறு? யாரிந்த எழுத்தாளர்?
சுய காழ்ப்புணர்வை அடகு வைக்கவா இலக்கியம்?எந்தப்பெண் இப்படி எழுத வைத்தாள்? அப்படியே எவளாவது ஏமாற்றி
யிருந்தாலும் அவளைத்தானே திட்டவேண்டும்?அதைவிடுத்து ஒட்டுமொத்த ஸ்த்ரீ வர்க்கத்தையும் திட்டுவதென்றால் இது என்ன அடாவடித்தனம்?
பெண்ணிலிருந்து பிறந்து, பெண்ணுடனே வாழ்ந்தும் பெண்மையை இழிவாகப் பேசுவதென்றால், --------
பெயரைப்பார், ஆகாஷாம். -------ஹ்ம்ம்---
நவீன நாடகாசிரியராக பட்டறைக்குள் நுழைந்த Dr. ஆகாஷைப் பார்த்தபோது,கிட்டிய அதிர்ச்சி எதிர்பாராதது.
இவள் கற்பனை செய்து வைத்திருந்தது ,உழுதமுகமும், நீண்ட தாடியும், கஞ்சாக்கண்களுமாய், அலட்சியமான ஒரு முகத்தை.
ஆனால் சந்தித்ததோ சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாந்தமே உருவான முகத்தோற்றம் கொண்ட ஒருவரை.
பொல்லென்று வெளுத்த தலைமுடி.உயரமும் பருமனுமாய் ஆஜானுபாகுவான தோற்றம்.
ஆனால் அமெரிக்க ஆங்கிலம் கமழ,சகலருக்கும் கை கொடுக்க ஆகாஷ் வந்தபோது, இவளால் எங்குமே ஓட முடியவில்லை.
இவள் முறை வந்தபோது நமஸ்காரம் என்று மட்டும் கைகூப்பிவிட்டு, பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு,
விடு விடுவென்று நடந்துபோய் கல்யாணிக்குட்டியோடு பேசத்தொடங்கிவிட்டாள்.
பின் என்ன? பெண்களைத் திட்டுபவரோடு மனுஷி பேசுவாளா?
அதுவும் ஒரு எதிரியோடு?
அடுத்த 2 மணி நேரத்தில் மீண்டும் இருவருமே முகத்தோடு முகம் சந்திக்க வேண்டிய கொடும்விதி
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல்.,என அனைத்துக்கூறுகளையுமே அலசும் நிகழ்வு.
எல்லோரும் அவரவர் அனுபவங்களையும் பேசிட ஆகாஷ் வாயைத் திறக்கவில்லை. 4 மொழிகளில் இவளைக்கவர்ந்த சிறுகதைகளை இவள்
அறிமுகப்படுத்தினாள்
கேள்விமழையால் வாசகர்கள் துளைத்தெடுக்க,மேனன் ஏட்டனின் குரல் ஓங்க, கல்யாணிக்குட்டி சிரித்து பதில் கொடுக்க, ஜேக்கப் ஸார்,
தர்க்கிக்க, குஷியோடு மேகா விளக்க, வர்மாஜி இடையில் ஏதோ பேச , வாசகர்கள் விடவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்று மட்டும் புரிந்தது.
வாசகர்கள் அபாரமாய் வளர்ந்துள்ளார்கள்.இலக்கியம் என்ற பெயரில் எந்த தகிடுதத்தமும் இவர்களிடம் பலிக்கவில்லை.
நவீனத்துவம் , பின் நவீனத்துவம் , இதுதான் மறுனாளைய முக்கிய நிகழ்வு. Drஆகாஷின் பட்டறை. சிரமப்பட்டு சலனமில்லாத முகத்தோடு
போய் அமர்ந்தாள்.
new wave, என்டெ ஈஷ்வரன்மாரே,னவீன நாடகமென்றாலே ஒவ்வொருவருமே அவரவர் பாணியில் அடூர் கோபாலகிருஷ்ணன் தானே?
காத்திருந்த நிமிஷம் வந்தது. எழுந்தாள், கேட்டாள்.
நிங்ஙளின் இன்றைய theatre exprerimentalலில் ஒரு பெண்ணின் சாயல் கூட இல்லையே?ஏன் பெண்களைப்பற்றி நாவல் மட்டும் தான் எழுதுவீர்களா?
நிகழ்வில் காட்ட முடியாதோ?

ஆகாஷ் அப்படியே திகைத்துப்போய் தடுமாறவில்லை. [அங்கும் ஏமாற்றம்] மாறாக இவளைப் பார்த்து புன்னகை மலர சிரித்தார்..
ஒரு நிமிடம் நிதானித்தார்.பிறகு கூறினார்.
"என்டெ ஸ்த்ரீ நாவலை கிழி கிழியென்று கிழித்தீர்களே? அதனால் நிங்ஙளைக் கண்டு எனக்குப் பயம்."
என்றிட ,அந்தக் கேலியில் பொதிந்திருந்த எள்ளலை இவளால் மன்னிக்கவே முடியவில்லை. சிலிர்த்துப்போய் பதிலடி கொடுக்க எழ முயன்றபோது, இப்பொழுது ஞான் அரங்கேற்றியது, dynamics of acting in verbal communications'
இவள் விடவில்லை. ஏன் verbal நிகழ்வைக்கூட, silent talk ல் தான் காட்டவேண்டுமா?
இதுதான் என்டெ பாணி,என்று அழுத்தம் திருத்தமாய் ஆகாஷ் பதில் தர அதற்கு மேல் இவளால் எகிற முடியவில்லை.
பின்னரும் வழக்கமான நிகழ்ச்சி நிரல், என்று எப்படியோ 7 நாட்கள் கடந்தது.
கல்யாணிக்குட்டி, சுரேஷ் ஏட்டன், வர்மாஜி, மாலதி நாயர்,மேகா, ஆனந்தவல்லினம்பீசன், என எல்லோருமே அவரவர் நாட்டுக்குத் திரும்பிபோகும்
நாள் .பிரியாவிடைவிருந்து அன்று ஆகாஷ் ஸ்த்ரீ நாவலைப்பற்றிய சர்ச்சைக்கு சம்மதித்தாராம்.
இனி ஸ்த்ரீ நாவல் சுருக்கம் பார்ப்போமா?

சாமூத்ரி[உயர்குலத்தைச் ]சேர்ந்த விஜயமும் , அதக்ருதவர்க்கத்ததைச்[ புலையக்க்குடி] சேர்ந்த முத்தப்புனும் டெல்லிப் பல்கலைக்கழகத்தில்,
ஈருடலும் ஓருயிருமாய் காதலித்தார்கள்.ஆனால் விஜயத்தின் வயிற்றில் முத்தப்பனின் கரு உண்டானதும், மும்பாயில் உறவினர்வீட்டில் போய் தங்கியிருக்கச்செய்து , பிரசவித்த குழந்தையை, கிரித்தவ மடத்தில் விட்டுவிட்டு,மகளை அழைத்துச் செல்கின்றனர் பெற்றோர்
படிப்பும் வசதியும் நிரம்பிய நம்பூதிரிக்கு மனைவியாகி , மதிப்புமிகு அந்த்ர்ஜனமாய் விஜயம் நடமாடுகிறாள்.
எதேச்சையாக ஒரு நாள் சந்தித்த கல்லூரித்தோழன் குஞ்ஞு குட்டன் மூலம் விவரமறிந்த முத்தப்பன் , குழந்தையை தக்க சான்றுகளோடு
சென்று நிரூபித்து, குழந்தையைக் கொண்டு வந்து வளர்க்கிறான்.முத்தப்பன் ஜாதியில் புலையனாயிருந்தாலும், உயரிய கல்வித்தகுதி யால்
சமுதாயத்தில் பெரிய பதவியிலிருக்கிறான்.ஆனாலும் இறுதிவரை திருமணமே செய்யவில்லை.
மகன் கிருஷ்ணப்பிரசாத் வளர்ந்து, பெரியவனாகி, விவரமறிந்து,, ஒரு நாள் தாயைக் காணச்செல்ல,அங்கே விதவைத்தாய்,
நோயாளியாகி,கிழடு தட்டி, குழந்தைப்பேறே இல்லாமல், கணவரையும் பறிகொடுத்தனிலையில்,னிற்கும் பரிதவிப்பு கண்டு, தன்னோடு வந்து விடுமாறு
கேட்க,கண்ணீரோடு முடியாது என்று மறுத்துவிடுகிறாள்.
என்டெ சமுதாயம், என்டெ காலில் இட்ட விலங்கு இந்த வாழ்க்கை. உன்னோடு ஞான் வரமுடியாது. தயவுசெய்து நீ என்டெ மகன் என்று மட்டும் இங்கு யாரிடமும் சொல்லிவிடாதே, உடனே போய்விடு'என்று கைகூப்ப, வாசலுக்கு வந்த கிருஷ்ணப்பிரசாத் காறித்துப்புகிறான்.
பிறகுதான் அவனுடைய கிருஷ்ணலீலை தொடங்குகிறது.பார்க்கும் பெண்களில் படிபவள் என்று தெரிந்தாலே போதும், அப்படி அனுபவிக்கிறான்,
பெண்,பெண், பெண்,என அலுக்காமல் புரள்கிறான்..ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கையும் சலிப்பூட்ட, பின் எவளையுமே பிடிக்கவில்லை.பெண் என்றாலே வெறுப்பு, பெண் என்றாலே குமட்டல்,பெண்களைக்கண்டாலேயே,---
இப்படிப்போகும் கதை, முடிவதும் இதே ரீதியில்,
சில வரிகளைப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு அபத்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.
ஹூம்,ம்ம்
பிரியாவிடை விருந்து அன்று ஆகாஷின் நாவலைப் பற்றி க் கேட்க யாருக்குமே மனம் வரவில்லை.
தமிழ், மலையாளம், இந்தி, குஜராத்தி,லத்தீன், பிரெஞ்சு,எனப் பலமொழிகள் கற்ற ஆகாஷ் , இசையிலும் கஜல் அசலாகப் பாடக்கூடியவர்
நண்பர்கள் வற்புறுத்த அவர் பாடியபோது அதிலிருந்த சோகம் நெஞ்சைப் பிசைந்தது.
அதைவிட ஆச்சர்யம் சுத்த சைவம் அவர் என்று தெரிந்தபோது, நம்பவே முடியவில்லை.
அடைப்பிரதமனில், கதலிப்பழமும், பப்படமும் கூட்டி. ஒரு வட்டக்கப்பில், வார்த்து, சாப்பிட இவள் அமர்ந்தபோது,
2 ரொட்டித்துண்டுகளும், அவியல், தோரன், துணைபதார்த்தமாய், இவள் எதிரில் வந்தமர்ந்தார் ஆகாஷ்.
கமலம்,
இங்கு வந்த அன்றே என்டெ நாவலை விமர்சித்தவர் நிங்ஙள் தான் என்று எனக்குத்தெரியும்,விமர்சனம் வந்த காலகட்டத்தில் இதைவிட
மூர்த்தாண்யத்தையே ஞான் சந்தித்திருந்ததால் எனக்கு நிங்ஙளின் விமர்சனம் ஒன்றுமேயில்லை.ஆனால்
, இலக்கியம் என்பது, மல்ர்ப்பூக்களால் நெய்த சொகுசு மட்டும் அல்ல என்பதை நிங்ஙள் ஏற்க மறுக்கிறீர்களே, இதுதான் வருத்தம்.
ஆங்கிலத்தில் இப்படியொரு எழுத்து வந்தால் எதிப்பீர்களா? [ஆங்கில இலக்கிய ரசனையல்ல நம் இலக்கியப்பார்வை/என்பதை எப்படிச்சொல்ல.]
எண்டெ வலி, எண்டெ எரிச்சல்,எண்டெ கோபம்,எல்லாம் தான் ரெளத்ரமாக வெடித்தது அந்த நாவலில்'
அந்த நாவலில் வரும் கிருஷ்ணப்ரசாத் யாரென்று தெரியுமா?
இவளால் பேசவே முடியவில்லை. என்னால் யூகிக்கமுடிகிறது, எனும் போதே நா தழுதழுத்தது
கல்வி, தகுதி, எல்லாமே இருந்தும் எண்டெ தந்தையை ஒதுக்கிய காரணமென்ன?இந்த புரையோடிப்போன சமுதாயத்தின் ஜாதிவெறிதானே?
பெற்ற பையனையே ஏற்றுக்கொள்ள முடியாத அந்த ஜென்மத்தை, நலிந்து கிடந்த நிலையிலும் என்னை விரட்டியடித்தவளை
நீஜ வார்த்தைகளால் திட்டினால் என்ன? என்டெ அவமானத்துக்கு வேறு என்ன தான் வடிகால்? சொல்லுங்கள்?ஆகாஷ் பேசி நிறுத்தியபோது,
இவளுக்கு கண்கள் நிரம்பிவிட்டது.,
போகட்டும் அவரை மன்னித்து விடுங்கள் அம்மாதானே, என்று சொல்லக்கூட முடியவில்லை .
பிறகு ஆகாஷும் பேசவில்லை. மெளனமாகவே சாப்பிட்டு எழுந்தனர்.
விடைபெறும்போது கல்யாணிக்குட்டி ஆச்சர்யத்தோடு கேட்டாள்.
அட, என்ன இது? இரண்டு எதிரிகளுமே பேசிவிட்டீர்களா? -- ஏனோ இவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
ஆகாஷ் நட்போடு நீட்டிய கரங்களைப்
பற்றிக் குலுக்கிவிட்டு, திரும்பியபோது , இலக்கியத்தின் புதிய பரிமாணம் தென்றல் காற்றாய் அவளை வருடியது.

சிறுகதை------"தாகம்'

[பெண்ணியம் காலனித்துவம் போன்ற வாதங்கள்,சபையில் இதுவரைத் தவிர்க்கப் பட்ட, தடை செய்யப்பட்ட உரைகளை , முதற்படுத்த முனைகின்றன..
உதாரணமாக,பெண்ணியல் வாதிகள் எழுப்பும் ஒரு கேள்வி, அகோரமான, போர்க்களங்களை, விவரிக்கும் இலக்கியம் ஏன்,
பெண்களின் சில சராசரி உடல் நிலைகளை விவரிப்பதை மட்டும் அனாகரிகமாகக் கருதுகிறது'??.என்பது?
இதைப்போன்ற ஒரு வித்தியாசமான நிலையைச் சபையின் முன்னிலையில் வைக்கிறது இச்சிறுகதை,.]-சிங்கா ஆசிரியர் குழு.]



எழுத்து------ கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.
சிறுகதை------"தாகம்'




கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது.
அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை.
தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது.

அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில்
கனன்று கொண்டிருந்தது. முட்டிக்கால்களிலும் முணுமுணுவென்று இனம் புரியாத ஒருவித வலியென்றால், மார்பகங்களிலும் கூட நெறிகட்டிக்கொண்டாற்
போல் வலியில் விம்மியது. தலைவலியும் கட்டியங்கம் கூறுகிறாற்போல் விண் விண்ணென்று தெறிக்கத்தொடங்கியது..

கண்களை அசக்கினாலும் தீப்பறந்தது. உடம்பு முழுவதும் மழுவாய்க் கொதிப்பதை தாரிணியால் உணரமுடிந்தது. ஆனாலும் தொண்டை ஒரு முழுங்கு
தண்ணீருக்காகத் தவித்தது. அந்த வரட்சிதான் தன்னை மறந்து எழவைத்தது. ஆனால் இரண்டெட்டுக்கூட நடக்கமுடியவில்லை. கண்ணை இருட்டிக்கொண்டு
வரவே தலை குப்புற மீண்டும் கட்டிலிலேயே விழுந்து விட்டாள். சில நிமிடங்களுக்கு ஆகாயத்தில் நீலப்பூக்கள் பறந்தன. வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப்பறந்தன.
சவமாய், ஜடமாய், எவ்வளவு நேரம் தான் கிடந்தாளோ?
திடீரென்று அடிவயிறு குழைந்த உணர்வில் நரம்புகள் சிலிர்த்தன.இப்பொழுது நினைவு திரும்பிவிட்டது. கூடவே உடலில் ஒவ்வொரு கூ்றுகளும் வலிக்கத்தொடங்கிவிட்டது.வயிற்றுவலி இப்ப்பொழுது தாளவே முடியாமற் போய்விட்டது. தாரிணிக்குத் தன் உடலே தனக்கு அந்நியமானாற்போல்
விரக்தியின் எல்லயில் வெறுத்துப்போய்க் கிடந்தாள்.

சரீரம் முழுவதும் காந்திய அனலின் வெப்பத்தினால், மீண்டும் நா வரண்டது..தாகம் அ நியாயத்துக்கு அவளை வாட்டியது. அழவே கூடாது என்ற வைராக்கியத்தையும் மீறி, இமையோரம், வெந்நீராய் வழிந்து தலையணையை நனைத்தது.மாதந்தோறும் வரும் மரணாவஸ்தைதான், என்றாலும் இப்பொழுதுதெல்லாம் தாரிணியால் தாங்கவே முடியவில்லை.பூப்பெய்திய பெதும்பை பிராயம் முதல், இன்றைய நடுத்தர , அகவையிலும்,
மாதவிடாய்த்தொல்லை ஒருத்தியை இப்படியும் வாட்டுமா? எல்லாப்பெண்களுக்கும் மூன்று நாட்கள், மிஞ்சிப்போனல் ஆறு நாட்கள்தான், என்றால் இவளுக்கு மட்டும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு இயற்கை அவளை பிழிந்தெடுக்கும். உடலின் சக்தி முழுவதையும் பறி கொடுத்து,உதடு உலர்ந்து,வெளிறிப்போய்,
ரத்தசோகையாலேயே, லோ ப்ரஷர், , முதலில் இவளுக்கு வணக்கம் கூறியது.

அடுத்து மாதாமாதம் சக்தியின் விரயத்தால், இதயம் பலவீனமாகி, 'இதய நோய்' ஆசையோடு தாரிணியை அண்டிக்கொண்டது..இதற்குப்பிறகு, நாடித்துடிப்பின் வேகம் கூட அடிக்கடி கண்ணாமூச்சி ஆட விழைந்தது.ஆகவே சதா மயக்கம்,தலைசுற்றல்,என எப்பொழுதுமே மசக்கைக்காரிகளைப்போல், பலவீனத்தின் அடிமையாகிப்போன
துர்பாக்கியம்தான் அவளால் ஒத்துக்கொள்ளவே முடியாத வேதனை, .
உபாதை பட்டுப்பட்டே, வயிற்றுவலியே அவளுக்கு திகட்டிவிட்டது, என்று கூடக் கூறலாம்.

அதனாலேயே தாரிணி இப்பொழுதெல்லாம் மருத்துவர்களையே மதிப்பதில்லை..அது என்ன?எப்பொழுது சென்றாலும் "'எனிமிக்' "காக இருக்கிறாய்,
என்று சொல்லிச் சொல்லியே, நி்றைய அயர்ன் , கால்சியம் மாத்திரைளை வழங்குவது, அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
"ட்ரிப்ஸ்' ஏற்றுவது? எவ்வளவுதான் ஒருத்தியால் பொறுத்துக்கொள்ள முடியும்?

போகும் உயிர் எப்பொழுதாயிருந்தாலும் போகத்தான் போகிறது.. அதற்கென்ன சிங்காரம் வேண்டிக்கிடக்கிறது..திடீரென்று குழந்தைகள் நினைவு வந்தது.
பள்ளி சென்ற கண்மணிகள் வீடு திரும்பும்போதே அம்மா என்று அழைத்துக்கொண்டு தானே வீடு திரும்புவார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கவேண்டாமா?
குபுக்' கென்று அவளையும் அறியாமல் அழுகை வந்து விட்டது.. எப்பொழுதுமெ இல்லாமலொரு ஆவேசம் உடலுக்குள் புகுந்தாற்போல் அமானுஷ்ய
வேகத்தோடு, சக்தி, அனைத்தையும் திரட்டிக்கொண்டு கட்டிலின் தலை மாட்டைப்பற்றிக்கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள் தாரிணி.

ஒரு கணம் கண்களை மறைத்த இருட்டின் படலம் விலக சில வினாடிகள் பிடித்தது.உனக்காயிற்று ,எனக்காயிற்று .,என்ற ஆக்ரோஷத்தில்
அடிவயிற்றைப் பிடித்துக்கொ்ண்டு மெல்ல எழுந்து நின்றபோது,ஓரளவு சமாளிக்கமுடியும் என்ற தைரியம் பிறந்தது.சுவரைப் பிடித்துப் பிடித்து நடந்தவளால் , ஆயாஸமா? ஊஹூம் , இல்லை, அதீத களைப்பில், இதயம் 'படபட' வென்று அடித்துக் கொண்டது.. நாலெட்டு நடப்பதற்குள், நெஞ்சுக்கூடு படீரென்று அறை வாங்கினாற்போல் வலிக்கத்தொடங்கியது..தாரிணி பொருட்படுத்தவில்லை. எப்படியோ அடுக்களையை அடைந்தவள் தண்ணீர் கூஜாவை நெருங்கியதாகத்தான் எண்ணினாள்.

அதற்குமேலும் இந்தப் பாரத்தைத் தாங்க இயலாது என்பதுபோல், கால்கள் நடு நடுங்க பாதாதிகேசமும் இற்று விழுந்தது. அப்படியே மேஜையைப்
பற்றிக்கொண்டதால், கீழே விழவில்லை. கொதிக்கும் எண்ணைய்க் கொப்பறை்யாய், அடி வயிற்றில் ஒவ்வொரு தசை நாளங்களும்,இப்பொழுது
கொன்று தின்னத் தொடங்கிவிட்டது.உதட்டைக் கடித்து, சமாளிக்க முயற்சித்ததில், பற்களின் அழுத்தத்தில்மெல்லிய உதட்டில் ரத்தம் கசிந்தது தான் பலன்.
நெஞ்சைப் பிளந்து எழுந்த விம்மலால் கண்கள் நிரம்பி வழிந்தபோது, கண்ணக் கொட்டிக் கொட்டியே கண்ணீரை விழுங்கினாள்.

திடீரென்று ' காயத்ரி' மந்திரம் பழக்க தோஷத்தால் நாவில் ஸ்மரிக்க, பறறிக்கொண்டு வந்ததே கோபம் . கோபாமா ,இல்லையில்லை,
வந்ததே சண்டாளம் இவளுக்கு,--கடவுளாம் , கடவுள்,பெண்மையை ஏன் படைத்தாய்,?
பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை, அரிவை, தெரிவை ,பேரிளம்பெண்,என ஏழு கூறுகளாய்ப் பிரித்ததில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனல் ஆண்பாலுக்குக் கொடுக்காத, படைக்காத,துன்பத்தை,பெண்மைக்குமட்டும் வழங்கியதில் ஏனிந்த பாரபட்சம். ஓர வஞ்சனை செய்பவர் எப்படி
பரம் பொருளாக இருக்க முடியும்? இவருக்குப் பூஜையாம், ஆராதனையாம்.?

இதோ ஒரு வாய்த் தண்ணீருக்கு இப்படித் தவிக்கிறேனே? உடல் உபாதையில் இப்படித் துடிக்கிறேனே? எங்கே போனாராம் இந்தக் கடவுள்?
ஹா, அம்மாடி, அய்யோ,சிந்திக்கக் கூட இயலாமல்,அசதியும், ஆயாசமும்,அப்படி ஆட்டிப் படைக்கிறது. அப்படியே மடிந்து உட்கார முயற்சித்தவள்,
அடுத்த கணம் ,அப்படியே, தரையில் சரிந்து விட்டாள். சில்லென்று, தரையின் ஸ்பரிசம்தான் எவ்வளவு சுகம். மயக்கமா? தூக்கமா?
நினைவுகள்,கனவுகள்,எலாமே,தடம் புரண்டு தாலாட்டும் சுகத்தில், வேறு உலகில் சஞ்சரிக்கிறாள்? ஆஅனால்,

இந்த சுகம் கூட நீடிக்கவில்லை. திடீரென்று இரண்டு கால்களும் அசைக்கமுடியாமல், நரம்புகள்,சுருட்டிச் சுருட்டி இழுக்கிறது. பிராணவலிதான்.
இந்தவலிதான், மயக்கத்திலிருந்து, அவளை உலுக்கி எழுப்புகிறது. கையை ஊன்றி எழ முயற்சித்தால், முடியவில்லை. இப்பொழுது சில்லென்ற ஸ்பரிசம்
சுகிக்கவில்லை. உடல் முழுவதும் குளிரால் கிடு கிடுக்கிறது . சரீரம் வெக்கைக்கு பரிதாபமாய் ஏங்குகிறது.,
ஆ, திடீரென்று மேனி முழுவதும் இதென்ன வியர்வைக் குளியல்,,--
மார்பில் ஊசியாய்க் குத்துகிறது. தலையில் கடு கடுவெனக் கொட்டுகிறது.. இடுப்பில் ரம்பம் போட்டு அறுக்கிறது.. கால்கள் இரண்டும் "பிளவை"
நோய்வயப்பட்டாற்போல் பரிதவிக்கிறது.
தாகம், தாகம், என்ன ஆவலாதி இது, ,இதுதான் மரணதாகமா? ஒரு வாய்,------ ஒரே---- ஒரு ----------வாய், ஊஹூம் இல்லை,
இல்லை,ஒரு மிடறு, ,
ஊஹூம் ;ஒரே ஒரு முழுங்குத் தண்ணீர் கிடைத்தாலும் போதுமே,, வரட்சியில், தவிப்பில், எல்லாமே மறந்து போகிறது.

கிணு கிணு, வென்று அது என்ன அலறல். தொலைபேசியா? ஊஹூம் ,இல்லை, இல்லை,, காலன் தான் பாசக்கயிறோடு அழைக்கிறான்.
மீண்டும் நினைவுகள் நீர்க்குமிழிகளாய் வட்டமிடுகிறது.

எங்குமே புகைமண்டலம். வானத்து ஊர்தியிலிருந்து, அது என்ன அமுதசுரபியோடு அருகே வருவது யார்? தேவதூதனா?

பூவிலும் மென்மையாய் அவளைப்பற்றித் தூக்குவது யார்? ஆதுரத்துடன் அவளை அணைத்து, தேவாமிருதம் புகட்டுவது யார்?
ஆ? இது என்ன? தேவாமிருதம் சுடுகிறதே? ஆனாலும் என்ன இதம்? என்ன சுகம்? உறிஞ்சி ஒரே இழுப்பில் குடிக்கும் வேகமிருந்தாலும் , மெல்ல மெல்லவே
குடிக்கமுடிகிறது. உள்ளே சென்ற அமிர்தத்தின் சக்தியில் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவ,
மெல்லக் கண்களைத் திறந்த தாரிணி ஒரு அற்புதத்தைக் கண்டாள்.

அவள் அருமைக் கணவர் சுதாகரின் அரவணைப்பில் இருந்தாள்..தேவதூதனாக வந்தது கணவரா?
அமுத சுரபியில் தேவாமிர்தம் என அருந்தியது சூடு மைலோவா? எப்படித்தெரிந்தது? பலமுறை தொலைபேசியில் அழைத்தும்
எடுக்காததால் பதறியடித்து ஓடி வந்தேன்.,
'ஆருயிரே, என்னவரே', என மனசு சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கிறது, அத்துணை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் காட்டாற்று வெள்ளமாய் பீரிட்டெழுகிறது.
தன் இயலாமை, உடல் வலி, அத்தனையையும் கணவரின் நெஞ்சில் இறக்கியவளாய், , உடம்பு குலுங்க, விடைத்து விடைத்து அழுதாள் தாரிணி.
'என்னால் தாங்க முடியவில்லை. இந்த உபாதையை என்னால் தாங்கவே முடியவில்லையே,' என்று விம்மி அழுகிறாள்.
செத்துப்போகிறேன், நான் செத்துப் போகிறேன்., என்று தேம்பித் தேம்பி அழுகிறாள்... ஒரு ஆச்சர்யம்,
இவள் துடித்தழுதும் சுதாகர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே. அழுது ஓயட்டும் என்று காத்திருக்கிறாரா??
ஆ, அம்மாடி,, பளீரென்று அடிவயிற்றில் குண்டூசிக்குத்தல்,, சகலமும் சவுக்கடி பட்டவளாய்க் கண்விழித்தால்,, ஆ, என்ன இது,
அருமைக் கணவரை காணோம்,. மார்போடணைத்து மைலோ ஊட்டிய கணவரைக் காணோம்.?
அப்படியானால், நினைவு தப்பிய நிலையில், மயக்கத்திலேயே, நிகழ்வுப் படலத்தின் நிகழ்வுப் பனுவல் தானா, இத்தனை நேரமும் தான் அனுபவித்தது.?
கிணு கிணு' வென்று, அலறல். அசரீரியாய், நாராசமாய்,, சுனாதமாய், அபஸ்வரமாய் ஒலிக்கிறது.தொலை பேசிதான் என்றறிந்தும்
அவளால் அசையக் கூட முடியவில்லை, இன்னேரத்துக்கு அழைப்பவர் நிச்சயம் அவள் கணவர் தான்,,?
அலங்கோலமாய் தரையில் விழுந்து கிடந்த தாரிணியின் இமையோரம் நனைந்து வழிகிறது.

அசைக்கக்கூட தெம்பில்லாமல், இடுப்புப் பிரதேசத்தின் குருதிப் பிரவாகம்,
இப்பொழுது இதயத் துடிப்பையே மெதுவாக்குகிறது. பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்ப மதியம் ஆகலாம், மாலையும் ஆகலாம், .
தாரிணி காத்திருக்கிறாள்..மீண்டும் கிணு கிணு வென்று தொலைபேசி ஒலிக்கிறது.
தாரிணி காத்திருக்கிறாள்..கணவர் வருவார்.. அதுவரை நினைவு தப்பக் கூடாது. அழவேண்டும், அவரைப் பற்றிக் கொண்டு அழவேண்டும். .
மயக்கமும் விழிப்புமாய் தாரிணி காத்திருக்கிறாள்..

[ முற்றும்.]



[சிங்கா --,சிங்கப்பூரின் பல்கலைக்கழக இதழில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த கதை]

Friday, January 9, 2009

சிறுகதை----ஞயம் பட உரை - 2

சிறுகதை----ஞயம் பட உரை
எழுத்து----கமலாதேவிஅரவிந்தன்
----------------------------------------------------------------


நீங்கள், நீங்கள் மட்டுமே நவீனன், மேதை,என்றாலும் கூட அதை நீங்கள் சொல்லக்கூடாது.மற்றவர்கள்தான் கூறவேண்டும், என்றாலும் போகட்டும், ஜெயதேவ், ஊரில் உங்கள் தொழிலே படைப்பியல் தான்.ஆனால் இங்கு சிங்கப்பூரில் இலக்கியம்
பகுதினேரத்தொழில்தானேயொழிய, எங்களுக்கெல்லாம் வேறுவேலை இருக்கிறது. அப்படியும் பிழைப்புக்கு வேறு உத்தியோகம் பார்த்துக்கொண்டு இலக்கிய தாகத்துக்கு மட்டுமே, நாங்கள் இந்த யாகத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால்தான் , எங்கள் உத்தியோக பெருமிதத்தால்தான், உங்களைப்போன்றோரை இங்கு வரவழைக்கவே முடிந்தது. இருந்தாலும் ஓருண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அக்கரை மண்ணைவிட அரிய படைப்பாளர்கள் இங்கும் இருக்கிறார்கள்.அன்புக்கப்பால், எனும் வானொலினடகத்தை மட்டுமே கேட்டு, அதை அப்படியே மனதில் பதித்து நாடகம் எழுதக்கற்றுக்கொண்ட நாடகாசிரியரை,
இன்று விருது பெற்ற நாடகாசிரியராக உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்.தேடி' என்ற படைப்பின்மூலம் சிங்கை இலக்கியத்துக்கே புதிய பார்வையும் நவீன சிந்தனையும் கொடுத்த எழுத்தாளரையே உங்களுக்கு அடையாளம் காட்டமுடியும்.'' என்று க்ரிஷ்ணன்குட்டி பிடரிசிலிர்க்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த கட்டத்தில்,,
அடடா, இங்கேயா இருக்கிறீர்கள்? சாப்பிடவரவில்லையா? என்று சக ஏற்பாட்டாளர் தேடிவர, அப்போதைக்கு இருவரும் பிரிந்தனர். மதிய உணவுக்குப்பின்னர், ஏனோ அந்த எண்ணம் உதித்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர், வீட்டிற்குச் சென்று, தன்னுடைய படைப்புக்களைக் கொண்டு வந்தான்.

மதிய உணவுக்கு அடுத்த நிகழ்ச்சியில், முதல் படைப்பாளராக க்ரிஷ்னன்குட்டியின் ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது..கலந்துரையாடலில் சிங்கை நாடகவியலின் பார்வைகள்' பகுதியில் ' நிலைப்புச்சித்திரம் தலைப்பில் தன்னுடைய நான்குமொழி நாடகத்தின் ஒரு காட்சியை Spatioal Behaviour' நகர்வுகளும் தள உறவாடல் இயல்புகளும் எனும் பகுதியை க்ரிஷ்ணன்குட்டி நடித்தும் காட்டினான். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிக்கொண்டிருக்க ஜெயதேவ் புன்னகையோடு க்ரிஷ்ணன்குட்டியை நெருங்கி வந்தான்.
அன்புடன் கைகளை பற்றிக்கொண்டான். நீங்கள் எழுத்தாளர் என்று தெரியும், தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய் என நான்கு மொழியிலும் உங்கள் ஆற்றலைக் கண்டேன்.
ஆனால் இன்னும் பார்வை ஏன் விசாலமடையவில்லை? இவ்வளவு திறமை இருந்தும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைவிட்டு, வெளியே வரவே ஏன் மறுக்கிறீர்கள்? சமூகக்கதாசிரியர்கள் யாருமே நவீனப்படைப்புக்களை அதிகம் தெரிந்து கொள்வதில்லையா? அல்லது
தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? என்று ஜெயதேவ் கேட்டபோது வாய் விட்டு சிரிக்கத்தோன்றியது க்ரிஷ்ணன் குட்டிக்கு,.,

'சமூகக்கதாசிரியர்கள் என்றாலே சும்மா 'எனும் இவன் மன நோயைத்தீர்ப்பதெப்படி? தன்னைச்சுற்றிய நிகழ்வுகளையே தெரிந்து கொள்ளாதவன் சமுதாயத்தைச் ச்சீர்திருத்துவதா ?யதார்த்த இலக்கியமே தெரியாதவன் சமூகப் பிரக்ஞையை அலசுவதா?
தி, ஜானகிராமானையும், எம்.டி, வாசுதேவன் நாயரையும், சிங்கப்பூரின் மலாய்மொழி நாடகாசிரியர், நதிபுத்ராவையும், பெருமையோடு விளக்கிவிட்டு, ராமானுஜம் சான்றோரின் வெறியாட்டம் நாடகத்தின் நேர்க்கோட்டுக்குள் அடங்கிய முக்கோணக் கட்டமைப்பில்தான் வியந்த பகுதியையும் , காவாலம் பணிக்கரின் மத்தவிலாசபிரகசனம் நாடகத்தில் அரைவட்டக்கட்டமைப்பின் விசித்திரத்தையும், ஜி. சங்கரப்பிள்ளையின் மூதேவித்தொய்யம் நாடகத்தில் கயிறு என்ற கைப்பொருள் மூலம் மட்டுமே சடங்குக் கலையை குறியீட்டு உத்தியில் அறிமுகப்படுத்திய அழகியலில் மனம் பறி கொடுத்ததையும் பேசபேச ஜெயதேவ் ஸ்தம்பித்துப்போனான். கிரிஷ்ணன்குட்டி தொடர்ந்தான்.
ஜெயதேவ், சமூகக்கதை எழுதவும் கனிந்து குழைந்த மனது வேண்டும், வக்கிரம் என்ற சொல்லின் உக்கிரத்தையே வைத்துக்கொண்டு ஒரு நாவலே படைத்தவன் ஞான்,என்றாலும் சுய காழ்ப்புணர்வுக்கு இலக்கியத்தை அடகு வைப்பவன் இலக்கியவாதியல்ல, சொந்த மண்ணின் விழுமியங்களை , அதன் கலாச்சார உன்னதங்களோடு எழுதவும் கூட சமகாலப்ரக்ஞையும் சமுதாயவாழ்வைப்பற்றிய அக்கறையும் ப்ரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அனுகும் பார்வையும் வேண்டும். அது என்னிடம் பூரணமாக இருப்பதாக ஞான் நம்புகிறேன், யாருக்குமே புரியாததை பார்வையாளர்களிடையே ஊடகமாக நடத்திவிட்டு ஞான் தான் அறிவுஜீவி , இது புரியாதவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் என்று கமெண்ட் அடிக்கும் அறிவுஜீவித்தனம் எனக்கு வேண்டாம். இப்போதும் சொல்கிறேன் ஞான் ஒரு சமூகக் கதாசிரியன் என்பதில் எனக்கு பெருமிதமே தவிர குறையில்லை.'
கிரிஷ்ணன்குட்டி பேசி முடித்தும் ஜெயதேவ் பேசவில்லை. பிறகு சந்திப்போம், என்று மட்டுமே கூறிவிட்டு, விடைபெற்றுக்கொண்டான் ஏனோ திடீரென்று ஜெயதேவைப்பற்றி, மோகினியாட்ட ஆசிரியை பாருக்குட்டியின் ஆதங்கம் இப்போது நினைவுக்கு வந்தது.
ஆரம்ப காலத்தில் பாருக்குட்டியிடம் மாணவனாகப்பயிற்சி பெற்ற ஜெயதேவ், இன்று சினிமாவில் புகழ்பெற்றபிறகு, பாருக்குட்டி, தங்கச்சன் போன்றோரை கலைனிகழ்ச்சிகளில் சந்தித்தால் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகையை ஊதிக்
காட்டுவான் என்றும் அவர்களை தெரிந்ததாகவே காட்டிக்கொள்வதில்லை என்பதோடு குரு நமஸ்காரம், பெரியோரை மதித்தல் போன்ற செய்கைகள் எல்லாமே கேலிக்கூத்து, என்று பரிகாசம் செய்பவன் என்பதெல்லாம் ஞாபகம் வர க்ரிஷ்ணன் குட்டிக்கு ஜெயதேவின்
மனவியல் ஓரளவுக்கு புரிந்ததுபோலிருந்தது.

அடுத்த நாள் மானாட்டின் இறுதி நாள். அனைத்து படைப்பாளர்களின் பட்டறைகள், மட்டுமல்ல, மற்ற எல்லா நிகழ்ச்சிகளையுமே கிரிஷ்ணன்குட்டி கவனித்தான். ஜெயதேவ் நடத்திய பட்டறையில் பாதிப்பேருக்கு நெல்முனையளவுக்கு கூட புரியவில்லை.ஆனால் கிரிஷ்னன்குட்டி மூச்சுவிடவும் மறந்துபோய் ரசித்து லயித்தான். எப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞன் ஜெயதேவ் , திமிரும், அகந்தையும் மட்டுமே கவசமாயில்லாமல், அடக்கம் மட்டும் இவனுக்கிருந்தால் அழுக்குப்போகக் குளிப்பாட்டிய மாசற்ற மனிதனாய்
இவனை மதிக்க முடியும்.. ஒருமுறை திட்டினான் என்பதற்காக எதிராளியே அதை மறந்தால்கூட மறக்கத்தெரியாமல் பகைமை உணர்வோடு பாம்பாய் சீறுவதும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதாலேயே தான் ஒரு அறிவுஜீவி என ஆணவத்தோடு நடமாடுவது மான பண்புகள் மட்டும் இவனை விட்டு விலகினால் நிச்சயம் ஜெயதேவ் திறமையாளனே..

ஏனோ மானாடு முடிந்து கட்டுரையாளர்கள் திரும்பிப்போகும் தினத்தன்று, ஜெயதேவ் க்ரிஷ்ணன்குட்டிக்கு கை கூப்பியபோது க்ரிஷ்ணன்குட்டி நட்போடு அக்கரங்களைப் பற்றிக்கொண்டான். பெங்களூர் வந்தால் அவசியம் நீங்கள் எண்டெ இல்லம் வரவேண்டும், க்ரிஷ்ணன்குட்டி,' என்று ஜெயதேவ் விடுத்த அழைப்பில் மென்மை இருந்தது,கனிவு இருந்தது, ஏனோ க்ரிஷ்ணன் குட்டிக்கு ஜெயதேவை பிடித்துப்போயிற்று.


[முற்றும்]

சிறுகதை - - ஞயம் பட உரை

[ஞயம் பட உரை]

தமிழில் சிங்கை வானொலியில் ஒலிபரப்பாகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழக வெள்ளிவிழா சிறப்பிதழிலும் ,மலையாளத்தில் கேரளப்பல்கலையில் comparative story writing எனும் அங்கீகாரத்திலும் பிரசுரமான சிறுகதை,]

எழுத்து------------கமலாதேவிஅரவிந்தன்.
சிறுகதை ---'---- 'ஞயம் பட உரை''



கிருஷ்ணன்குட்டிக்குத் தலைவலித்தது. உடம்பு பிழிந்த துணியாய் துவண்டு கிடந்தது. கடந்த 15 நாட்களாக மானாட்டுக்கான ஏற்பாடுகளுக்கும், விழாவுக்கான பொறுப்புக்களுக்காகவும் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. மற்றவர்கள் பொறுப்பைப்பகிர்ந்து கொண்டாலும் , தலைமைப்பொறுப்பு மட்டும் எப்பொழுதுமே க் கிருஷ்ணன்குட்டியின் தலையில் தான் விழும். அதுதான் ஏற்பாட்டுக்கமிட்டியின் அன்புக்கட்டளை.

விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், , கிருஷ்ணன்குட்டி ஏற்றுக்கொண்டானேயொழிய இலக்கியம் என்றாலே மனசு கசந்து வழிந்தது
மானாடு என்றாலே பற்றிக்கொண்டு வருகிறது.முந்தைய சில ஆண்டுகளின் அனுபவத்தால், இந்த மானாட்டில் கட்டுரை படைக்கமுடியாது, என பிடிவாதமாய் மறுத்துவிட்டான்..எத்தனையோபேர் வற்புறுத்தியும் கிருஷ்ணன்குட்டி இந்த விஷயத்தில் மட்டும் மூர்க்கமாய் மறுத்துவிட்டான்.

பின் என்ன? போயும் போயும் சிங்கப்பூருக்குவரும் விருந்தாளிடகளிடமா சந்தனக்காப்பு?
கட்டுரையாளர்கள் எல்லோருமே வந்துவிட்டார்கள் என்ற சேதி அறிந்தும் கிருஷ்ணன்குட்டி அலட்டிக்கொள்ளவில்லை.. அதிலும் ஜெயதேவ் சிங்கை வந்திருக்கிறார் என்றவுடனேயே பலரும் காணச்சென்றிருந்தனர். ஜெயதேவ் முற்போக்கு எழுத்தாளன்.கேரளத்தில் பலரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான சினிமாக்கதாசிரியன்.. நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்குப்போனவன் என்றாலும் ஜெயதேவின்

சினிமா அண்மையில் விருது பெற்றிருந்தது. ஜெயதேவின் சினிமா ஸ்பெஷல் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் தூங்கிவழிந்து கொட்டாவியோடுதான் வெளியே போவார்கள். விஷயம் வேறொன்றுமில்லை. இருட்டும் மெளனமும் ஊமை நயனங்களும் திடீரெனக்கதானாயகியின் தற்கொலையுமாய் படம் முடியும்போது மிகப்பெரிய மேதைகளுக்கல்லாது, யாருக்குமே எதுவுமே புரியாது.

ஞான் சினிமா எடுப்பது பாமரர்களுக்காக அல்ல. அறிவுஜீவிகள் என்னைப்புரிந்து கொண்டால் போதும்' என்று பெருமையாய் பேட்டி கொடுக்கும் ஜெயதேவ்தான் இவ்வாண்டு மானாட்டின் முக்கிய ஆய்வாளன்..நாடாகாசிரியர்கள், நாவலாசிரியர்கள், நாட்டியமணிகள்,
இசையில் புதிய முத்திரை பதித்தவர்கள், சினிமாவில் சாதனை படைத்தோர்கள், எனப்பல துறையிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட முக்கியமானவர்களே இந்த மானாட்டில் தெறிவு செய்யப்பட்டதால், நிகழ்ச்சி சோடைபோகாது என கிருஷ்ணன்குட்டி நம்பினான்.
முதல்னாளே மானாட்டரங்கம் நிரம்பிவழிந்தது..வழக்கமான தொடக்கம். வழக்கமான, நிகழ்ச்சினிரல், என முதல் நாள் முடிந்தது.

மறு நாள் காலையில்தான், கிருஷ்ணன்குட்டிக்கு மற்ற ஆய்வாளர்களிம் கதைக்கவே முடிந்தது, எதிர்பார்த்த தகவல்தான், எத்தனை ஆண்டுகளாக இலக்கியபூசல்களையும் காழ்ப்புணர்வையும் வேதனையோடு தரிசித்தவன்,. .இந்த முறையும் சிரிப்புத்தான் வந்தது.
கதகளியில் சாதனை புரிந்த அப்புவாரியர், நவீன நாடகாசிரியர் பேபிகுட்டன்,மோகினியாட்டத்தின் பாருக்குட்டி, ஏகாங்க எழுத்தாளர் தங்கச்சன், என ஒவ்வொருவரும் மாறி மாறி, வாசித்த குற்றச்சாட்டுக்குப்பிறகு , ஜெயதேவ் உண்மையிலேயே சுவாரஸ்யமான கேரக்டரோ,என்று நினைக்கும் போதே, புன்முறுவல் தான் வந்தது.

பிறகுதான் கிருஷ்ணன்குட்டி கவனித்தான், நிகழ்ச்சிக்கு வந்த கட்டுரையாளர்கள் யாருடனும் ஜெயதேவ் பேசவேயில்லை. வலியச்சென்று பேசவும் யாரும் அணுகவுமில்லை.. வாயில் சூயிங்காமை அதக்கியவாறு, அழைத்துவந்த ஒரு பெண்ணோடு அமர்ந்து நிகழ்ச்சியை கவனித்தான். அந்தபெண் அவனோடு சேர்ந்து வாழும் பெண் என்றனர் சிலர். இல்லை இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே சேர்ந்து கொண்ட அவனுடைய சகா என்றனர் வேறு சிலர். வேடிக்கை என்னவென்றால் மதியம் உணவின்போது கூட ஒரு மூலையில் அமர்ந்து தன் தோழியோடு சாப்பிட்ட்டுக்கொண்டிருந்தானேயொழிய, தன் உலகிலிருது அவன் விடுபடவே இல்லை.
அப்படியும் கிரிஷ்ணன்குட்டிக்கு ஜெயதேவிடம் பேசத்தோன்றவில்லை. தோதுப்படவும் இல்லை. ஆயிரம் பொறுப்புக்களில் அமிழ்ந்து போயிருந்தான்.மூன்ராம் நாள் மானாட்டில் ஜெயதேவின் பங்களிப்பு. எதிர் பார்த்தாற்போலவே கூட்டம் நிரம்பிவழிந்தது. ஒருசிலரோ
என்னதான் வெட்டிமுறிக்கப்போகிறான் என்றுதான் பார்ப்போமே என வெளிப்படையாகவே முணுமுணுத்தனர். ஆனால். கணீரென்ற குரலில் தொடங்கிய உரையை லய பாவ தாளத்தோடு விஷய ஞானபூர்வமாய் மிக அற்புதமாய் முடித்து வைத்தவன் ஜெயதேவ் மட்டுமே. கரகோஷம் அரங்கில் அதிர்ந்தது..பலரும் ஆர்வத்தோடு, ஜெயதேவிடம் சென்று பேசுவதைக் காணமுடிந்தது.. பிறகட்டுரையாளர்களை அப்பொழுதும்
ஜெயதேவ் மதிக்கவில்லை.

தன்னைதேடிவந்து பேசுபவர்களிடம் மட்டுமே பேசினான். தன்னோடு வந்த மற்ற கட்டுரையாளர்கள் யாருக்குமே இல்லாத ரசிகர்கூட்டம் தனக்குமட்டுமே இருக்கிறது எனும் அகந்தையை அப்பட்டமாய் தன் செயல்களில் காட்டினான். மதிய உணவுக்காக அனைவரும் எழுந்தபோது ஜெயதேவ் க்ரிஷ்ணன்குட்டியை தேடிவந்தது ஆச்சர்யமாக இருந்தது. கிருஷ்ணன்குட்டி வியப்பைக்காட்டாமலே கைகூப்பியபோது ,அந்த மரியாதை கூட தெரியாதவனாய் ,நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

' ஞான் எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு ஆர்வமுள்ளவர்கள் சிங்கப்பூரிலிருப்பார்கள் என்று. பண்பலம் படைபலம், எல்லாமே இருந்தும் திறமையான படைப்பாளிகளை ஏன் உருவாக்கமுடியவில்லை? ஆண்டுக்கு ஒருமுறையாவது எங்களைப் போன்றோரை வரவழைத்து இங்கு workshop,பட்டறைகள், பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே? இத்தனைக்கும் செல்வம் கொழிக்கும் ஊராயிற்றே சிங்கப்பூர்'' ,
என்று ஜெயதேவ் அடுக்கிக் கொண்டேபோக க்ரிஷ்ணன்குட்டிக்கு ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் வழக்கமான எரிச்சலும் போட்டிபோட்டுக்கொண்டு வந்தது.
பேசிமுடிக்கட்டும் எனப்பொறுமையாய் காத்திருந்தான். ' ஊரில் உங்கள் தொழில் என்ன? என்று மிகப் பொறுமையாஇ கேட்டான் கிரிஷ்ணன்குட்டி.

'ஞான் டைரக்டர், ஞான் நவீனன், ஞான் புதுமைப்படைப்பாளன், சினிமா உலகில் இன்றைய எதிர்பார்ப்பே ஞான் தான் ' என ஜெயதேவ், ஞான், ஞான் என அழுத்தம் கொடுத்தம் கொடுத்த ஆணவத்தில் கிரிஷ்ணன்குட்டியின் பொறுமை பறிபோயிற்று.
[ தொடரும்]